தேங்காய் எண்ணெய் உற்பத்தி, விவசாயம், காளைக்கு பெயர் பெற்ற காங்கயம் தொகுதியில் திமுக - அதிமுக இடையே கடும் போட்டி

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, வெள்ளகோவில் தொகுதி கலைக்கப்பட்டு காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. விவசாயம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலை, தேங்காய் பருப்பு உலர் களம், கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு ஆகியவை முக்கியத் தொழில்கள். கீழ்பவானி பாசனம், பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனம் (பிஏபி) வாயிலாக விவசாயம் நடைபெறுகிறது. காங்கயத்தில் அதிகளவில் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் உற்பத்தி ஆலைகள், அரிசி உற்பத்தி ஆலைகள், தேங்காய் பருப்பு உலர்களங்கள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள், சென்னிமலை பகுதியில் கைத்தறி கூடங்களும், கைத்தறி கூட்டுறவுச் சங்கங்களும் உள்ளன. காங்கயம் வட்டத்தில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர், பெருந்துறை வட்டம் (பகுதி) முருங்கத்தொழுவு, புதுப்பாளையம், நஞ்சைப் பாலத்தொழுவு, புஞ்சைப் பாலத்தொழுவு, கொடுமணல், ஒரத்துப்பாளையம் எல்லை கிராமம், எட்டக்காம்பாளையம், பசுவபட்டி, குப்பிச்சிபாளையம் கிராமங்கள், முகாசி பிடாரியூர், ஒட்டப்பாறை, சென்னிமலை ஆகிய பகுதிகள் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள் இடம்பெறுகின்றன.

எதிர்பார்ப்புகளும், வேதனைகளும்

தமிழக அரசு விதித்துள்ள 5 சதவீத வாட், 1 சதவீத செஸ் வரியால் தேங்காய் பருப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழில் நசிவடைந்துள்ளது. இத்தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில் நலிவை தடுக்கவும், அதனை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதி கிராம பொருளாதாரத்தின் மிக முக்கிய அம்சமாக விளங்கும் கிராம சந்தைகளில், தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். காங்கயத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, புறவழிச்சாலை அல்லது சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். நகரின் விரிவாக்கப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகத்தை தரம் உயர்த்த வேண்டும்.

நாட்டு மாடு இனங்களை பாதுகாக்கும் வகையில், காங்கயம் பகுதியில் காங்கயம் கால்நடைகளுக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். காங்கயம் நகரில் காளை சிலை அமைக்க வேண்டும், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் படியூர், சிவன்மலை, கணபதிபாளையம், கீரனூர், பாலசமுத்திரம்புதூர், கம்மரெட்டிபுதூர் ஆகிய கிராமங்களை இணைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

கெயில் எரிவாயு குழாய் பிரச்சினை, ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை விளைநிலங்கள் வழியாக செயல்படுத்துவதை கைவிட்டு, சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும். ஏற்கெனவே போடப்பட்டுள்ள உயர் மின்கோபுரத் திட்டத்துக்கு உரிய இழப்பீடும், மாத வாடகையும் வழங்க வேண்டும். வட்டமலைகரை ஓடை அணை பாசனத்தை நம்பி, ஏராளமான விவசாயிகள் உள்ளனர். பிஏபியில் இருந்து அணைக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும். கடந்த 35 ஆண்டுகளாக வட்டமலைக்கரை ஓடை அணை பாலைவனமாக உள்ளது. சுமார் 659 ஏக்கர் பரப்பில் 6043 ஏக்கர் பாசனமும், நிலத்தடி நீர் மூலமாக 10 ஆயிரம் ஏக்கரும் பயன்பெறும். தண்ணீர் கொண்டுவர வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியும் நிறைவேற்றப்படாதது விவசாயிகளின் வேதனையாக உள்ளது.

பலம் - பலவீனம்

மிகவும் அமைதியானவர், அடக்கமானவர் எந்த பணியாக இருந்தாலும் தனி முத்திரை பதிக்கக்கூடியவர் என ஸ்டாலினால் பாராட்டப்பட்டவர் என்றபோதிலும், தொகுதிக்குள்ளும் இதே பெயரை எடுத்துள்ளார் திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன். கடந்த முறை திருப்பூர் வடக்கு தொகுதியிலும், அதற்கு முன்பு மடத்துக்குளம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார்.

வெள்ளகோவில் சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்தபோது, 1996, 2001, 2006 ஆகிய முறை தொடர்ந்து வெற்றி பெற்று அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது சொந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை எப்படியும் வெற்றி பெற வேண்டுமென தொகுதிக்குள் தீவிர முனைப்பு காட்டுகிறார். கரோனா காலத்தில் நிவாரணப் பொருட்களை வீடு, வீடாக வழங்கியது, பொங்கலுக்கு சேலை, வேஷ்டி வழங்கியது என தொகுதிக்குள் முதல் ஆளாக பணிகளை செய்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம், ஆலாம்பாளையம் ஊராட்சியின் தலைவராக 20 ஆண்டுகளாக இருந்தவர். மதிமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர். பழகுவதற்கு எளிமையானவர் என பெயர் எடுத்துள்ளார். பொள்ளாச்சி ஜெயராமன் அணியில் முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்..என்.நடராஜன், உடுமலை ராதாகிருஷ்ணன் அணியில் வெங்கு (எ) மணிமாறன் என அதிமுக அணிகளாக பிரிந்திருப்பதும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசின் செயல்பாடும் தொகுதி மக்களிடையே திருப்தி அளிக்காதது அதிமுகவுக்கு பலவீனங்களாக கூறப்படுகின்றன. இதனால் காங்கயத்தில் வெற்றி பெற திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதாக தொகுதி முழுவதும் பேச்சு அடிபடுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்