இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திமுக-வுக்கு ஆதரவு

புதுவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் எச்.ஹைருல்லா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் காதர் மொய்தீன் தலைமையில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தபின் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் செயல்படும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ளது.

எங்களுக்கு வேலூர் தொகுதியை திமுக தலைவர் கருணாநிதி ஒதுக்கித் தந்துள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் எங்கள் நிர்வாகிகள் திமுகவோடு இணைந்து தேர்தல் பணிபுரிந்து வருகின்றனர்.

அதே வகையில் புதுச்சேரியிலும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக எங்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி காங்கிரஸை ஆதரிப்பதாக கூறியுள்ளார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் பிரிவுகள் எதுவும் கிடையாது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து புதுச்சேரியில் வேட்பாளர் நாஜிமுக்கு ஆதரவு தந்துள்ளோம்.

மேலும் மத்திய அமைச்சரின் கருத்து, தேர்தலின்போது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் கண்களுக்கு சிறுபான்மையினர் தெரிவார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று ஹைருல்லா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE