''தமிழகம் இனி தட்ஷிண பிரதேஷ் என்று பெயர் மாற்றம்; சென்னை தனி யூனியன் பிரதேசம்; இதுதான் பாஜகவின் திட்டம்''- திருமாவளவன்

By செய்திப்பிரிவு

அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்க ஆர்எஸ்எஸ்ஸும், பாஜகவும் முயல்கின்றன. தமிழகத்தை தட்ஷிண பிரதேஷ் என்று பெயர் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளனர். சென்னையைத் தனி யூனியன் பிரதேசமாக மாற்றி தங்கள் ஆளுமையின் கீழ் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

சேலத்தில் நடக்கும் மதச்சார்பற்ற கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:

“சனாதனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கும் ஒரு கருத்தியல் போர் இந்தத் தேர்தல். இரண்டு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நடக்கிற சராசரியான தேர்தலாக இதைத் தமிழக மக்கள் பார்த்துவிட வேண்டாம். தமிழ்நாடு ஆபத்தான ஒரு சூழலில் சிக்கியுள்ளது. மிகவும் மோசமான ஆபத்தான கொள்கை கொண்டவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் ஒரு ஆபத்து சூழ்ந்துள்ளது. இந்த நிலையில்தான் முற்போக்கு ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள் இணைந்து களத்தில் நிற்கிறோம்.

தேர்தல் நேரத்தில் உருவான கூட்டணி அல்ல இந்தக் கூட்டணி. 5 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் இந்த ஆபத்தையெல்லாம் முன்கூட்டியே கணித்து இந்தக் கூட்டணியைக் கட்டி வழிநடத்திக் கொண்டிருக்கிறார். எதிரணியில் நிற்பவர்கள் கொள்கை அடிப்படையில் நிற்பவர்கள் அல்ல.

பேரம் பேசி சந்தர்ப்பவாத அடிப்படையில் அவர்கள் கூட்டணியை அமைத்துள்ளார்கள். தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம், வாசல் கதவைத் திறந்து வைப்போம், யாரிடமும் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் என்ற நிலையில் இருந்ததல்ல இந்தக் கூட்டணி.

ஒரே நோக்கம்தான். ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமல்ல. பிற்போக்கு சக்திகள் இம்மண்ணை கைப்பற்றிவிடக் கூடாது. சாதி வெறி, மதவெறி கூட்டத்தால் பாழ்பட்டுவிடக் கூடாது, சிதைந்துவிடக் கூடாது என்பதற்காக ஸ்டாலினால் உருவாக்கப்பட்டதுதான் இந்த மதச்சார்பற்ற கூட்டணி.

நீட், வேளாண் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை ஏன் சிஏஏ என்கிற கொடிய சட்டத்தை எதிர்பதாக இருந்தாலும் தமிழகத்தைக் காக்க ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்து போராடி இருக்கிறோம். தமிழகத்தின் எதிர்காலத்தை, பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த மதச்சார்பற்ற கூட்டணி.

கருணாநிதி இல்லை, ஜெயலலிதா இல்லை. இந்த நேரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்றிவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் மதவெறியைத் தூண்டிவிட்டவர்கள், அதன் மூலம் ஆட்சியைப் பிடித்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் எதுவும் செய்ய முடியவில்லை.

அதிமுக, பாமக முதுகில் பாஜக சவாரி செய்து தமிழகம், புதுவையில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்கிற கனவில் இருக்கிறது. அதிமுக வலிமையாக இல்லை. நீர்த்துப்போய்விட்டது. பாமக விலை போய்விட்டது. தமிழக மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பாஜக, திமுக கூட்டணிக்குத்தான் நேரடிப் போட்டி.

ஆபத்து நம்மைச் சூழ்ந்துள்ளது. தமிழ் மொழிக்கு ஆபத்து. தமிழகத்துக்கு ஆபத்து. அவர்கள் தேர்தல் அறிக்கையிலே பாருங்கள். தமிழகத்தை தட்ஷிண பிரதேஷ் என்று பெயர் சூட்டப்போவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த நாட்டின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட அண்ணா எடுத்த முயற்சி, சங்கரலிங்கனார் எடுத்த முயற்சி அவரது போராட்டம் என எல்லாம் வரலாறாக உள்ளது.

இவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்க ஆர்எஸ்எஸ்ஸும், பாஜகவும் முயல்கின்றன. தமிழகத்தை தட்ஷிண பிரதேஷ் என்று பெயர் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளனர். சென்னையைத் தனி யூனியன் பிரதேசமாக மாற்றி தங்கள் ஆளுமையின் கீழ் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். இவற்றையெல்லாம் மாற்றக்கூடிய சக்தி திமுக தலைமையிலான கூட்டணிக்கு உண்டு”.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்