திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது: ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

By பெ.ஜேம்ஸ்குமார்

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என, தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. பழனி தெரிவித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் கே.பழனி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பண்ருட்டி, மேட்டுப்பாளையம், வல்லக்கோட்டை, மாத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக இன்று (ஏப்.1) பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும் சிலம்பம் சுற்றியும் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர், "திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது. பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மாநிலம் தமிழகம்தான். தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது.

அதிமுக அரசு மகளிர் நலன் மேம்பட குடும்பத்திற்கு ஒரு வாஷிங் மெஷின், சூரிய ஒளி அடுப்பு இலவசம், பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச சிலிண்டர் உள்ளிட்ட பெண்களுக்காக உன்னதமான திட்டங்களை அறிவித்துள்ளது" எனத் தெரிவித்தார்.

அமமுக சார்பில் போட்டியிடும் மொளச்சூர் இரா.பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள சிறுமாங்காடு, எச்சூர், குண்ணம், கட்டவாக்கம், கோலவேடு, அயிமஞ்சேரி, தென்னேரி சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதியில் வாக்காளர்களைச் சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.

வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி வேட்பாளர் தணிகைவேல் குன்றத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி வேட்பாளர் தணிகைவேல் குன்றத்தூர் பேரூராட்சி பகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நேர்மையான ஆட்சியை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான அடிப்படை வசதிகள், தரமான கல்வி , மருத்துவம் மற்றும் குடிநீர் வழங்கல் , நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பாதாள சாக்கடை திட்டம் போன்ற திட்டங்கள் கொண்டுவரப்படும்" எனத் தெரிவித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE