தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சியே இங்கு வெற்றிபெறும் என்று கருதப்படும் சென்டிமென்ட் தொகுதி அம்பாசமுத்திரம். இதனாலோ என்னவோ அதிமுகவும், திமுகவும் தேர்தல் பணிகளில் மிகுந்த சுறுசுறுப்பு காட்டிவருகின்றன. இழுபறி நிலையிலேயே இப்போதைக்கு தொகுதி நிலவரம் உள்ளது.
அம்பாசமுத்திரம் தாலுகாவுக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய நகராட்சிகள், சிவந்திபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், மணிமுத்தாறு ஆகிய பேரூரா ட்சிகள் மற்றும் 34 ஊராட்சிகளை உள்ளடக்கி இத்தொகுதி பரந்து விரிந்திருக்கிறது.
ஒருபுறம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, மறுபுறம் தாமிரபரணி நதி என இயற்கை வளம் நிறைந்த தொகுதி. நெல் விவசாயமே பிரதான தொழில். அதையடுத்து பீடி சுற்றும் தொழில் உள்ளது. பத்தமடை கோரைப்பாய், காருகுறிச்சி மண்பாண்டங்கள், வாகைக்குளம் வெண்கலப் பொருட்கள், கல்லிடைக்குறிச்சி அப்பளம் போன்றவை இத்தொகுதியின் பிரபல உற்பத்தி பொருட்கள். அம்பை-16 நெல் ரகத்தை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம், பாபநாசம் அணை, சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள், புலிகள் சரணாலயம், குளிர்ப்பிரதேசமான மாஞ்சோலை ஆகியவை இங்குள்ளன.
இந்துக்கள் அதிகமுள்ள அம்பை தொகுதியில், முக்குலத்தோர் பெரும் பான்மையாக இருக்கின் றனர். இதனால், முக்குலத்தோர் சமுதாயத்தினரையே கட்சிகள் வேட்பாளராக நிறுத்துவது வழக்கம். இம்முறையும் அப்படியே.
இதையடுத்து நாடார், தாழ்த்தப்பட்டோர் கணிசமாகவும், இல்லத்து பிள்ளைமார், செட்டியார், முதலி யார் சமுதாயத்தினர் குறிப்பிடும் அளவுக்கும் உள்ளனர். பத்தமடை, சேரன்மகாதேவி, வி.கே.புரம் பகுதிகளில் முஸ்லிம்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
தொகுதி பிரச்சினைகள்
காருகுறிச்சி மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருகிறது. இத்தொழிலுக்கான மூலப் பொருளான குளத்து மண்ணை எடுப்பதற்கு அதிகாரிகள் காட்டும் கெடுபிடியால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். பாசன அமைப்புகளை சீரமைக்காதது, தாமிரபரணி வெள்ள நீர்க்கால்வாய் திட்டத்தை செயல்படுத்தாதது, தாமிரபரணி மணல் கொள்ளை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏராளம்.
கல்லிடைக்குறிச்சி - அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை திட்டம், மணிமுத்தாறு அணை பூங்கா சீரமைப்பு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் பாபநாசம் அணையிலிருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு கடந்த பல ஆண்டுகளாகவே ஆட்சியாளர்கள் செவிசாய்க்கவில்லை. இதனால், இப்பகுதி விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளையும், பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகிறார்கள்.
இருமுனைப் போட்டி
ஏற்கெனவே இத்தொகுதியில் திமுக சார்பில் வெற்றிபெற்று தமிழக சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஆவுடையப்பனும், அதிமுக அமைச்சராக இருந்த இசக்கிசுப்பையாவும் இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே அதிமுக தரப்பில் முதல்வர் பழனிசாமியும், திமுக தரப்பில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இத்தொகுதிக்கு வந்து ஆதரவு கேட்டுச் சென்றுள்ளனர்.
திமுக வேட்பாளர் இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், பீடித்தொழிலாளர்கள் சங்கம் என்று அமைப்பு ரீதியாக இங்கு பலம் வாய்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வாக்கு வங்கியும், அவர்களது களப்பணியும் திமுகவுக்கு பலம் சேர்க்கிறது.
இத்தொகுதியில் முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகளை அமமுகவுடன் கூட்டணி வைத்துள்ள எஸ்டிபிஐ கட்சி பிரித்தால், அது திமுகவுக்கு பாதகமாக அமையலாம்.
அதேவேளை, பதவியில் இல்லாத போதும், இத்தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார் இசக்கி சுப்பையா. கரோனா காலத்தில் ஏராளமானோருக்கு உணவுப் பொருட்களை அளித்தது, கோயில் விழாக்கள், கட்சியினர் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கெடுத்தது, அவற்றுக்கு நிதியுதவி அளித்தது போன்றவை இசக்கி சுப்பையாவுக்கு சாதகமான அம்சங்கள்.
அதிமுக வாக்குகளை அமமுக வேட்பாளர் சி.ராணி ரஞ்சிதம் பிரிப்பார் என்ற அனுமானங்கள் இருக்கும் நிலையில், ராணி ரஞ்சிதம் முழுவீச்சில் வாக்குசேகரிப்பில் ஈடுபடாதது அதிமுக தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக - திமுக இடையேதான் போட்டி என்றாலும், கடந்தமுறை கூட்டணி பலமின்றி தோல்வியைத் தழுவிய ஆவுடையப்பன் இம்முறை பலமான கூட்டணி பலத்துடன் களத்தில் இருக்கிறார். சமுதாய வாக்குகளைத் தாண்டிய செல்வாக்கு, தான் வழங்கியுள்ள உதவிகள், ஆளுங்கட்சி பலத்துடன் இசக்கிசுப்பையா மோதுகிறார்.
மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே இத்தொகுதியில் வெற்றி அமையும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago