திடீர் மாற்றம்; பாஜகவில் இணைந்த திருநள்ளாறு தொகுதி அமமுக வேட்பாளர்: புதுச்சேரியில் தொடரும் கட்சி மாறும் படலம்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியின் அமமுக வேட்பாளர், திடீரென பாஜகவில் இணைந்தார்.

அமமுக காரைக்கால் மாவட்டச் செயலாளரும், அக்கட்சியின் திருநள்ளாறு தொகுதி வேட்பாளருமான தர்பாரண்யம் இன்று (மார்ச் 26) மாலை திருநள்ளாற்றில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மத்திய இணை அமைச்சரும், புதுச்சேரி மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன்ராம் மேக்வால் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜக மாநில துணைத் தலைவர் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி, பாஜக வேட்பாளர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அமமுக வேட்பாளராகப் போட்டியிடும் நிலையில், கடந்த சில நாட்களாக தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், திடீரென அவர் பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இணந்தது குறித்து தர்பாரண்யம் கூறுகையில், "பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஜி.என்.எஸ்.ராஜசேகரன் என்பவர், பாஜக சார்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். மறைமுகமாக ஆயிரம் குடும்பங்களும், நேரடியாக ஆயிரம் குடும்பங்களும் அவரை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒருவரை எதிர்த்து நிற்க மனம் இல்லாதாதால், தொகுதி வளர்ச்சிக்காகவும், அவரது வெற்றிக்காகவும், அவருடன் சேர்ந்து உறுதுணையாக இருந்து செயல்படும் வகையில் பாஜகவில் சேர்ந்துள்ளேன்" என்றார்.

இத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் காங்கிரஸ் சார்பிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இத்தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்த்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர் என்பதும், இதனால் அண்மையில் என்.ஆர்.காங்கிரஸிலிருந்து பி.ஆர்.சிவா நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய சமயத்தில், புதுச்சேரியில் ஏற்கெனவே முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பல்வேறு காரணங்களால் கட்சி மாறிய நிகழ்வுகளும், குறிப்பாக, பாஜகவில் இணைந்த நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில், வேட்பாளர் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரமும் சூடுபிடித்துவிட்ட நிலையில், இன்னும் கட்சி மாறும் படலம் தொடர்வது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE