புதுச்சேரியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 13 தொகுதிகளில் போட்டியிடும் திமுக: காங்கிரஸை எதிர்பார்க்காமல் பிரச்சாரம்

By செ. ஞானபிரகாஷ்

20 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் மீண்டும் 13 தொகுதிகளில் திமுக போட்டியிட்டும் சூழலில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் ஒருங்கிணைப்பு இல்லாததால் திமுகவினர், காங்கிரஸ் கையை எதிர்பார்க்காமல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

புதுச்சேரி சுதந்திரம் அடைந்து 1964-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதில் திமுக போட்டியிடவில்லை. 1969-ம் ஆண்டு முதல் திமுக போட்டியிட்டு வருகிறது.

1969-ல் 19 இடங்களிலும், 1974-ல் 26 இடங்களிலும், 1980-ல் 15 இடங்களிலும், 1985-ல் 22 இடங்களிலும், 1990-ல் 18 இடங்களிலும், 1991-ல் 19 இடங்களிலும், 1996-ல் 18 இடங்களிலும், 2001-ல் 13 இடங்களிலும், 2006-ல் 11 இடங்களிலும், 2011-ல் 10 இடங்களிலும், 2016-ல் 9 இடங்களிலும் திமுக போட்டியிட்டது. மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 13 தொகுதிகளில் திமுக தற்போது போட்டியிடுகிறது.

புதுச்சேரியில் திமுக இதுவரை நான்கு முறை ஆட்சியில் இருந்துள்ளது. கடந்த 1969, 1980, 1990 மற்றும் 1996-ல் திமுக ஆட்சியில் இருந்தது. கடந்த 2001 மற்றும் 2006 சட்டப்பேரவை தேர்தல்களில் திமுகவுக்கு 7 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். அத்துடன் பிரதான எதிர்க் கட்சியாகவும் திமுக திகழ்ந்தது.

இத்தகைய சூழலில் 2011சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பத்து இடங்களில் போட்டியிட்டது. அதில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது திமுகவின் பலம் இரண்டாகக் குறைந்தது. அதையடுத்து 2016-ல் கூடுதலாக இடம் பெறத் திமுக முனைப்புக் காட்டியது. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் ஒற்றை இலக்கமாக 9 இடங்களை மட்டும் பெற்று, அதில் இரு இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதன்பிறகு இடைத்தேர்தலில் ஒரு இடத்தை வென்று எண்ணிக்கை மூன்று ஆனது. இம்முறை 13 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இதில், வில்லியனூர், மங்களம், பாகூர், ராஜ்பவன், திருபுவனை ஆகிய 5 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸுடன் திமுக போட்டி போடுகிறது. அதேபோல் காலாப்பட்டு, நிரவி, நெல்லித்தோப்பு, மண்ணாடிப்பட்டு ஆகிய 4 தொகுதிகளில் பாஜகவுடனும், முதலியார்பேட்டை, உப்பளம், உருளையன்பேட்டை, காரைக்கால் தெற்கு ஆகிய 4 தொகுதிகளில் அதிமுகவுடனும் திமுக மோதுகிறது.

திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா வழக்கமாகத் தான் போட்டியிடும் உருளையன்பேட்டை தொகுதியிலிருந்து இடம்மாறி கிராமத் தொகுதியான வில்லியனூரில் போட்டியிடுகிறார். அதேபோல் வடக்கு மாநில அமைப்பாளர் சிவக்குமார், கடந்த முறை வெற்றியைத் தவற விட்ட ராஜ்பவனிலேயே இம்முறை களம் இறங்குகிறார். அதேபோல் காரைக்கால் அமைப்பாளர் நாஜிமும் குறைவான வாக்குகளில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த காரைக்கால் தெற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

மொத்தமுள்ள 13 தொகுதிகளில் காலாப்பட்டு, திருபுவனை, உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, நிரவி- திருப்பட்டினம், பாகூர் 7 தொகுதிகளில் புதிய வேட்பாளருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.

கடந்த முறை கூட்டணியில் இருந்த ஆளும் கட்சியான காங்கிரஸாரை விமர்சித்து வந்த திமுக மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் பல தொகுதிகளில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸுக்குச் சென்று விட்டதால் தற்போதுள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுடன் திமுகவினருக்கு ஒருங்கிணைப்பு உருவாகவில்லை.

இதனால் தொடர்ந்து பிரச்சாரத்தில் தனித்தே திமுக இயங்கி வருகிறது. வாக்குச் சேகரிப்பிலும் இரு கட்சிகளும் இதுவரை இணைந்து செல்லவில்லை. சில இடங்களில் காங்கிரஸாரைத் திமுகவினர் தவிர்ப்பதும் நடக்கிறது. திமுக தலைவரான ஸ்டாலின் வரும் ஏப்ரல் 3-ம் தேதி புதுச்சேரியில் குறைந்த நேரமே பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இந்த சூழலில் தன்கையே தனக்குதவி என இயங்கி வருகிறது புதுச்சேரி திமுக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்