தமிழக மின்திட்டங்கள் தொடர்பான வினாக்களுக்கு முதல்வர் பதில் அளிப்பாரா?- ராமதாஸ்

By செய்திப்பிரிவு

தமிழக மின்திட்டங்கள் தொடர்பான வினாக்களுக்கு முதலமைச்சர் பதில் அளிப்பாரா இல்லை மின்திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் முழுமையாக நீக்கப்படும் என்று கடந்த மே 27-ம் தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆனால், மின்வெட்டு நீக்கப்பட்டதற்கு மூன்றாவது நாளே சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 4 முதல் 6 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுபவர்’ என முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே பொருந்தும் வார்த்தைகளால் என்னை விமர்சித்து, அதை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மின்வெட்டைப் போக்க முதல்வர் ஜெயலலிதா அல்லும் பகலும் பாடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறுகிறார்.

இது உண்மை என்றால், தமிழக மின்திட்டங்கள் தொடர்பான கீழ்க்கண்ட வினாக்களுக்கு முதலமைச்சர் பதில் அளிப்பாரா?

1) அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் கடந்த 3 ஆண்டுகளில் 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்க அனல் மின் திட்டத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் முடிவடைய வேண்டிய இத்திட்டப்பணிகள், 2 ஆண்டுகள் தாமதமாக 2017 செப்டம்பரில் தான் நிறைவடையும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்திற்கு காரணம் யார்?

2) 1320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல மின் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் 26.07.2013 அன்றும், 1320 மெகாவாட் உடன்குடி மின்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் அதற்கு அடுத்த வாரமும் பிரிக்கப்பட்ட நிலையில், அதன்பின் 11 மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த மின் திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படாதது ஏன்?

3) கடந்த 29.03.2012 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை படித்த ஜெயலலிதா, எண்ணூரில் இப்போதுள்ள பழைய 450 மெகாவாட் மின்நிலையத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் 660 மெகாவாட் எண்ணூர் மாற்று அனல் மின் நிலையம் அமைக்கப்படும்; அதில் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி தொடங்கும் என அறிவித்தார். அதன்பின் 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அத்திட்டத்திற்காக சாத்தியக் கூறு அறிக்கை தயாரித்ததைத் தவிர வேறு எந்த பணியும் நடக்கவில்லையே ஏன்?

4) தூத்துக்குடியில் என்.எல்.சி. நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கும் மின்திட்டத்தின் இரு அலகுகளில் முறையே 2013 ஆம் ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் உற்பத்தி தொடங்கும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், கெடு முடிந்து ஓராண்டாகியும் இதுவரை அங்கு மின் உற்பத்தி தொடங்காதது ஏன்?

5) அடுத்த ஆண்டு இறுதியில் மின்னுற்பத்தி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட 1600 மெகாவாட் திறன் கொண்ட இராமநாதபுரம் உப்பூர் மின்திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கூட இதுவரைக் கோரப்படாதது ஏன்?

6) மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபின் முதன்முறையாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தித் திறனை பெருக்க திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார். இதை நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவும், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

7) செய்யூரில் 4000 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டத்தை கடந்த 2006 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. அதை செயல்படுத்த முந்தைய தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முதலமைச்சர் ஜெயலலிதா குற்றஞ்சாற்றியிருந்தார். ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன?

8) 2013 முதல் 2015 வரை ஆண்டுக்கு 1000 மெகாவாட் மீதம் 3 ஆண்டுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சூரிய ஒளி மின்சாரக் கொள்கையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதுவரை ஒரு மெகாவாட்டாவது சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்பட்டிருக்கிறதா?

9) தமிழகம் விரைவில் மின்மிகை மாநிலமாக மாறும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால், மின்வெட்டை சமாளிக்க அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3330 மெகாவாட் மின்சாரத்தை மற்ற மாநிலங்களில் இருந்து வாங்க நீண்ட கால ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக நத்தம் விஸ்வநாதன் கூறுகிறார். தமிழகம் மின்மிகை மாநிலமாகும் என முதல்வர் கூறுவதை நம்புவதா? அல்லது அடுத்த 15 ஆண்டுகளுக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என அவரது நம்பிக்கைக்குரிய நத்தம் விஸ்வநாதன் கூறுவதை நம்புவதா?

மின்வெட்டு தொடர்பாக தமிழக மக்கள் சார்பில் நான் எழுப்பியுள்ள வினாக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவரது விளக்கம் அமைந்தால் மின்வெட்டு பற்றி விமர்சிப்பதை நான் நிறுத்திக் கொள்கிறேன்.

இல்லாவிட்டால், மின்திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க முதலமைச்சர் ஜெயலலிதா தயாரா?". இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்