மடத்துக்குளத்தில் மீண்டும் மகுடம் சூட திமுக தீவிரம்: வெற்றிக்கனியை பறிக்கும் முனைப்பில் மல்லுக்கட்டும் அதிமுக

By எம்.நாகராஜன்

தொகுதி மறுசீரமைப்பின்போது 2011-ம் ஆண்டு உடுமலை தாலுகாவில் உள்ள பெரும்பாலான கிராமங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது மடத்துக்குளம் சட்டப்பேரவை தொகுதி.

மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, மைவாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, கொழுமம், உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லப்பம்பாளையம், புங்கமுத்தூர், உடுக்கம்பாளையம், பெரிய பாப்பனூத்து, ஆண்டிகவுண்டனூர், தும்பலப்பட்டி, வடபூதிநத்தம், ஆர்.வேலூர், பெரிய வாளவாடி, சர்க்கார்புதூர், தின்னபட்டி, தேவனூர்புதூர்,ராவணாபுரம், எரிசனம்பட்டி, கொடுங்கியம், ஜிலோபநாய்க்கன்பாளையம், அரசூர், ரெட்டிபாளையம், சின்னவாளவாடி, தெற்கு பூதிநத்தம், போகிக்கவுண்டந்தாசர்பட்டி, எலையமுத்தூர், குருவப்பநாய்க்கனூர், ஆலம்பாளையம், பள்ளப்பாளையம், மொடக்குப்பட்டி, தீபாலப்பட்டி, கிருஷ்ணாபுரம், வலயபாளையம், ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர்,வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, கல்லாபுரம், கணபதிபாளையம், பூலாங்கிணர், அந்தியூர், ராகல்பாவி, கண்ணம்மநாய்க்கனூர், குரல்குட்டை, போடிபட்டி ஆகிய ஊராட்சிகள், குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முக்கூடல் ஜல்லிப்பட்டி, வெனசப்பட்டி ஆகிய ஊராட்சிகள், மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், சங்கராமநல்லூர், தளி ஆகிய பேரூராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

இத்தொகுதியில்தான் அமராவதி, திருமூர்த்தி அணைகள் உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கீழ் அமராவதி, உடுமலை ஆகிய வனச்சரகங்களும், 18 மலைவாழ் குடியிருப்புகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டு அணைகள் மூலமாக சுமார் 5 லட்சம் ஏக்கர்பாசனம் பெறுகிறது, கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள பல லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. விவசாயம் தான் பிரதான தொழில். தென்னை, கரும்பு, நெல், மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் முதல் சர்க்கரை ஆலையான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் எரிசாராய ஆலை இந்த தொகுதியில்தான் உள்ளன.

31 சதவீதம் கொங்கு வேளாளர்கள், 23 சதவீதம் தாழ்த்தப்பட்டோர், 11 சதவீதம்நாயக்கர், 27 சதவீதம் இதர வகுப்பினர், 8 சதவீதம் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அடங்கிய சிறுபான்மையினர் உள்ளனர்.

எதிர்பார்ப்புகள்

திருமூர்த்தி, அமராவதி அணைகளை ஆண்டுதோறும் தூர்வார வேண்டும், அப்பர் அமராவதி அணை, ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். பழமை வாய்ந்த அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்ய வேண்டும். மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கூட்டாற்றில் பாலம் கட்ட வேண்டும். பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தீம் பார்க் அமைக்க வேண்டும், பல்துறை விளையாட்டுப்பூங்கா ஏற்படுத்த வேண்டும். வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனைசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன.

வெற்றி யாருக்கு?

இந்த தொகுதியில் ஏற்கெனவே ஒருமுறை வெற்றி பெற்ற சி.சண்முகவேலு, இந்த முறை அமமுக சார்பில் போட்டியிடுகிறார். ஆழ்ந்த அரசியல் அனுபவம் கொண்ட இவருக்கு, களப்பணியாற்ற அனுபவம் வாய்ந்த நபர்கள் இல்லை. இதனால், எந்த அளவுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பது தெரியாது.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் சி.மகேந்திரன், அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு இந்த தொகுதி புதியது. எனினும் மக்களிடையே இவருக்கு அறிமுகம் உள்ளது. மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின்பு ஒன்றிய, பேரூர், கிளை அளவில் இவருக்கு சாதகமான நபர்களுக்கு பொறுப்புகள் வழங்கியுள்ளார் என்பது, பதவி இழந்தவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. புதிய நிர்வாகிகளை கொண்டு தேர்தலை சந்திப்பது எந்த அளவு வெற்றியை தரும் என்பதைகாலம்தான் பதில் சொல்லும்.

திமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் இவர் மீது குறை சொல்லும் அளவில் எதுவும் இல்லை. எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு என்ன திட்டங்களை செயல்படுத்த முடியுமோ அதை செய்துள்ளதாகக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். திமுக ஆட்சியைக் கைப்பற்றும் என்ற கருத்து கணிப்பு முடிவுகளை நம்பி, தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட மடத்துக்குளம் தொகுதியில் 2011-ம் ஆண்டு அப்போது அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.சண்முகவேலும், 2016-ல் திமுக சார்பில் போட்டியிட்ட இரா.ஜெயராமகிருஷ்ணனும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்