கரோனா தொற்று அதிகமாகவுள்ள மாவட்டங்களில் கோவிட் கேர் சென்டர்களை அதிகரிக்கவும், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தவும், தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிந்து சோதனை செய்து தொற்றுள்ளதா? என்பதைக் கண்டறிவதைத் தீவிரப்படுத்தவும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தத் தொற்று அதிவேகமாகவும், பன்மடங்கும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும், அதே வேளையில் பஞ்சாப், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா போன்ற மாநிலங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலும் நாள் ஒன்றுக்கு நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த நோயைப் பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பன்முக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏற்கெனவே தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இந்த நிலையை ஆய்வு செய்த பின்பும் மருத்துவ வல்லுநர் குழுவுடனும் நடந்த கூட்டத்திற்குப் பின்பும் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கீழ்க்கண்டவாறு பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டுள்ளன.
» பறக்கும் படை அதிகாரியை மிரட்டியதாக வழக்கு: அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்ஜாமீன் கோரி மனு
» விமான நிலையங்களில் முகக்கவசத்தை முறையாக அணியாத பயணிகளுக்கும் அபராதம்: டிஜிசிஏ உத்தரவு
கல்வி நிலையங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகள் உட்பட 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை மூடவும், இணையவழி வகுப்புகள் மட்டும் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பொறியியல், விவசாயம், கால்நடை, சட்டம் மற்றும் இதர படிப்புகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்கள் அனைவருக்கும் இணைய வழி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
இதேபோல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்கும் மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்கள் அனைவருக்கும் இணையவழி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகள் நடைபெறும் உள்ளரங்குகளின் மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு மிகாமல் அல்லது அதிகபட்சமாக 600 நபர்களுக்கு மிகாமல் நிலையான வழிமுறை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடித்து நிகழ்ச்சிகள் நடப்பது கண்காணிக்க வலியுறுத்தப்பட்டது.
பொது இடங்கள் மற்றும் கூட்டங்களில் முகக்கவசம் அணிவது (Mask Adherence), கைகளைக் கழுவுவது (Hand Washing), சமுக இடைவெளியைப் (Social Distancing) பின்பற்றுவது போன்ற கோவிட் தடுப்பு சார்ந்த பழக்கங்கள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வலியுறுத்தப்பட்டது.
மீறுவோர் மீது பொது சுகாதாரச் சட்டம் 1939 மற்றும் இச்சட்டத்தின் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் திருத்தங்களில் (Public Health Act, 1939 and Amendments) வகுக்கப்பட்டுள்ள தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
* மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல், நாளொன்றுக்கு சராசரியாக செய்யப்படும் RT-PCR மாதிரி பரிசோதனைகள் 52,000 என்ற எண்ணிக்கையிலிருந்து, 85,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 80 விழுக்காட்டிற்கும் அதிகமான RT-PCR பரிசோதனைகள் 69 அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்களிலும், மற்றவை 190 தனியார் ஆய்வகங்களிலும் பரிசோதனை செய்யப்படுகின்றன.
* தொற்று உறுதி செய்யப்பட்டவர்களோடு தொடர்பில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு (Contact Tracing) அவர்களுக்கும், நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளிலும் பரிசோதனைகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தலைமைச் செயலாளரின் 23.03.2021 அன்று வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தவாறு கோவிட் நோய்ப் பரவலை ஆராய்ந்து இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த செயலர்கள் உள்ளடங்கிய கோர் கமிட்டி (Core Committee) அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழு இன்று (30.03.2021) தலைமைச் செயலாளர் முன்பு தற்பொழுதுள்ள நிலை குறித்த விவரங்களை விளக்கக் காட்சி (Power Point Presentation) மூலம் சமர்ப்பித்தது. இந்தக் கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, முதன்மைச் செயலாளர், பொதுத் துறை, முதன்மைச் செயலாளர், பொதுப்பணித் துறை, முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், இணைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு, மாநில தடுப்பூசி அலுவலர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் தற்போதுள்ள நிலைமை பற்றிய விவரங்களை விரிவாக சமர்ப்பித்தார். அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி போன்ற மாவட்டங்களில் நோய்த் தொற்று நாள் ஒன்றுக்கு வார சராசரியை விட கூடுதலாகப் பதிவாகிறது.
குறிப்பாக, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து பரவிய நோய்த் தொற்று, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் ஆலயங்கள், கலாச்சாரம் நிகழ்ச்சிகளைச் சார்ந்த கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு நோய்த் தொற்றும், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பயிற்சி நிலையங்கள், குடும்ப கலாச்சார மற்றும் இதர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு வீடுகளில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்று, கோயம்புத்தூர், திருப்பூர் நகர்ப்புறங்களில் பணியிடங்களில் ஏற்பட்டு மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவுவது முக்கியக் காரணமாகத் தெரிய வருகிறது.
பல இடங்களில் ஏற்கெனவே வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறையால் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) பின்பற்றாததும் முக்கியமான காரணமாகத் தெரிகிறது. இதைத் தவிர, கூட்டம் நடக்கும் பல இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் (Mask Adherence) அணியாதது ஒரு முக்கியக் காரணமாகும். மார்ச் 16ஆம் தேதி முதல் இதுவரை 98,681 நபர்களிடம் 2.09 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்ட போதிலும், கூடுதல் எண்ணிக்கை பதிவாகும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி செயல்படுத்த வேண்டியது பற்றி விவாதிக்கப்பட்டது.
தற்போது கிராமப் பகுதிகளில் ஒரு தெருவில் 3 அல்லது 3-க்கும் மேற்பட்ட தொற்று பதிவானால் அந்தத் தெருவும், நகர்ப்புறங்களில் ஒரு குடியிருப்பில் 3 அல்லது 3-க்கும் மேற்பட்ட தொற்று ஏற்பட்டால், அந்தக் குடியிருப்புப் பகுதியும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக (Containment Zone) அறிவிக்கப்படுகிறது. இதுவரை 553 நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் கண்டறியப்பட்டு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கூட்டத்தில் மருத்துவக் கட்டமைப்பு, காய்ச்சல் கண்காணிப்பு, நோய் தடுப்பு நடவடிக்கை போன்றவற்றின் விவரங்களும் எடுத்துரைக்கப்பட்டன.
* மருத்துவக் கட்டமைப்பு (Health Infrastructure) உறுதிப்படுத்துதல்:
தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்கை அளிக்கும் மருத்துவ வசதிகள், கோவிட் மருத்துவமனைகள் (COVID Hospitals), கோவிட் சுகாதார மையங்கள் (COVID Health Centres) மற்றும் கோவிட் கவனிப்பு மையங்கள் ((COVID Care Centres)) என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
கோவிட் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் உள்ள 57,115 படுக்கைகள் உட்பட, 1,24,713 படுக்கைகள் உள்ளன. இது தவிர 7,706 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும், 6,517 வென்டிலேட்டர்களும் (Ventilators) உள்ளன. ஒவ்வொரு நாளும் சிகிச்சைக்கு வரும் கோவிட் தொற்று நோயாளர்கள் எண்ணிக்கை ஆய்வு செய்யப்படுகிறது. தொற்று உள்ளோர் எண்ணிக்கை குறைந்து வந்ததால், கோவிட் கவனிப்பு மையங்களில் இருந்த படுக்கைகள் பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இவற்றை மீண்டும் பயன்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு கோவிட் கவனிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* அரசு மருத்துவ நிலையங்களுக்குத் தேவைப்படும் மருந்துகள், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் கொள்முதல் செய்யப்படுகின்றன. 8.89 கோடி மூன்றடுக்கு முகக்கவசங்களும், 1.17 கோடி என்-95 சுவாசக் கவசங்களும், 71 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உடைகளும், 1.10 கோடி பரிசோதனைக் கருவிகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, கிருமிநாசினி திரவம், சோடியம் ஹைட்ரோகுளோரைட் கரைசல் மற்றும் பிளீச்சிங் பவுடர் போதுமான அளவில், அரசு மருத்துவ நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. டொசிலிசுமேப் 400 மி.கி. (Tocilizumab), ரெம்டைசிவிர் 100 மி.கி. (Remdesivir)), எனோக்ஸாபரின் 40 மி.கி. (Enoxaparin) போன்ற முக்கிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
* தேவையான பிராணவாயு ((Oxygen Requirement) உறுதிப்படுத்துதல்:
கடந்த ஜூன் 2020-இல் திரவ மருந்து, ஆக்ஸிஜன் கொள்திறன் 357 கிலோ லிட்டரிலிருந்து, தற்போது 778 கிலோ லிட்டர் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் காய்ச்சல் கிளினிக்குகள் (Fever Surveillance and Fever Clinics):- நோயாளிகளிடம் தொடக்க நிலையிலேயே கோவிட்-19 தொற்றைக் கண்டறிவது, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு முக்கியக் காரணியாக இருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த ஆய்வு, கவனிப்பு, காய்ச்சல் முகாம்கள் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக, கோவிட்-19 தொற்றால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க ஏதுவாக உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை ஈடுபடுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் இடங்கள், அந்தந்தப் பகுதிகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது. நோய்த்தொற்று பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்கள், அங்காடிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் நடமாடும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
* கோவிட்-19 தொற்றைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் குறுந்திட்டம் ((Micro Plan for the Prevention and Management of COVID-19):
தொற்று விகிதம் 2 முதல் 5 விழுக்காட்டிற்குள் பதிவாகிய பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், சேலம், திருவாரூர், திருப்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் கோவிட்-19 தொற்றைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் குறுந்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொற்று அதிகமாக இருந்த காலத்தில் கடைப்பிடித்தது போன்று, மாவட்டத்தில் உள்ள பல்வேறு பணியாளர்கள் அனைவருக்கும் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளைக் குறிப்பிட்டு ஒதுக்கி, செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* கோவிட் சார்ந்த பழக்கங்கள் மற்றும் தகவல், கல்வி, தொடர்பு (COVID Appropriate Behavior and Information, Education and Communication):
முகக்கவசம் அணிவதன் தேவை. சோப்பு போட்டுக் கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளி, வீட்டில் தனிமைப்படுத்தும் முறைகள் போன்ற கோவிட் சார்ந்த பழக்கங்களை குறும்படம் மற்றும் செய்திகள் மூலம் தொலைக்காட்சி மற்றும் பண்பலைகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விழித்திரு, தனித்திரு மற்றும் வீட்டிலேயே இரு என்ற வாசகம் மூலம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தினசரி அறிக்கைகள் வெளியிடப்பட்டன. பொதுமக்கள், தேவையான விவரங்கள் அறிய www. stopcorona.tn.gov என்னும் வலைதளம் ஏற்படுத்தப்பட்டது. சட்டத்தை மீறுபவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதம், வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது.
* கோவிட்-19 தடுப்பூசி (COVID-19 Vaccination):
கோவிட் 19 தடுப்பூசி திட்டம், தேசிய அளவில் பிரதமரால் 16.01.2021 அன்றும், தமிழ்நாட்டில் முதல்வரால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 16.01.2021 அன்றும் தொடங்கப்பட்டது. 26.08 லட்சம் நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2.65 லட்சம் நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என இதுவரை, 28.73 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் இம்மாத இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி போட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கோரப்பட்டுள்ளனர். தற்பொழுது வாரம் ஒன்றுக்கு 7.5 லட்சம் குப்பி கரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருவதால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி மருந்தை விரைந்து வழங்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.
* காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தொற்று விரைந்து பரவுவதை தடுத்தல் (Fever Surveillance and Preventing Super Spreader Events):
கோவிட்-19 தொற்று கூட்டாக ஏற்படுவதையும் இதற்கான காரணத்தையும் மாநில அரசு மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறது. தொற்று மற்றும் தொற்றுப் பரவல் நிலைமை கண்காணிக்கப்பட்டு, எந்த இடத்திலிருந்து இந்த நோய்த்தொற்று பரவுகிறது என்பது குறித்து தினசரி அறிக்கை பெறப்பட்டு, ஆய்வு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் விமான நிலையங்களில் பன்னாடுகளிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு, அவர்கள் விமான நிலையத்திலிருந்து வருவதற்கு முன்னரே RT-PCR தொற்று இல்லை என்ற சான்றுடன் வரவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமான நிலையக் கண்காணிப்பு மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டதோடு, மத்திய அரசின் வழிமுறைகளை முழுவதுமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் அங்காடிகளில் கோவிட் தொற்றைக் கண்டறிவதற்காக RT-PCR பரிசோதனைகள் செய்ய மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. இது தவிர நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைத் தொடர்பு கொள்ளும் பணியில் உள்ளவர்களுக்கு வழக்கமான பரிசோதனை செய்யப்படுகின்றன.
இக்கூட்டத்தில் கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
* RT-PCRபரிசோதனைகளை மேலும் தீவிரப்படுத்த (increased testing) முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக, இப்பரிசோதனை குறைவாகக் காணப்படும் சில நகரங்களிலும் மற்றும் சில மாவட்டங்கள் ஆகியவற்றில் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எடுக்க வேண்டும். குறிப்பாக, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இந்தப் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது.
மேலும், இதர மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே கணிசமான பிசிஆர் பரிசோதனைகள் உயர்த்திய பின்பும் நோய்த் தொற்று அதிகமான எண்ணிக்கை பதிவாகும் மாவட்டங்களான சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்னும் கூடுதலாகப் பரிசோதனைகள் அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது.
இதன் மூலமாக, நோய் உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் (Contacts) மற்றும் நோய் அறிகுறி காணப்படுபவர்களுக்கும் (Influenza Like Illness / Severe Acute Respiratory Illness) கட்டாயம் பரிசோதனை செய்வதை செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு செய்தால் குறுகிய காலத்தில் கோவிட் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பொது சுகாதார வல்லுநர்களின் கருத்தின்படி, இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றுவதினால் உறுதி செய்யப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இந்த முறை வழிவகுக்கிறது எனவும் இதனால் இவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க இது ஏதுவாக அமையும்.
* நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் அவர்களோடு உடனிருப்பவர்கள் கண்டறியப்பட்டு, தொற்று உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி (Isolation) அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
* தலைமைச் செயலாளரால், மாவட்ட அளவிலான இறப்புகளும், மருத்துவ நிலையங்களில் ஏற்படும் இறப்புகளும் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 7 நாட்களாக, சராசரியாக சென்னையில் ஏற்படும் இறப்பு விகிதம் 0.6 விழுக்காடாகவும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் முறையே 0.8 மற்றும் 0.5 விழுக்காடாகவும், மற்ற மாவட்டங்களில் 0.6 முதல் 0.1 விழுக்காடுக்கும் குறைவாக உள்ளது.
இறப்பு விகிதம் மட்டுமல்லாமல் இறப்பின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இதனை மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் கண்காணிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
* இதற்கு முன் இயங்கி வந்த கோவிட் மையங்களை (COVID Care Centers) முழுமையாக மீண்டும் செயல்பட வைக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
* தற்போது மருத்துவம், முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் வயது வரம்பு இன்றியும், 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மற்றும் 45 வயதிலிருந்து 59 வயதுவரை உள்ள இணை நோய் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஏப்.1 முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடலாம் என மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் 01.04.2021 முதல் 45 வயதிலிருந்த 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
* தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் அடுத்த சில நாட்களில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதை மாவட்ட ஆட்சியர்களும் சென்னை மாநகராட்சி ஆணையரும் உறுதி செய்ய வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.
மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கோவிட் தொற்றின் அளவு பலமடங்கு உயர்ந்தும், நமது மாநிலத்திலும் மற்றும் நமது அண்டை மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் நோய்த் தொற்று உயர்ந்து வரும் நிலையில், இதுகுறித்த அனைத்து சூழ்நிலைகளையும் கவனமாக அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்குழுக் கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், திருவிழாக்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் அதிகமாக நடைபெற்று வருவதைக் கருதும்போது, நோய்த்தொற்று தடுப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவது மிகவும் அவசியமானதாகிறது. எனவே, அனைத்து நிகழ்ச்சிகள், மதத் திருவிழாக்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மேற்கூறிய வழிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இக்குழு வலியுறுத்தி நோயின் பரவல் தன்மையை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றும், இதனைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் கோவிட் தடுப்பு சார்ந்த பழக்கங்களான (COVID Appropriate Behavior) முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளி போன்றவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை அனைவரும் உறுதி செய்யவேண்டும் என்று முறையீட்டையும் (Appeal) வைத்தது.
இந்நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை அனுமதி பெற்று நடத்துவோர் ((Organiser who obtain permission for such functions/events/activities), இதனைப் பின்பற்றுவதற்காக பொறுப்பேற்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணிதல் (Wearing Mask) மற்றும் கோவிட் தடுப்பு சார்ந்த பழக்கங்களைக் (COVID Appropriate Behavior) கடைப்பிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது''.
இவ்வாறு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago