திமுக கோட்டையில் களமிறங்கிய பாஜக; எழிலன் vs குஷ்பு: ஸ்டார்ஸ் பேட்டி!

By நந்தினி வெள்ளைச்சாமி

திமுகவின் கோட்டை, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நான்கு முறை வெற்றி பெற்ற தொகுதி, அதில் 3 முறை 'ஹாட்ரிக்' என நட்சத்திர அந்தஸ்து பெற்றது ஆயிரம் விளக்கு தொகுதி. இந்தத் தொகுதியில் மருத்துவர் எழிலன் திமுக சார்பாகவும், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் குஷ்புவும் போட்டியிடுகின்றனர்.

2015 வெள்ள நிவாரணப் பணி, நீட், சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள், கோவிட் தடுப்புப் பணிகள் எனக் களப்பணியாற்றியவர் எழிலன். இவர், நடைப்பயிற்சி பிரச்சாரம், வீடு வீடாகப் பிரச்சாரம் என முழுவீச்சில் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

குஷ்பு வேட்புமனுத் தாக்கல் செய்த நொடியிலிருந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் தன் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை அல்ல என்பதே குஷ்புவின் நம்பிக்கை.

தீவிர பிரச்சாரப் பணிகளுக்கிடையே இருவரிடமும் 'இந்து தமிழ்' சார்பாக தமிழகத்தில் நிலவும் சில பிரச்சினைகளை முன்வைத்தோம்:

எழிலனிடம் பேசியதிலிருந்து...

இந்தத் தேர்தலில் வாக்குக்குப் பணம் கொடுத்து வேட்பாளர்கள் வெற்றி பெற முடியும் என நினைக்கிறீர்களா?

ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். பெட்ரோல், கேஸ் விலை உயர்வு, தமிழகத்தின் சமூக நீதியைக் குலைப்பது, நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கைகளைத் திணித்து மாநில உரிமைகளைப் பறிப்பது எனத் தொடர்ச்சியாக மக்கள் பாஜக எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். தமிழகத்தின் மத நல்லிணக்கத்தைக் கூறுபோட்டுவிடுவார்கள் என்ற அச்சம் தமிழகத்தில் உள்ளது. 10 ஆண்டுகளாக செயல்படாத அதிமுக ஆட்சி மீது மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்.

சென்னையில் மாநகராட்சி தேர்தல் நடக்காததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதனால் வெறுப்பில் உள்ளனர். தமிழகத்தை வழிநடத்தும் தலைமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் உள்ளது. அவருடைய 7 உறுதிமொழிகளும் திமுக தேர்தல் அறிக்கையும் மக்களைச் சென்றடைந்துள்ளன. தேர்தல் களமே வேறு மாதிரியாக இருப்பதால், பணம் பொருட்டல்ல.

இந்தத் தேர்தலிலும் திமுகவில் வாரிசு அரசியல் தலைதூக்கியிருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதே?

திராவிட இயக்கக் கருத்தியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது அந்த இயக்கத்தில் உள்ள பெற்றோரின் கடமையாகவே பார்க்கப்படுகிறது. என் தந்தை மு.நாகநாதன் யார்? அவர் திமுகதான். அவர் மறைந்த தலைவர் கருணாநிதியின் நண்பர். திராவிடக் கருத்தியலைச் சொல்லிச்சொல்லித்தான் என்னை வளர்த்தார். அப்படி வளர்த்ததால்தான் தேர்தல் அரசியலில் சமூகச் செயற்பாட்டாளராக என்னால் பயணிக்க முடிகிறது. குடும்ப அரசியல் அல்ல, இது பாரம்பரிய அரசியல். இதனை வெறும் குடும்ப அரசியலாகப் பார்க்க முடியாது. உதயநிதிக்கு உடனடியாக வாய்ப்பளிக்கப்பட்டதாக விமர்சிக்கின்றனர். எல்லாவற்றுக்கும் வழிமுறைகள் இருக்கின்றன. அவர் திமுகவில் பயணித்திருக்கிறார். தேர்தலைச் சந்தித்து மக்கள் அங்கீகரித்துதானே அவர்களின் பிரதிநிதிகளாக வருகின்றனர். இது நியமிக்கப்பட்ட பதவி அல்லவே.

நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்துள்ளீர்கள். இந்தத் தேர்தல் முடிவுகளில் நீட் எதிர்ப்பு பிரதிபலிக்குமா?

அதிமுக அரசு தமிழகத்தின் அடிப்படைக் கல்வி கட்டுமானங்களை மத்திய பாஜகவுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டது என்ற தெளிவு மக்களுக்கு உள்ளது. பொதுப் பட்டியலில் கல்வி இருந்தாலும் மாநில அரசு முறையிடவில்லை, தமிழக அரசு சட்ட ரீதியாகப் போராடவில்லை என மக்களுக்குத் தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே, இப்போது செவிலியர் படிப்பு, பொறியியல் படிப்பு, சட்டப்படிப்பு என அனைத்துக்கும் நீட் தேர்வு கொண்டு வருகின்றனர். இவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் மக்கள் அதிமுகவைத் தனித்துப் பார்க்க மாட்டார்கள். இவர்களுக்கு எதிர் தளத்தில் யார் இருக்கிறார் என்பதை மக்கள் பார்ப்பார்கள். மக்கள் வாக்களிக்கும்போது தனது வாக்கு வீணாகிவிடக்கூடாது என நினைப்பார்கள். அப்படிப் பார்க்கும்போது திமுகவுக்குப் பெரும் ஆதரவு அலை இருக்கிறது.

வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் எழிலன்.

சிஏஏவைத் திரும்பப் பெற வலியுறுத்துவோம் என அதிமுக கூறியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மாநிலங்களவையில் அதிமுக ஆதரவாக வாக்களித்திருக்காவிட்டால் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி இன்றைக்கு சட்டமாகியிருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போது வாக்களித்துவிட்டு இப்போது திரும்பப் பெற வலியுறுத்துவோம் என்று சொல்வது மக்களுக்கு துரோகம் செய்வதாகும்.

விவசாய சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் பெரிய போராட்டங்கள் நடக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறதே?

கடந்த காலத்தில் விவசாயம் சார்ந்து திமுக செய்த சீர்திருத்தத்தின் வெளிப்பாடுதான் இது. உழவர் சந்தை, மண்டி இங்கு இருக்கிறது. இங்கிருக்கும் விவசாயிகளின் தன்மையே வேறு. விவசாயிகளுக்குப் பாதுகாப்பான சட்டங்களை கருணாநிதி எப்போதோ நிறைவேற்றிவிட்டார். நில உச்சவரம்பு சட்டம், குறைந்தபட்ச கொள்முதல் விலை என எல்லாவற்றிலும் சீர்திருத்தம் வந்திருக்கிறது. மாநிலப் பட்டியலில் இருக்கும் விவசாயத்துக்கு மத்திய அரசு சட்டம் இயற்றியதே தவறு. விவசாயிகளுக்கான அடிப்படை கட்டுமானத்தை திமுக ஆட்சி ஏற்கெனவே நிறைவேற்றிவிட்டது.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரிதான் காரணம் என மத்திய அரசு குற்றம் சாட்டுகிறதே?

தரவுகள் தெளிவாக இருக்கின்றன. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் மத்திய அரசின் வரி 217 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மாநில அரசின் வரி 67% தான் அதிகமாகியிருக்கிறது. அந்த வரியை மாநில அரசுக்குப் பகிர்ந்துகொடுக்க முடியாதபடி செஸ் வரி போட்டிருக்கின்றனர். செஸ் வரி, மாநிலத்துக்குப் பகிர்ந்து அளிக்க முடியாத வரி. இது முழுக்க முழுக்க மத்திய அரசுக்குதான் போகும். அப்படி வசூலித்த வரியையும் மக்களுக்குப் பயன்படுத்துவதில்லை. மாநிலத்தை பலப்படுத்தினால்தான் அடிப்படை கட்டுமானங்களை உருவாக்க முடியும். மாநில அரசை வரி செலுத்தும் சிற்றரசாகப் பார்க்கக்கூடிய போக்கு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

பெண்களிடம் வாக்கு சேகரிக்கும் எழிலன்.

அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அதிமுக ஸ்டிக்கர் ஒட்டும் கட்சி, ஜெராக்ஸ் எடுக்கும் கட்சியாகத்தான் பார்க்கிறேன். திமுகவின் தேர்தல் அறிக்கையை பிரதி எடுத்துள்ளனர். தனித்து, சிந்தித்து தேர்தல் அறிக்கை தயாரித்ததாகத் தெரியவில்லை.
இந்தத் தேர்தல், தமிழகத்தை திராவிட மண் என நிரூபிக்கும் சோதனையாக பார்க்கிறீர்களா?

பாஜக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதற்கு தமிழகம் தேர்தல் முடிவுகள் மூலம் காலம்காலமாக பதில் சொல்லியிருக்கிறது. நிர்வாகத் திறனுள்ள தலைமை, தொலைநோக்குள்ள அரசு வேண்டும், அது திமுக தலைமைதான், திமுக அரசுதான் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். பாஜக கூட்டணியில் உள்ள எந்த அரசையும் நிராகரிப்போம் என்ற தெளிவும் உள்ளது. மத நல்லிணக்கம், சமூக நீதி, தமிழ் மொழிக்கு ஆபத்து நேரிட்டால் மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற பாடத்தைக் காலம் காலமாக கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதன் வெளிப்பாடாகத்தான் இந்தத் தேர்தலும் அமையும்.

ஆயிரம் விளக்கு தொகுதிக்கான உங்களின் வாக்குறுதிகள் என்ன?

ஒவ்வொரு வட்டமாகப் பிரித்து அந்தத் தொகுதிக்கு என்று தேர்தல் அறிக்கையை நான் கொடுத்துள்ளேன். 1970-களிலேயே குடிசைகளை அகற்றி கருணாநிதி, ஹவுசிங் போர்டு வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளனர். அதன் சீரமைப்புப் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க வேண்டும். குடிநீர் குழாய், கழிவு நீர் கால்வாய்களைச் சீரமைக்க வேண்டும். ஒவ்வொரு வட்டத்திலும் விளையாட்டு அரங்குகள் அமைக்க வேண்டும். பட்டா பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் இரு 'thousand lighters' என்ற பெயரில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களே மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிகளை மேற்கொள்வோம். 14 ஆண்டுகளாக இங்கு இலவச மருத்துவம் அளித்து வருகிறேன். மக்களின் பிரச்சினைகள் எனக்குத் தெரியும்.

உங்களை எதிர்த்துப் போட்டியிடும் குஷ்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அவர் பாஜகவின் வேட்பாளர். பாஜகவின் கொள்கைகளை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்றால், அவருக்கு என்ன முடிவை மக்கள் அளிப்பார்கள் என்பதைத் தேர்தல் களம் சொல்லும்.

குஷ்புவிடம் பேசியதிலிருந்து...

இந்தத் தேர்தலில் வாக்குக்குப் பணம் கொடுத்து வேட்பாளர்கள் வெற்றி பெற முடியும் என நினைக்கிறீர்களா?

பணம் கொடுத்து வாக்குச் சேகரிப்பது பாஜகவின் சரித்திரத்திலேயே கிடையாது. இந்தத் தேர்தலில் ஏன் கொடுக்க வேண்டும்? யார் பணம் கொடுப்பார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். பாஜக - அதிமுக மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் என்பதை அடிப்படையாக வைத்துதான் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது.

இந்தத் தேர்தலில் வாரிசு அரசியல் தலைதூக்கியிருப்பதாகக் கருதுகிறீர்களா?

காங்கிரஸ் கட்சியில் பணம் கொடுத்து, தங்கள் குடும்பங்களில் உள்ளவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் யாருடைய மகனுக்கு இடம் கிடைக்கவில்லை? அனைத்துத் தொகுதிகளிலும் தங்களுடைய பிள்ளைக்கு இடம் வாங்கியிருக்கின்றனர். திமுகவிலும் தலைவர்களின் பிள்ளைகளுக்குத்தான் சீட் கொடுத்திருக்கின்றனர். இதனால் இரு கட்சிகளிலும் கட்சிக்குள் உள்ள நிர்வாகிகளுக்கிடையே மிகப்பெரிய மோதல் நிகழ்ந்திருக்கிறது. குஜராத்தில் பிரதமரின் நெருங்கிய உறவினருக்கு நகராட்சித் தேர்தலில், குடும்ப அரசியல் இருக்கக்கூடாது என்பதால் தான் சீட் மறுக்கப்பட்டது. பாஜகவில் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கவில்லை.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு உள்ள எதிர்ப்பு தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்குமா?

நீட் தேர்வுக்குக் கையெழுத்திட்டது யார்? எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என ஸ்டாலினால் மறுக்க முடியுமா? நீட்டை எதிர்த்துவிட்டு அனிதா பெயரில் இயங்கும் நீட் பயிற்சி மையங்களை ஆதரிப்பேன் என்கிறார். அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார். நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் எனக்கென தனிப்பட்ட நிலைப்பாடு இருக்க முடியாது. நான் கட்சியின் சார்பாக ஒரு வேட்பாளராக இருக்கிறேன். எல்லாம் கட்சி சார்பாகத்தான் இருக்கும். நீட் தேர்வு தொடர்பாக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். நீட் தேர்வைக் கொண்டு வந்தவர்களே இன்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காங்கிரஸ்தானே கொண்டு வந்தது. காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டேன், நீட் தேர்வை எதிர்க்கிறேன் என ஸ்டாலினால் கூற முடியுமா? நீட் தேர்வு இந்தத் தேர்தலில் பிரதிபலிக்காது.

தீவிர வாக்கு சேகரிப்பில் குஷ்பு.

சிஏஏவைத் திரும்பப் பெற வலியுறுத்துவோம் என உங்கள் கூட்டணியில் உள்ள அதிமுக கூறியிருக்கிறதே?

சிஏஏவால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அதனை இன்னும் செயல்படுத்தவில்லை. சிஏஏ குறித்து இரு கூட்டணித் தலைவர்களும் பேசுவார்கள். முதல்வரின் வாக்குறுதிக்கு பேச்சுவார்த்தை நடத்தி மேலிடத்திலிருந்து பதில் வரும். சிஏஏவால் சிறுபான்மை மக்களுள் ஒருவர் பாதிக்கப்பட்டால் சொல்லுங்கள். யாரும் பாதிக்கப்படவில்லை. எதிர்க்கட்சியினரின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பப் போவதில்லை.

விவசாயிகள் சட்டத்துக்குப் பெருமளவில் எதிர்ப்பு நிலவுகிறதே?

விவசாயிகள் சட்டத்துக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தது எதிர்க்கட்சிகள்தான். போராடும் விவசாயிகள் தங்கள் ஒற்றுமையை நிரூபிக்கப் போராடுகின்றனர். சில நாட்கள் போராடுவார்கள் அதன்பிறகு விட்டுவிடுவார்கள். தொடர்ந்து எங்கு போராட்டம் நடைபெறுகிறது? வேளாண் சட்டங்களில் பிரச்சினை இருந்திருந்தால் இந்திய அளவில் மிகப்பெரிய போராட்டம் நிகழ்ந்திருக்கும். இதைத்தான் எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்கவில்லை. வேளாண் சட்டங்கள் திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கொடுத்ததுதான். தேர்தலுக்காகச் சொல்லிவிட்டு அதனை இப்போது எதிர்க்கின்றனர். பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸால் ஏன் இவற்றைச் செயல்படுத்த முடியவில்லை. தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதியை காங்கிரஸ், திமுக அளித்ததா? நாங்கள் நடைமுறைப்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது. எந்தவொரு திட்டத்தையும் அவர்களிடமிருந்து வாங்கிச் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை. நாடு முன்னேற வேண்டும் என்பதுதான் முக்கியம் என, பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு சாமானியர்களை பாதித்துள்ளது. இது தேர்தலில் பிரதிபலிக்குமா?

நிர்மலா சீதாராமன் இதுகுறித்துப் பேசிவிட்டார். இது கவலைக்குரிய விஷயம். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். 5 மாநிலத்தில் தேர்தல் நடக்கும்போது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிட்டு மக்களிடம் செல்ல எந்தக் கட்சி ஆசைப்படும்? விலை குறைந்தால்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது தெரியும். ஆனால், உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத சூழல் நிலவுவதால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. நிச்சயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இது வாக்குகளை பாதிக்காது. பாஜக மிகவும் வெளிப்படையான அரசு. ஊழல் எதுவும் இல்லை.

வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொள்ளும் குஷ்பு.

திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ஏற்கெனவே அவர்கள் பேசியதையே அமல்படுத்தவில்லை. மறுபடியும் அதனையே பேசுகின்றனர். தேர்தல் அறிக்கையில் கூறியதை அமல்படுத்தியிருந்தால் 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்திருக்காது. வெறும் பேச்சுதான். அதில் எந்தவித நேர்மையும் கிடையாது. அதிமுக பெண்களுக்கான பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நல்ல பல திட்டங்களைக் கொண்டு வர பாடுபட்டிருக்கின்றனர். அதைத்தான் அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கின்றனர். வாஷிங் மெஷின் போன்ற வாக்குறுதிகள் சாத்தியமில்லை என்கின்றனர். சாத்தியமில்லாதது என நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்? ஆத்ம நிர்பார், மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா இருக்கிறது. அதன் அர்த்தம் புரியாமல் முன்பு கிண்டல் செய்தனர். இந்தியா போன்ற வளமான, திறமைசாலிகளைக் கொண்ட நாடு கிடையாது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் ஏன் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. இங்கிருப்பவர்கள் எல்லோரும் வெளிநாடுகள், வெளியூருக்குப் பறந்துவிடுவார்கள். இங்கேயே தயாரிக்கலாம். அதற்காக வங்கிக் கடன் குறைந்த வட்டியில் எளிமையாக கிடைக்கிறது. இங்கு தயாரிக்கும் பொருட்கள் இப்போது உலகம் முழுவதும் கிடைக்கின்றன.

இது திராவிட மண், பாஜக காலூன்ற முடியாது என திமுக சொல்கிறதே?

இது கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் சட்டப்பேரவைத் தேர்தல். பாஜக என்றால் என்ன, நாங்கள் வந்துவிட்டோம், திட்டங்களைக் கொடுக்கப் போகிறோம் என்பதை நிரூபிப்போம். எங்கள் கூட்டணி மிக நேர்மையானது. எவ்வளவு நாள்தான் திராவிட மண் எனச் சொல்வீர்கள்? எங்கெல்லாம் எங்களால் வர முடியாது எனச் சொன்னார்களோ, அங்கெல்லாம் ஜெயித்துவிட்டோம். நிச்சயமாக இரட்டை இலக்கத்தில் கோட்டையில் அமருவோம்.

ஆயிரம் விளக்கு தொகுதிக்கான உங்களின் வாக்குறுதிகள் என்ன?

கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். நன்றாகத்தான் இருக்கிறேன். மகிழ்ச்சி என்றுதான் மக்கள் பதில் அளிக்கிறார்கள். ஆனால், அந்தந்தப் பகுதிகளில் சிறு பிரச்சினைகள் இருக்கும். தண்ணீர் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன். கடந்த காலங்களில் இந்தத் தொகுதிக்கு என திமுக எதையும் செய்யவில்லை.

உங்களை எதிர்த்துப் போட்டியிடும் எழிலன் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

சத்தியமாக அவர் குறித்து எதுவும் தெரியாது. அவர் எனக்கு எதிரி அல்ல, சக போட்டியாளர். அப்போது இருந்த திமுக தலைவர், மாபெரும் தலைவர் கருணாநிதி அரசியலில் யாரும் எதிரியோ நண்பனோ கிடையாது என எனக்குச் சொல்லியிருக்கிறார். எழிலனுக்கு வாழ்த்துகள்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்