களையிழந்த தேர்தல் திருவிழா: வெறிச்சோடிக் காணப்படும் கிராமங்கள்

By டி.செல்வகுமார்

கடந்த காலத்தைப் போல இல்லாமல் தற்போது தேர்தல் களம் களையிழந்து காணப்படுகிறது. கிராமம், நகரங்களில் கட்சிக் கொடிகள், தோரணம், வீட்டுச் சுவரில் வண்ண வண்ண சின்னங்கள், கொடிகளுடன் வலம் வரும் சிறுவர், சிறுமியர், எப்போதும் கேட்கும் வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் என எதையும் காண முடியவில்லை.

தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. கொளுத்தும் வெயிலிலும் தேசிய, மாநிலத் தலைவர்கள், வேட்பாளர்களின் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இருந்தாலும் கடந்த தேர்தல்களைப் போல மக்களால் தேர்தல் திருவிழா கொண்டாடப்படவில்லை என்றே கூறலாம். முன்பெல்லாம் சட்டப்பேரவைத் தேர்தல் என்றால் குக்கிராம், கிராமம், நகரம், பெருநகரம் என எல்லா இடங்களிலும் கட்சிகளின் கொடிகள், தோரணம் இருப்பதைக் காண முடிந்தது.

வீட்டு உரிமையாளர்கள் அனுமதி பெற்று சுவர்களில் கட்சிகளின் சின்னம் வண்ணமயமாக வரையப்பட்டு காண்போரின் கவனத்தை ஈர்க்கும். சிறுவர், சிறுமியர் கட்சிக் கொடிகளை ஏந்தி ஆங்காங்கே வலம் வந்தனர். ஆட்டோக்கள் கட்சிக் கொடி, வேட்பாளர் படத்துடன் பேனர், ஒலிபெருக்கியுடன்கூடிய பிரச்சார வாகனங்களாக அங்கும், இங்குமாக பறப்பதைக் கண்டோம். ஏதாவது ஒரு கட்சியின் பிரச்சார முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கும். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் தேர்தல் திருவிழாவை ஏதாவது ஒரு வகையில் காண முடிந்தது. தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. கடந்த காலத்தைப் போல டீக்கடைகளிலும் அரசியல் பேச்சு இல்லை. நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பூங்காக்களில் வேட்பாளர்கள் பற்றிய விமர்சனங்களையும் அவ்வளவாகக் கேட்க முடியவில்லை. பேருந்துகள், ரயில்கள், கோயில் போன்ற பொது இடங்களிலும் தேர்தல் பற்றி விவாதிக்காமல் செல்போனிலே மக்கள் மூழ்கியுள்ளனர்.

ஏன் இந்த நிலை என்று விசாரித்தால், தேர்தல் திருவிழாவைக் கொண்டாட மக்களுக்கு நேரமில்லை, விருப்பமும் இல்லை என்று தெரிகிறது. ஆன்-லைன் வகுப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களைக் கண்காணிப்பதில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர் குடும்பத் தலைவிகள். கரோனாவால் வருவாய் இழந்து தவிக்கும் குடும்பத் தலைவர்களோ தங்களது பிழைப்பைப் பார்ப்பதிலே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். வீட்டில் சற்று ஓய்வாக இருக்கும் நேரத்திலும் செல்போனுடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

தேர்தலில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும், காட்சி ஊடகத்தில் ஒளிபரப்பாகும் அரசியல் விவாதம், தேர்தல் பிரச்சாரம், கட்சிகளின் விளம்பரங்களைப் பார்ப்பதுடன், வீட்டுக்கு வந்து சேரும் துண்டுப் பிரசுரங்களையும் படிக்கிறார்கள். பல வேட்பாளர்களுக்கு மட்டுமல்லாமல், மக்களிடமும் பரவலாக கரோனா பாதிப்பு இருப்பதால், கூட்டத்துக்கு செல்வதை மக்கள் தவிர்க்கின்றனர்.

மாட்டு வண்டி, குதிரை வண்டி, ஆட்டோ ஓட்டுவது, டீக் கடையில் டீ போட்டுத் தருவது, மக்களுடன் அமர்ந்து டீ குடிப்பது, துணி துவைப்பது, ஓட்டலில் தோசை சுடுவது என வாக்காளர்களைக் கவர்வதற்காக வேட்பாளர்கள் செய்யும் வேலைகளை, நகைச்சுவையாகப் பார்க்கும் மக்கள் அதை சாதாரணமாக கடந்து செல்கின்றனர். செல்போன் மக்களை முடக்கிபோட்டு வைத்திருப்பதே இந்த நிலைக்கு காரணம் என்று அரசியல்வாதிகள் கூறினாலும், இத்தேர்தல் திருவிழா மக்களால் ஆர்வத்துடன் கொண்டாடவில்லை என்பதே நிதர்சனம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்