புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் என்.ஆர்.காங்கிரஸ் முழுமையாகப் பாஜகவுடன் ஐக்கியமாகி விடும். ரங்கசாமி தனிமைப்படுத்தப்படுவார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (மார்ச்.30) அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
‘‘பிரதமர் வரும்போது கடைகள், வியாபார நிறுவனங்களை மூடுவது, மக்களை தடுத்து நிறுத்துவது என்பது மக்களுக்கு மிகப்பெரிய இடைஞ்சலை ஏற்படுத்தும். பிரதமர் வரும் நேரத்தில் மட்டும் பாதுகாப்புக் கருதி, சம்பந்தப்பட்ட தெருக்களில் பாதுகாப்பு ஏற்படுத்தலாமே ஒழிய, மற்ற பகுதிகளில் கடைகளை மூடுவது, வாகனங்கள் செல்வதைத் தடை செய்வது என்பது இந்த நிர்வாகத்தின் கோளாறு.
பாஜகவுடன் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் தனியாகத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்கிறார். அவர் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை என்றால் நடைபெறும் தேர்தலைப் புறக்கணிக்கத் தயார், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தயாரா என்று மக்கள் மத்தியில் கேள்வி கேட்கிறார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது எனத் தெளிவுபடுத்தியுள்ளனர். அதன் கூட்டணியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் மாநில அந்தஸ்து வேண்டும் என்று கூறுகின்றனர். மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ்- திமுக கட்சிகள் போராடியாவது மாநில அந்தஸ்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்போம். ஆனால் ரங்கசாமி மாநில அந்தஸ்துக்காக மோடி அரசை எதிர்த்துப் போராடத் தயாரா? ஏற்கெனவே சட்டப்பேரவை உள்ள டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர், அமைச்சர்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பறித்து, துணைநிலை ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இங்கும் முதல்வர், அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறித்துத் துணைநிலை ஆளுநரிடம் கொடுத்துவிடுவார்கள்.
என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவின் பி டீம். பாஜக, என்.ஆர் காங்கிரஸை ஆட்டிப்படைக்கும். அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. இப்போதும் பாஜகவின் கொள்கை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைக் கொடுக்கக்கூடாது என்பது. ஆனால் என்.ஆர் காங்கிரஸ் மாநில அந்தஸ்தைப் பெறுவோம் என்கின்றது. மத்தியில் உள்ள பாஜக ஆட்சி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைக் கொடுக்காது. இதனால் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரச்சாரத்துக்கு வந்துள்ள பிரதமரிடம் மாநில அந்தஸ்தை வலியுறுத்திப் பேசுவாரா? பிரதமர் மேடையில் அறிவிப்பாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
துணைநிலை ஆளுநரிடம் தொடர்ந்து நாங்கள் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததாகவும், அதனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்றும் ரங்கசாமி பேசி வருகிறார். அனைத்து மக்களுக்கும் தேவையான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பைகள்தான் தடுத்து நிறுத்தப்பட்டன. முதியோர் உதவித்தொகை, சென்டாக் பணம் முழுமையாகக் கொடுத்துள்ளோம். பாலங்கள், காமராஜர் மணி மண்டபம், 16 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளைத் திறந்துள்ளோம். புதுச்சேரி முழுவதும் 165 கோயில்களைப் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்துள்ளோம். அரசு ஊழியர்களின் ஊதியத்தை முழுமையாகக் கொடுத்துள்ளோம்.
சில துறைகளுக்கு நிதி ஒதுக்கினாலும், பதவிகளை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியவர் கிரண்பேடி. இது புதுச்சேரி மக்களுக்குத் தெரியும். புதுச்சேரி மாநில மக்களுக்கு இப்போது மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. பாஜக ஆட்சி புதுச்சேரியில் வந்தால் புதுச்சேரியின் தனித்தன்மை, கலாச்சாரம் போய்விடும். வெளி மாநிலத்தில் இருந்து வருவோர் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். பாஜக மதக்கலவரத்தையும், பிரிவினையையும் உருவாக்கும். மக்கள் மத்தியில் நிம்மதி இருக்காது. தனிமனிதச் சுதந்திரம் பறிக்கப்படும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்.
மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கின்ற காங்கிரஸ்- திமுக ஆட்சியால் மட்டும்தான் புதுச்சேரி மாநிலத்தின் தனித்தன்மையையும், மக்களின் உரிமையையும் காக்க முடியும். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் முழுமையாகப் பாஜகவுடன் ஐக்கியமாகி விடும். ரங்கசாமி தனிமைப்படுத்தப்படுவார். இந்த மிகப்பெரிய ஆபத்து புதுச்சேரிக்கு இருக்கிறது. ஆகவே மக்கள் அனைவரும் இதனைக் கருத்தில்கொண்டு புதுச்சேரியின் தனித்தன்மையைக் காக்கவும், மாநில அந்தஸ்து பெறவும், வளர்ச்சி பெறவும் காங்கிரஸ்- திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.’’
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago