புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை நம்பகத்தன்மை அற்றது என, கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தேர்தல் பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
காரைக்காலில் இன்று (மார்ச் 29) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிட்டது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு தவறான கொள்கைகளால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸ் ஆட்சியின்போது பல்வேறு நிறுவனங்களைக் கொண்டு வந்தோம். அவற்றை பாஜக விற்றுக் கொண்டிருக்கிறது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் வளர்ச்சி பெற்றுள்ளன.
கரோனா பாதிப்பைச் சரியான திட்டமிடலுடன் கட்டுப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது. இதுபோன்ற ஏராளமான துன்பங்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால், தமது ஆட்சியில் நாடு செழிப்பாக, மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல மோடி பேசிவருவது வேடிக்கையாக உள்ளது. வங்கதேச விடுதலைக்காக சத்தியாகிரகம் செய்தேன் என மோடி பேசியுள்ளார். இதுபோன்ற நடிப்புகளுக்காக அவருக்கு ஆஸ்கர் விருது அளிக்கலாம்,
தற்போது தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கொள்கைகளை விளக்கியோ, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தோ பாஜக வாக்கு கேட்கவில்லை. மாறாக, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற நிறுவனங்களின் மூலம் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை மிரட்டிப் பணியவைத்து, சேர்த்து, கட்சியை வளர்த்து வருகிறார்கள். ஜனநாயகமே இல்லாத நிலையை பாஜக உருவாக்கிவிட்டது. இதற்கான சரியான பாடத்தை 5 மாநிலத் தேர்தல்கள் மூலம் பாஜகவுக்கு மக்கள் கற்பிப்பார்கள்.
கடந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியைப் போலவே தற்போது தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்கள் வெற்றியை அளிப்பார்கள். புதுச்சேரியில் நிச்சயம் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பாஜக தேர்தல் அறிக்கை நம்பகத்தன்மை அற்றதாக உள்ளது. பாஜக கூட்டணியில் என்.ரங்கசாமி சேரும்போது ஆர்வமாக இருந்தார். தற்போது அவ்வாறு இல்லை. அந்தக் கூட்டணியும் நம்பிக்கையானதாக இல்லை".
இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.
புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம், மகாராஷ்டிர அமைச்சர் நிதின் ராவத், முன்னாள் மத்திய அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜூ, புதுச்சேரி காங்கிரஸ் துணைத் தலைவர் பி.கே.தேவதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago