திமுகவுக்கும், வேட்பாளருக்கும் அவப்பெயரை ஏற்படுத்த ரெய்டு; உரிய வழிகாட்டுதல் அளியுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்

By செய்திப்பிரிவு

திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், எதிர்த்து நிற்கும் பாஜக வேட்பாளருக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தவும், எ.வ.வேலுவைச் சில நாட்கள் பிரச்சாரம் செய்யாமல் தடுப்பதுமே வருமான வரித்துறை சோதனையின் நோக்கமாக மாறியது. உரிய வழிகாட்டுதலை அளியுங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை தொடர்பாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் உள்பட 4 தேர்தல் ஆணையர்களுக்கு திமுக எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“கடந்த 25ஆம் தேதியன்று (நேற்று) எங்களது கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறையின் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அந்தக் கல்லூரியின் கெஸ்ட் ஹவுஸில் திமுக தலைவர் ஸ்டாலின் தங்கியிருந்து குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நேரத்தில் கட்சியின் வேட்பாளருக்கும், கட்சிக்கும் அவப்பெயரை உருவாக்கும் விதத்தில் பொருத்தமான நேரத்தில் நடத்தப்பட்டதாகவே வேதனையுடன் கருதுகிறோம். இந்த சோதனை, ஏதாவது முக்கியமான தகவல் அல்லது தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று நடந்திருக்கலாம். எ.வ.வேலுவுக்குத் தேர்தல் நேரத்தில் கெட்ட பெயர் ஏற்படுத்தவும், சில நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதைத் தடுப்பதும் இந்த சோதனைகளின் நோக்கமாக மாறியுள்ளது.

இந்த சோதனையால் எங்களது தலைவர் ஸ்டாலினின் பிரச்சார கால நேரம் தாமதம் ஆனது. இதனால் எங்களது தொண்டர்கள் மிகவும் வேதனை அடைந்தனர். எந்தவொரு சட்ட நடவடிக்கையிலிருந்தும் எங்களது கட்சியோ அல்லது தொண்டர்களோ விலகிச் சென்றதில்லை, சட்ட ரீதியாக அதை எதிர்கொண்டுள்ளோம்.

இந்த சோதனைகள் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு எதிராகப் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்குச் சாதகமான பலன்களைக் கொடுப்பதாக மட்டுமே அமைகிறது என்பது எங்களை வேதனைப்படுத்தும் செயலாகும். இந்த சோதனை நடப்பதற்கு முன்பே எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் ரூ.3 கோடி கைப்பற்றப்பட்டதாக போலியான செய்திகள் பரவின. தேர்தலுக்காக மத்திய ஏஜென்சிகளைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த நடவடிக்கைளை, தன்னாட்சி மற்றும அரசியலமைப்பு ஆணையமான இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும்.

இது தொடர்ந்தால் ஜனநாயகச் செயல்பாடுகள் குறைவதற்கே வழிவகுக்கும். ஆகவே, அரசியல் நோக்கத்துடன் மற்றும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்காக நடக்கும் பிரச்சாரத்தை பாதிக்கும் வண்ணம் நடக்கும் இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜென்சிகளுக்கும் உத்தரவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்”.

இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE