இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெறப்போவதில்லை. அது உறுதி. அவர்கள் வாஷ்அவுட். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி நடைபெற்றதோ அப்படி தான் நடக்கப்போகிறது அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் குட்டிக்கரணம் போட்டாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறப்போவதில்லை என அணைக்கட்டுப் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதிபடப் பேசினார்.
வேலூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக துரைமுருகன் (காட்பாடி), ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), அமலு விஜயன் (குடியாத்தம்), சீதராமன் (கே.வி.குப்பம்) ஆகியோரை ஆதரித்து ஊசூர் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்-29)தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''ஏதோ தேர்தலுக்காக மட்டும் வரும் ஸ்டாலினாக நான் வரவில்லை, எப்பொழுதும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன்தான் இந்த ஸ்டாலின் என்ற உரிமையோடு உங்களிடம் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
அணைக்கட்டுப் பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டதா? ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் தரத்தை உயர்த்த ஏதாவது செய்தார்களா? அணைக்கட்டு தொகுதியில் மலைப்பாங்கான கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்களா? காவனூரில் ரயில்வே பாலம் அமைத்துத் தந்தார்களா? கே.வி.குப்பம் தொகுதியில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. கூட்டுக் குடிநீர் திட்டத்தின் முதல் திட்டத்தை நம்முடைய திமுக அரசுதான் நிறைவேற்றியது. அதன் இரண்டாம் திட்டத்தை பத்து ஆண்டுகளாக அதிமுக அரசு செய்ததா?
கால்நடை மருத்துவமனை கேட்ட மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? இந்த மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள், இங்கிருந்து பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? குடியாத்தம் தொகுதியில் தீப்பெட்டி தொழில் உற்பத்தியைக் கவனித்தார்களா?
அணைக்கட்டு தொகுதியில் நெல்சேமிப்பு மண்டி, பழத்தொழிற்சாலை, குளிர்சாதன சேமிப்பு கிடங்கு மக்கள் கேட்டார்கள். செய்தார்களா? குடியாத்தம் நெசவாளர்கள் செழிக்க ஒரு தொழில்துறை பூங்காவாவது அமைக்கப்பட்டதா? காட்பாடியில் அரசு கலைக்கல்லூரி கோரிக்கை நிறைவேறப்பட்டதா? இவ்வாறு நீங்கள் இல்லை… இல்லை என்று சொல்லும் சூழ்நிலையை உருவாக்கிய இந்த ஆட்சியை நீடிக்க விடலாமா? இந்த ஆட்சிக்கு பதில் சொல்ல வேண்டுமா? வேண்டாமா?
நான் 200 இடங்களுக்கு குறையாமல் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையாகச் சொன்னேன். இப்போது கருத்துக்கணிப்புகளில் நான் சொன்னதை விட அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
இப்போது பதினைந்து நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். அந்தப் பயணத்தில் மக்களைச் சந்திக்கும்போது அவர்கள் உணர்ச்சியை, எழுச்சியை, ஆர்வத்தை, ஆரவாரத்தைப் பார்க்கும்போது உறுதியாக 234 இடங்களிலும் நாம் தான் - நம்முடைய அணி தான் வெற்றி பெறப் போகிறது. இதை நிறைவேற்றும் பொறுப்பு உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
பாஜக வாஷ்அவுட் ஆகும்...
இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெறப்போவதில்லை. அது உறுதி. அவர்கள் வாஷ் அவுட். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி நடைபெற்றதோ அப்படிதான் நடக்கப்போகிறது அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் குட்டிக்கரணம் போட்டாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறப்போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் அதிமுகவும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது. ஒரு அதிமுக எம்எல்ஏ வெற்றி பெற்றாலும் அது பாஜக எம்எல்ஏதான். அதற்கு உதாரணம் நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றோம். ஒரே ஒரு இடத்தில் தேனியில் மட்டும் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றார். அவர் இப்போது பாஜக எம்.பி.யாகத்தான் செயல்படுகிறார். அவருடைய லெட்டர் பேடில் அவருடைய கட்சித் தலைவர் படம் இல்லை. மோடியின் படத்தைப் போட்டு வைத்திருக்கிறார். அதனால்தான் 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெற வேண்டும் என்று சொல்கிறேன். அதில் நீங்கள் விழிப்போடு இருக்கவேண்டும்.
இப்போது பழனிசாமி ஊர் ஊராகச் சென்று பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். தேர்தலில் யார் வேண்டுமானாலும் பிரச்சாரத்தை நடத்தட்டும். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு முதல்வர் பொய் பேசக்கூடாது.
ஆனால், முதல்வர் அப்பட்டமாக, அபாண்டமாக பொய் சொல்கிறார். அவர் படிப்படியாக வளர்ந்து வந்தேன் என்று சொல்கிறார். அவர் படிப்படியாகவா வந்தார்?
‘நான் உழைத்து உழைத்து வந்தேன். ஸ்டாலின் உழைத்து உழைத்து வந்தாரா?’ என்று கேட்கிறார். நான் உழைத்து வந்தேன் என்பது இங்கிருக்கும் நம்முடைய தொண்டர்களை கேட்டால் சொல்வார்கள். தலைவர் கருணாநிதி, 13 வயதில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது திணிக்கப்படும் இந்தியை எதிர்த்து, “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே“ என்று போராடியவர்.
அவருடைய மகன் இந்த ஸ்டாலின் 14 வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கி, அந்த வட்டத்தில் பகுதிப் பிரதிநிதியாக கட்சித் தோழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்டக் கழகப் பிரதிநிதியாக பொறுப்பேற்று, கழகத்தில் பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக, படிப்படியாக வளர்ந்து இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்று, பின்னால் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக, பொருளாளராக, தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்த நேரத்தில் திமுக செயல் தலைவராக, அவருடைய மறைவிற்கு பிறகு உங்களைப் போன்ற தொண்டர்கள் நிரம்பியிருக்கும் திமுக தலைவராக இன்றைக்கு நான் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் இன்றைக்கு முதல்வராக உட்கார்ந்திருக்கும் பழனிசாமி, 'நாங்கள் பல விருதுகளை வாங்கி விட்டோம், எங்கள் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது, பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்' என்று பேசியிருக்கிறார்.
இதுவா பெண்களுக்கான பாதுகாப்பான ஆட்சி?
அதாவது பழனிசாமி ஆட்சியில் பாலாறும் - தேனாறும் ஓடுவதுபோல, அதற்கென்று சில ஊடகங்களும் நடுநிலையோடு நாங்கள் செய்தி போடுகிறோம் என்று சொல்லி - அந்தப் போர்வையில் இந்தச் செய்திகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு சட்டம் - ஒழுங்கு நிலை என்ன? மக்கள் அதை மறந்துவிடுவார்களா?
உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் நான் நினைவுப்படுத்துகிறேன். தடைசெய்யப்பட்ட பொருளான குட்கா இன்னும் விற்பனையில் இருக்கிறதே… அதுகுறித்து இன்னும் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறதே… அதனை மக்கள் மறந்துவிடுவார்களா?
தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றீர்களே… அதனை நீங்கள் மறந்து விட்டீர்களா? 2011-இல் பரமக்குடி துப்பாக்கிச் சூடு, 2012-இல் கூடங்குளம் துப்பாக்கிச் சூடு. இதையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்களா?
சாத்தான்குளத்தில் அப்பா – மகனை போலீஸ் லாக்கப்பில் அடித்து கொன்றீர்களே… அதனை மக்கள் மறந்து விட்டார்களா? பட்டப்பகலில் செயின் பறிப்பு, ஏடிஎம் கொள்ளை. அதை எல்லாம் மக்கள் மறந்து விடுவார்களா?
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. ‘அடிக்காதீங்க அண்ணா’ என்று அந்தப் பெண்கள் கதறி அழுதார்களே… மறந்துவிட்டீர்களா? பொள்ளாச்சி போல எத்தனை கொடூரங்கள் இந்த ஆட்சியில் அரங்கேறியிருக்கிறது?
2017இல் ஏழு வயது குழந்தை ஹாசினியைச் சிதைத்துக் கொன்றது யாருடைய ஆட்சியில்? 2018-ஆம் ஆண்டு சென்னையில் 7 வயதுக் குழந்தையை 22 கொடுமைக்கார்கள் சிதைத்தார்களே… அது நினைவில் இருக்கிறதா? இல்லையா?
அருப்புக்கோட்டையில் பேராசிரியை நிர்மலா தேவி என்பவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய புகார்களை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்களா? பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிஜிபி அந்தஸ்தில் இருந்தவர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றியது யார்? விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூரில் அதிமுக நிர்வாகி ஒருவர் ஜெயஸ்ரீ என்ற சிறுமியை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினாரே? அவருக்கு அந்தக் கொடுமையை செய்ய யார் தைரியம் கொடுத்தது?
பெரியார் சிலையை அவமதிப்பது, பாஜகவினர் கோயம்புத்தூரில் நடத்திய கலவரம், அந்த கலவரத்தின் முடிவில் பிரியாணி கடையைச் சூறையாடினார்களே… தேடப்படும் ரவுடிகள் பாஜகவில் சேர்த்தபோது காவல்துறையால் என்ன நடவடிக்கை எடுக்க முடிந்தது?
அந்த பாஜகவைத் தூக்கி சுமந்து கொண்டிருக்கிறீர்களே… இதுவா பெண்களுக்கான பாதுகாப்பான ஆட்சி? இதை சொல்வதற்கு உங்கள் நா கூசவில்லையா?
இந்த அதிமுக ஆட்சியில் நடந்த கொலை - கொள்ளை - பாலியல் துன்புறுத்தல்கள் - ரவுடியிசங்களை பட்டியல் போட தொடங்கினால், நேரம் போதாது. அவ்வளவு பெரிய பட்டியல் இருக்கிறது.
தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, சமஸ்கிருதத்தை திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியைத் தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.
இது திராவிட மண். தந்தை பெரியார் பிறந்த மண் – பேரறிஞர் அண்ணா பிறந்த மண் - கலைஞர் வாழ்ந்த மண், இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது''.
இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago