பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை வருகிறாரோ அந்த அளவுக்கு பாஜகவுக்கு தேர்தலில் வாக்கு குறையப் போகிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 30), தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது, ஆரல்வாய்மொழியில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்து பேசியதாவது:
"முதல்வர் பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு இந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தபோது அவர் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். அதாவது, 'இந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் ஒரு அதிமுக எம்எல்ஏவைக் கூட தேர்ந்தெடுக்கவில்லை. அதனால்தான் திட்டங்கள் எல்லாம் இந்த மாவட்டத்திற்கு வரவில்லை' என்று பேசியிருக்கிறார்.
நினைத்துப் பாருங்கள். அவர் முதல்வர். அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்காக இந்த மாவட்டத்தையே புறக்கணித்தவரை நீங்கள் புறக்கணிக்க வேண்டாமா?
அவரே பிரச்சாரத்திற்கு வந்த போது வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதிமுகவைச் சேர்ந்த ஒருவரைக் கூட நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அதனால்தான் உங்களுக்கு வேண்டிய திட்டங்கள் கிடைக்கவில்லை என்று வாய் கூசாமல் சொல்லி இருக்கிறார் என்றால் அவரை முதல்வராக உட்கார வைக்கலாமா? வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்து இருக்கிறாரா? அந்தத் தொகுதிக்கு ஏதாவது செய்திருக்கிறாரா?
இதைவிட கேவலம் என்னவென்றால் அவரைத் தேர்ந்தெடுத்த எடப்பாடிக்கே எதுவும் செய்யவில்லை. நான் அந்த தொகுதிக்குச் சென்றிருந்தேன். நீங்கள் இப்போது அவர் பெயரைச் சொல்லாதீர்கள் என்று சொன்னது போல, நான் எடப்பாடிக்கு சென்றபோது எடப்பாடி பழனிசாமி என்று சொல்லாதீர்கள். அது எங்கள் ஊருக்கு கேவலம் என்று சொன்னார்கள். அது தான் அங்கு இருக்கும் நிலை.
அதுமட்டுமல்ல, இங்கு டெல்லி பிரதிநிதி ஒருவர் இருக்கிறார். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம். அவர் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தொழில்ரீதியாக ஒரு பார்ட்னராக இருக்கிறார். அவருக்கு குமரி முதல் கம்போடியா வரை சொத்து இருக்கிறது. ஆனால், குமரி மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறாரா?
ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர், சசிகலாவால் டெல்லி பிரதிநிதி பொறுப்பை ஏற்றவர். சசிகலாவால் உயர்த்தி வைக்கப்பட்டவர், இப்போது பழனிசாமியிடம் உட்கார்ந்திருக்கிறார். இந்த தேர்தலுக்கு பிறகு அங்கேயும் துரோகம் செய்துவிட்டு பாஜகவில் சேரப்போகிறார். அது உறுதி. அது நடக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள்.
அவரோடு கூடவே இருந்த அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி கிருஷ்ணகுமார், அவரைப் பற்றி ஆடியோ வெளியிட்டாரா? இல்லையா? அவர் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றினாரா? இல்லையா?
கடந்த முறை நான் தக்கலைக்கு வந்தபோது, மத்திய அரசு ஒரு புதிய பன்னாட்டு மாற்று முனையத்தை அமைக்கப் போகிறது. அதனால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நம்முடைய பேராயர்கள் வந்து என்னிடத்தில் முறையிட்டார்கள்.
'திமுக ஆட்சியில் நிச்சயமாக உறுதியாக அதற்கு நாங்கள் அனுமதி தர மாட்டோம்' என்று அப்போது உறுதி அளித்துவிட்டுச் சென்றேன்.
அதற்குப்பிறகு குமரிக்கு முதல்வர் வந்தார். அவர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். அவ்வாறு எந்த சரக்கு பெட்டக முனையத்தையும் அமைக்க போவதில்லை. எனவே, ஸ்டாலின் பொய் சொல்லி ஏமாற்றுகிறார். யாரும் நம்பாதீர்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் கையில் ஆதாரம் இருக்கிறது. நான் கருணாநிதியின் மகன். எதையும் புள்ளி விவரத்தோடுதான் பேசுவேன்.
20.02.2021 அன்றைக்கு பத்திரிகையில் அதிகாரப்பூர்வமான மத்திய அரசின் துறைமுகத்துறை விளம்பரத்தில் தெளிவாக இருக்கிறது. அதாவது மார்ச் 20-க்குள் யாராவது விண்ணப்பிக்க வேண்டி இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசின் மூலமாக விளம்பரம் தரப்பட்டிருக்கிறது.
இது கூடத் தெரியாத ஒரு முதல்வர் இருக்கிறார். எனவே, அப்படிப்பட்ட முதல்வர் ஆளத்தகுதி உள்ளவரா? என்பதை நீங்கள்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவர் இப்போது இல்லை என்று சொல்வார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு மாற்றி சொல்வார். ஆனால், நான் உறுதியாகச் சொல்கிறேன், நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். இதற்கு அனுமதி தர மாட்டோம். இது உறுதி.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன். அவரை பொன். ராதாகிருஷ்ணன் என்று சொல்லக்கூடாது; பொய் ராதாகிருஷ்ணன் என்றுதான் சொல்ல வேண்டும்.
2014 இல் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். மத்தியில் அமைச்சராக இருந்தார். ஆனால், இந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இம்மி அளவு நன்மை செய்திருக்கிறாரா?
2014 இல் நின்று வென்று எம்.பி ஆகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். அதற்கு பிறகு 2019 இல் நின்று தோற்றுப் போனார். இப்போதும் நிற்கிறார். இப்போது தோற்றுத்தான் போகப்போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், 2014 இல் தேர்தலில் நின்றபோது வாய்க்கு வந்தபடியெல்லாம் உறுதிமொழி கொடுத்தார். ஆனால், எந்த உறுதிமொழியையாவது அவர் நிறைவேற்றியிருக்கிறாரா?
அவர் சொன்ன உறுதிமொழிகளில் சிலவற்றைச் சொல்கிறேன். குளச்சலில் வர்த்தக துறைமுகம், கன்னியாகுமரி ஸ்மார்ட் சிட்டியாக ஆக்கப்படும், தொழில் பூங்கா உருவாக்கப்படும், கடல்சார் நவீன விளையாட்டுடன் கூடிய சாய் சப் சென்டர், கன்னியாகுமரியில் விமான நிலையம், இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம், சித்த மருத்துவ பல்கலைக்கழகம், விவசாயக் கல்லூரி, புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை, அனைத்து கடற்கரை மற்றும் மலையோர இடங்களும் சுற்றுலா மையமாகும், ராஜாக்கமங்கலம் தெக்குறிச்சி கடற்கரை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும், கல்லுக்கூட்டம் நீர்சுனை சுற்றுலாத் தலமாகும், பெருஞ்சாணி அணையில் படகு சவாரி, முட்டம் சங்குத்துறை மற்றும் சொத்தவிளை கடற்கரை மேம்படுத்தப்படும், அதிநவீன அறிவியல் மையம், அருங்காட்சியகம், மணக்குடி காயலில் நவீன படகு போக்குவரத்து தடுப்பணைகள். இதில் ஒன்றையாவது நிறைவேற்றி காட்டியிருக்கிறாரா?
அவர் மத்திய அமைச்சராக ஐந்து வருடம் இருந்திருக்கிறார். அவருடைய கட்சிதான் கடந்த ஏழு வருடங்கள் ஆட்சி பொறுப்பில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் பாஜக தலைவர்களில் ஒரு முக்கிய தலைவராக இருக்கிறார். ஆனால், இந்த மாவட்டத்திற்கு என்ன செய்திருக்கிறார்? அதனால், அவருக்கு வாக்களிப்பது 'சுத்த வேஸ்ட்'.
அதேபோல, இன்றைக்கு பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவ்வாறு வந்து வழக்கம்போல பொய் சொல்லிவிட்டுப் போகப்போகிறார். அவர் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வருகிறாரோ அந்த அளவுக்கு பாஜகவுக்கு வாக்குக் குறையப் போகிறது. அதுதான் நடக்கப்போகிறது.
அவர் ஒவ்வொரு முறை வரும்போதும் தமிழக மீனவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை உருவாக்கி கொடுத்துவிட்டதாகப் பேசிவிட்டுச் செல்கிறார். இதுதான் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று சொல்வார்கள் அல்லவா, அப்படிப்பட்ட பொய்.
மோடி ஒரு காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது, இந்தியாவில் ஆண்மையுள்ள பிரதமர் இல்லை என்று நம்முடைய மன்மோகன் சிங்-கை கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி பேசினார். அதனால்தான் அண்டை நாடு நம்மை சீண்டி பார்க்கிறது என்று குறை சொன்னார்
அவ்வாறு குறை சொன்னார் அல்லவா, அவர் 2014 இல் பிரதமராக பொறுப்புக்கு வந்தார். அவர் பொறுப்புக்கு வந்த பிறகு மீனவர்களைக் காப்பதற்காக கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார். 2014 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி இந்தியா - இலங்கை அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். 7 வருடம் ஆகிவிட்டது. அதில் இதுவரைக்கும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இன்றைக்கும் தொடர்ந்து மீனவர்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. மீனவர்களை மிரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளைப் பறிப்பது, இவ்வாறு அராஜகங்கள் அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. பாஜக அரசோ, மோடியோ இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அதனைத் தட்டிக் கேட்கப் போவதுமில்லை.
எனவே, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு மீனவர்கள் உரிமையை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுப்போம்.
அதேபோல, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு இந்த ஆட்சி, இந்த ஆட்சியை ஆட்டி வைத்திருக்கும் பாஜக ஆட்சி பல கொடுமைகளைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறது. அதில் முக்கியமாக, குடியுரிமைத் திருத்தச் சட்டம் - சிஏஏ. இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அப்போது நிறைவேற்றிய போது அதை எதிர்த்து திமுக மற்றும் மற்ற கட்சிகள் அனைத்தும் வன்மையாகக் கண்டித்து எதிர்த்தது.
ஆனால் மாநிலங்களவையில் அதிமுகவைச் சேர்ந்த எம்.பி-க்களும், அதேபோல, அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் சேர்ந்து அந்த சட்டத்தை ஆதரித்து ஓட்டுப்போட்ட காரணத்தினால் அந்த சட்டம் அமலுக்கு வந்தது.
இப்போது அந்த சட்டத்தை எதிர்ப்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். இது ஒரு பச்சைத் துரோகம். மக்களை ஏமாற்றுவதற்காக அவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த சட்டம் சிறுபான்மைச் சமுதாயத்தைக் கொச்சைப்படுத்தும் முயற்சியில் இருக்கிறது. இதற்கு அதிமுக தலையாட்டுகிறது. அதனால், இந்தச் சட்டத்தை தொடக்கத்தில் இருந்தே திமுக கடுமையாக எதிர்த்தது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கும் மக்களிடத்தில் நேரடியாக வீடு, வீடாக சென்று நானே கையெழுத்து வாங்கினேன். இரண்டு கோடி கையெழுத்துக்களை வாங்கி டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவரிடம் கொடுத்தோம்.
சட்டப்பேரவையில் இதை எதிர்த்துப் பேசினோம். ஆனால், இதனால் எந்த தீமையும் இல்லை என்று வாதிட்டார் பழனிசாமி. நாங்கள் என்னென்ன தீமை இருக்கிறது? என்ன கொடுமை இருக்கிறது? இதனால் சிறுபான்மை சமுதாயத்தினர் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? என்பதைத் தெளிவாக சட்டப்பேரவையில் எடுத்து பேசினோம். ஆனால், அது பற்றி எந்தக் கவலையும் அவர் படவில்லை. அவ்வாறு சொன்னவர்கள் இப்போது இந்தச் சட்டத்தை எதிர்ப்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இதைத்தான் இங்கு இருக்கும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜக வரப்போவதில்லை. அவர்கள் தமிழ்நாட்டுக்குள் நுழையவே முடியாது. இது திராவிட மண்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago