அதிகார சண்டைதான் காங்கிரஸ் ஆட்சியின் சாதனை: என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தாக்கு

By அ.முன்னடியான்

அதிகார சண்டைதான் காங்கிரஸ் ஆட்சியின் சாதனை என என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரச்சாரத்தின்போது பேசினார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைந்து களம் காண்கின்றன. இதில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் ரங்கசாமி இன்று(மார்ச் 26) மாலை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அங்குள்ள புத்துளாய் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ரங்கசாமி, கோயில் முன்பு பிரச்சாரம் செய்து பேசியதாவது,

‘‘புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டு காலம் நடைபெற்ற ஒரு மோசமான காங்கிரஸ் ஆட்சியின் அவலநிலையை போக்கி, சிறந்த நல்லாட்சியை அமைந்திடுவதற்கான ஒரு தேர்தல் இது. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் எவ்வளவு ஒரு மோசமான நிலை இருந்தது என்று நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

2016-ல் நல்லாட்சி கொடுப்பார்கள் என்று காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால், நடந்து முடிந்த ஆட்சி எப்படி இருந்தது என்று மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். புதுச்சேரியில் இப்படி ஒரு ஆட்சி நடந்தது இல்லை என்று சொல்லக்கூடிய ஆட்சிதான் நடந்தது.

கடந்த ஆட்சியில் என்ன நன்மைகள் செய்தார்கள். மக்களுக்கான திட்டங்கள் ஏதாவது கொண்டு வந்தார்களா? புதுச்சேரியை வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்றார்களா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தார்களா? புதிய தொழிற்சாலைகளை கொண்டுவந்தார்களா?

முதியோருக்கு உதவி செய்தார்களா? படிக்கின்ற பிள்ளைகளுக்கு ஏதாவது நன்மை உண்டா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை உண்டா? யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.

என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் எப்படிப்பட்ட வளர்ச்சியை கொண்டு வந்தோம். ஆனால், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் புதுச்சேரி 10 ஆண்டுகள் பின்னுக்கு சென்றுவிட்டது. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், வேலையை விட்டு எடுத்தார்களே தவிர யாருக்கும் வேலை கொடுக்கவில்லை.

அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை. கூட்டுறவு நிறுவனங்கள், பஞ்சாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடினார்கள்.

யாருக்கு அதிகாரம் என்ற சண்டையில், ஆளுநருக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் வரை சொல்லக்கூடிய நிலையை உருவாக்கியதுதான் கடந்த ஆட்சியாளர்களின் சாதனை.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன உரிமை, அதிகாரம் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது கடந்த ஆட்சிதான். அதிகார போட்டியிலேயே 5 ஆண்டுகள் ஓடிவிட்டது. மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை.

ஒருபுறம் 85 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று கூறுவார்கள். மற்றொரு புறம் ஆளுநர், மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கிறது என்று கூறுவார்கள். கடந்த ஆட்சியில் சண்டைதான் போட்டார்கள். எதையும் செய்யவில்லை. அந்த ஆட்சியை போக்கி நல்லாட்சி மலர்ந்திட வேண்டும்.

மத்திய அரசோடு ஒரு இணக்கமான சூழலை உருவாக்கி, திட்டங்களை செயல்படுத்த நாம் ஆட்சியில் அமர வேண்டும். இதற்காக பாஜக, அதிமுக, பாமகவுடன் கூட்டணி அமைந்து இந்த தேர்தலை சந்திக்கிறோம். புதுச்சேரி மக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லையென்றால் புதுச்சேரியில் எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசுடன் சுமூகமான சூழல் இருந்தால் தான் நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்த முடியும். புதுச்சேரியை சிறந்த மாநிலமாகவும், எடுத்துக்காட்டு மாநிலமாகவும் மாற்ற வேண்டும் என்பதுதான் என்.ஆர் காங்கிரஸின் எண்ணம்.

என்ஆர் முதல்வராக வருவாரா? என்று சிலர் கேள்வி கேட்பார்கள். நிச்சயமாக நான் முதல்வராக வருவேன். இந்த கூட்டணியின் தலைமை என்.ஆர் காங்கிரஸ்தான். கூட்டணியின் தலைவரும் நான் தான். அதனால் ஆட்சியும் என்னுடைய தலைமையில்தான். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை’’ இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்