சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

By கி.மகாராஜன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலர் எஸ்.இளங்கோ, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழ், குஜராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் இந்தி மொழியை உச்ச நீதிமன்ற வழக்காடு மொழியாக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் மாநில மொழிகளில் வாதிடுவதை அங்கீகரிக்க மறுப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என 2006-ல் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உயர் நீதிமன்றங்களில் மாநில மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டியதில்லை. இருப்பினும் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை காரணம் காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் தீர்மானத்தை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பாமல், குடியரசுத் தலைவருக்கு நேரடியாக அனுப்பி ஒப்புதல் பெற்று அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.சுப்பிமணியன் வாதிட்டார். பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மற்றொரு வழக்கு

திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழ் மற்றும் கலாச்சாரத்துறை செயலர், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 23-க்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE