அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைத் தொகுதியிலேயே முடக்க வைத்துவிட்டோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக வேட்பாளர்கள் நா.கார்த்திக் (சிங்காநல்லூர்), வ.ம.சண்முகசுந்தரம் (கோவை வடக்கு), பையா என்ற ஆர்.கிருஷ்ணன் (கவுண்டம்பாளையம்), காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் (கோவை தெற்கு) ஆகியோரை ஆதரித்து, துடியலூர் சந்திப்புப் பகுதியில், இன்று (ஏப். 1) நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என முதல்வர் பழனிசாமியும், அதிமுகவினரும் கூறுகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலிலேயே அதிமுகவின் கோட்டையில் நாம் ஓட்டை போட்டு விட்டோம். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் அதிமுகவை 'வாஷ் அவுட்' செய்யப் போகிறோம்.
கொங்கு மண்டலத்தில் எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி, கோபியில் செங்கோட்டையன், தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி, குமாரபாளையத்தில் தங்கமணி, உடுமலையில் ராதாகிருஷ்ணன், பவானியில் கருப்பணண் என பலம் வாய்ந்த அமைச்சர்கள் இருந்தும், மேற்கு மண்டலத்துக்கு அவர்கள் எதையும் செய்யவில்லை.
» சர்ச்சைப் பேச்சு; ஆ.ராசா 48 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ளத் தடை: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து இப்பகுதியின் விவசாயத் தொழிலையும், ஜிஎஸ்டி வரியை ஏற்றுக்கொண்டு தொழில் நிறுவனங்களையும் அழித்து வருகின்றனர். 8 வழிச்சாலை அமைப்பதாகக் கூறி விவசாயிகளின் நிம்மதியைக் கெடுத்து வருகின்றனர். நெசவு, விசைத்தறி, ஆடைத் தொழில், ஆடை ஏற்றுமதியும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் முற்றிலும் சிதைந்து போய்விட்டது. அதைக் கேள்வி கேட்க அதிமுக அரசால், அதிமுக அமைச்சர்களால் முடியவில்லை.
மறக்க முடியாத தண்டனை
கோவையின் சிறுவாணியின் குடிநீரைத் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. தன் சகோதரரையும், பினாமியையும் வைத்துக்கொண்டு, மொத்த கோவையையும் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்.
கோவை அருகே இளம்பெண்களைக் கடத்தி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய அதிமுகவினரைக் காப்பாற்றி பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளனர். இந்த மண்டலத்துக்கு நன்மை செய்வதாக, நடித்த நம்பிக்கை துரோகிகளுக்கு, மற்ற தொகுதிகளை விட, மேற்கு மண்டல தொகுதி மக்கள்தான் மறக்க முடியாத பெரிய தண்டனை தர வேண்டும்.
இந்த மேற்கு மண்டலத்துக்கு திமுக செய்த திட்டங்கள் ஏராளம். நான் உறுதியாகக் கூறுகிறேன், என் தலைமையில் அமைய உள்ள ஆட்சியிலும், இந்த மேற்கு மண்டலத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி, எல்லா வளர்ச்சியும், நிச்சயமாக, உறுதியாகச் செய்து தருவேன்.
எஸ்.பி.வேலுமணி, தேர்தல் குறித்து அறிவித்தவுடன் கோவை மட்டுமல்ல, 21 தொகுதிகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். ஆனால், தற்போது அவரது தொகுதியிலேயே முடக்க வைத்துள்ளோம். இதுதான் திமுக. மறக்க வேண்டாம். வேலுமணிக்குத் தற்போது தெரிந்து இருக்கும் திமுக என்னவென்று.
அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி, போலீஸாரை வைத்து திமுக தோழர்கள் மீது பொய் வழக்குப் போட்டு கொடுமைப்படுத்தியதை நான் மறக்க மாட்டேன். மே 2 வரை பொறுத்திருங்கள். அதன் பின்னர், நானே தலையிட்டு என்னென்ன செய்கிறேன் என்று பாருங்கள்.
நான் மிரட்டவில்லை, அச்சுறுத்தவில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். அவர்களது ஊழல் குறித்து ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளேன். ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன, நான் நடவடிக்கை எடுக்கிறேன். அடுத்த நாளே அனைவரும் சிறைக்குச் செல்வீர்கள். பணத்தை வைத்து, அதிகாரத்தை வைத்து தேர்தலை நடத்தலாம் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், வாக்களிக்கப் போவது மக்கள், அதை மறக்க வேண்டாம். 234 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறப் போகிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை.
சட்டப்படி நடவடிக்கை
ஒவ்வொரு அமைச்சர் மீதும் அவ்வளவு ஊழல் வழக்குகள் உள்ளன. இத்தகைய கிரிமினல் கேபினட்டுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது மட்டுமல்ல, இதற்குக் காரணமாக உள்ள அனைவர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். யார் விட்டாலும், நான் விட மாட்டேன்.
2 நாட்களுக்கு முன்பு தாராபுரத்தில் பேசிய பிரதமர் மோடி, தவறான கருத்துகளைக் கூறிச் சென்றார். அதற்கு நான் உடனடியாக பதில் அளித்தேன். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவையில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது கடைகளை மூட வலியறுத்தி உடைத்தனர். பாஜக புகுந்த நாடு உருப்படாது. தமிழகத்தில் திமுக ஆட்சி இருந்தபோது, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறிச் சென்றுள்ளார். ஆனால், இவர் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் நாட்டிலேயே அதிகமான அளவுக்குப் பாலியல் கொடுமைகளில் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.
பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலமே அப்படி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்துக்கு வந்து தமிழ்நாட்டைப் பற்றியும், திமுகவைப் பற்றியும் பேச என்ன தகுதி உள்ளது?
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. விசாரணை கமிஷன் அமைத்தும் கண்டுபிடிக்கவில்லை. திமுக ஆட்சியில் இது குறித்துக் கண்டறியப்படும். ஜெயலலிதா இறப்பில் மர்மம் உள்ளது என முதலில் கூறியவர் ஓ.பன்னீர்செல்வம். துணை முதல்வர் பதவி கிடைத்ததும் அதுகுறித்து அவர் பேசுவதில்லை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தற்போது மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலையை நேரில் சென்று பாருங்கள். முதல்வர் பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் அருகில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிக்கப் போவதாக பிரதமர் பேசுகின்றார்.
வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்குங்கள், நீட் தேர்வில் விலக்கு கொடுங்கள் என பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கேட்க முடியுமா?
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகள் கூறியுள்ளோம். அதேபோல், கோவைக்குத் தேவையான பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்துள்ளோம். அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. அதைச் சீரமைக்க, 10 ஆண்டுகால தொலைநோக்கு திட்டத்தின் கீழ் 7 உறுதிமொழிகளை அறிவித்துள்ளோம். அவை நிறைவேற்றப்படும்.
நம் திராவிட இயக்கம், நம் சுயமரியாதை , நம் தன்மானம் காப்பாற்றப்பட வேண்டும். தற்போது மத்திய பாஜக அரசு, எப்படியாவது தமிழகத்தில் மதவெறியையும், நீட், இந்தி மொழியைத் திணிக்க வேண்டும் என திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்.
நான் கூறுகிறேன், மோடியின் திட்டங்கள் தமிழகத்தில் பலிக்காது. நாம் இழந்துள்ள மாநில உரிமையை மீட்க வேண்டும். மாநில சுயாட்சியை நாம் பெற வேண்டும். நம் தமிழகத்தை மீட்க வேண்டும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்".
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago