நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு கரோனா தடுப்பூசி: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் முதற்கட்டமாக அனைத்து சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பொதுமக்களுக்கிடையே அவசியம் தடுப்பூசி தேவைப்படும் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட நாள்பட்ட இணை நோய்கள் (சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, ஆஸ்துமா போன்றவை) உள்ளவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

பொதுவாக 45 வயதுக்குமேல் இதுபோன்ற தொற்றா நோய்கள் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று தாக்கும்போது தீவிர நோயாக மாறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள நேரிடுகிறது. தற்போது, அண்டை மாநிலங்களிலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா பெருகி வருவதால், இணை நோய் உள்ளவர்கள் அவசியம் உடனடியாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.

இத்தடுப்பூசியானது ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மற்றும் அம்மா மினிகிளினிக் ஆகிய மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகிறது. மேலும் ராமநாதபுரத்தில் தனியார் மருத்துவமனைகளான ஆரோக்யா மருத்துவமனை, ஆசி மருத்துவமனை, ராஜன்ஸ் மருத்துவமனை, கனகமணி மருத்துவமனை, பிரேமா மருத்துவமனை, வேல் மருத்துவமனை மற்றும் ஷிபான் மருத்துவமனை ஆகிய ஏழு தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தி கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் கட்டாயமாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றைக் கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், தேவையில்லாது கூட்டம் கூடுவதைத் தவிர்த்தல், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுதல் போன்ற சுகாதார முறைகளை ஒவ்வொரு தனி மனிதரும், நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE