7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கருத்து; தமிழக மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுவதா?- கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக அரசு தெரிவித்துள்ள கருத்து, தமிழக மாணவர்கள் மீது நடத்திய நேரடித் தாக்குதல் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 26) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் காரணமாக எம்பிபிஎஸ் படிப்பில் சேர 313 மாணவர்களுக்கும், பல் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க 92 மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தது. அதாவது, அரசுப் பள்ளியில் படித்த 405 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

வரும் காலங்களில் இன்னும் நிறைய மாணவர்கள் மருத்துவத்தில் சேர்ந்து பயனடைவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல், மத்திய பாஜக அரசு மீண்டும் தமிழர் விரோதப் போக்கைக் கையில் எடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதுபோல், புதுச்சேரியிலும் மருத்துவப் படிப்புகளில் சேர 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு எடுத்தது. இந்த இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தருமாறு மத்திய பாஜக அரசுக்கு உத்தரவிடக் கோரி, புதுச்சேரியைச் சேர்ந்த திவ்யதர்ஷினி என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமித் ஷாவின் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த மனுவில், 'ஒரே நாடு ஒரே தகுதி என்ற அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் 10 சதவிகித இட ஒதுக்கீட்டு முடிவு, நீட் தேர்வின் சாராம்சத்தையே நீர்த்துப் போகச் செய்துவிடும். தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதுகுறித்து, மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை' என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதில் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு, மாணவர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிரான நிலையை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது. புதுச்சேரிக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க அனுமதி மறுப்பதோடு, தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதையே, நீதிமன்றத்தில் பாஜக அரசு அளித்துள்ள பதில் நமக்கு உணர்த்துகிறது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் 12 ஆம் வகுப்புத் தேர்வை 8.41 லட்சம் பேர் எழுதினர். இதில் 3.44 லட்சம் பேர், அதாவது, 41 சதவிகிதத்தினர் அரசுப் பள்ளி மாணவர்கள். தமிழகத்தில் உள்ள 25 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,400 இடங்கள் உள்ளன.

7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியும் 405 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. மீதமுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஎஸ்இ மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியே, குறைவான அரசுப் பள்ளி மாணவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தச் சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பாஜக அரசு தெரிவித்துள்ள கருத்து, தமிழக மாணவர்கள் மீது நடத்திய நேரடித் தாக்குதலாகும். பாஜக அரசின் இத்தகைய அணுகுமுறை சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது. நீட் கொண்டு வந்து தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்த பாஜகவின் அடுத்த அஸ்திரம்தான் நீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு தெரிவித்துள்ள கருத்து.

இதன் மூலம் தேர்தலைக் கருத்தில் கொண்டே அதிமுக அரசும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்துள்ளது தெளிவாகிறது. தேர்தலுக்குப் பிறகு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்தது உண்மையாகிவிட்டது.

'நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன், நீ அழுவது போல் நடி...' என்பது போல் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தோடு பாஜக, அதிமுக அரசுகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் தமிழர் விரோதப் போக்குக்குத் தமிழக வாக்காளர் முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்