திமுகவும் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று வந்த தொகுதி தாராபுரம். முதல் முறையாக பாஜகவுக்கு அதுவும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை எதிர்த்து திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார்.
பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த கயல்விழி , அடிப்படையில் ஓர் ஆசிரியர். தனியார் பள்ளியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றியவர். 25 ஆண்டுகளாகத் திமுக மகளிர் அணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். அவரிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் பேசினேன்.
பாஜக மாநிலத் தலைவரை எதிர்த்துப் போட்டியிடுகிறீர்கள். அதுவும் முதல் முறையாகத் தேர்தலில் களம் காண்கிறீர்கள். பதற்றமாக உணர்கிறீர்களா?
தாராபுரத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கு வேலையே இல்லை. மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜகவுக்கு செல்வாக்கு என்பதே கிடையாது. அவர்களுக்கு 3 சதவீத வாக்கு வங்கி கூட இல்லை. நானோ, கட்சிக்காரர்களோ, பொதுமக்களோ பயப்பட வேண்டிய, பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பாஜகவுக்கு இங்கு செல்வாக்கு கிடையாது என்பதுதான் உண்மை.
» ட்ரோல் செய்பவர்களுக்கு நன்றி; இன்னும் 30 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான்: மதுவந்தி சிறப்புப் பேட்டி
நாட்டின் பிரதமரே எல்.முருகனுக்காகப் பிரச்சாரத்துக்கு வருகிறார். அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் வருகிறார்கள் என்னும்போது பாஜகவுக்கு அது கூடுதல் பலம்தானே?
கண்டிப்பாக இல்லை. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் உள்ளிட்ட பாஜக தேசியத் தலைவர்கள் அனைவரும் கூட்டணிக்கு ஆதரவாக, தமிழ்நாடு முழுக்கப் பிரச்சாரம் செய்தனர். அவர்களின் அனைத்து அதிகாரங்களையும் பிரயோகித்தனர். ஆனால், திமுக கூட்டணிக்கு முன்னால் அவை எதுவுமே எடுபடவில்லை. 2019 தேர்தல் முடிவுகள்தான் 2021 தேர்தலிலும் நிச்சயம் எதிரொலிக்கும்.
பாஜக தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்ற ஓராண்டில் எல்.முருகன், மாநிலம் அறிந்த தலைவராக மாறியிருக்கிறார். பிரபலம் என்ற கவர்ச்சி, வாக்குகளில் எதிரொலிக்குமா?
அவர் பாஜகவில் வேண்டுமானால் மாநிலத் தலைவராக இருக்கலாம். ஏன் தமிழகம் அறிந்த நபராகக் கூட இருக்கலாம். ஆனால் தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் வெளியூர்க்காரர். தொகுதி மக்கள் மத்தியில் அவர் ஒன்றும் பிரபலம் இல்லை.
முதலில் தாராபுரம், பாஜக ஆதரவு பெற்ற தொகுதியே இல்லை. என் கணவர் இங்குதான் 35 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருக்கிறார். எங்களைத் தெரிந்த அளவுக்குக்கூட கண்டிப்பாக எல்.முருகனைத் தாராபுரம் மக்களுக்கு தெரிந்திருக்காது. தொகுதியில் எனக்குத்தான் அவரைவிட அதிக பாப்புலாரிட்டி இருக்கிறது.
கந்த சஷ்டி கவசத்தை முன்னெடுத்துத் தமிழகம் முழுவதும் எல்.முருகன் வேல் யாத்திரை மேற்கொண்டார். அது அவருக்கு இந்துக்கள் மத்தியில் ஆதரவைக் கூட்டி இருக்குமா?
வேல் யாத்திரை என்பதே திட்டமிட்ட சதி. பாஜகவினர் தங்கள் கட்சியை பலப்படுத்திக்கொள்ள மேற்கொண்ட ஒரு நாடகம். இது பொதுமக்களுக்கும் தெரியும். ஸ்டாலினே பலமுறை சொல்லியிருக்கிறார்- திமுகவில் இருக்கும் 90 சதவீதம் பேர் இந்துக்கள்தான் என்று. கூட்டணிக் கட்சியில் இருக்கும் பெரும்பான்மையானோரும் இந்துக்கள்தான். தேர்தல் நாடகமாகவே வேல் யாத்திரையைக் கையில் எடுத்தார்கள். வேல் யாத்திரையால் கண்டிப்பாக எங்கள் தொகுதி மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க எங்குமே பாஜகவின் வாக்குகள் கூடாது.
தாராபுரம் தொகுதியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்றனர் அவர்களின் வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்?
எப்போதுமே பெரும்பான்மையான முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் வாக்குகள் திமுகவுக்குதான் கிடைக்கும். இந்த முறை பாஜக வேட்பாளர் எதிர்த்து நிற்பதால், 95 சதவீத சிறுபான்மையின வாக்குகள் எங்களுக்குத்தான் கிடைக்கும்.
இளைஞர்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே... குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில்...?
தாராபுரம் தொகுதியில் கொங்கு வேளாளர்கள் அதிகம். அவர்களில் திமுக அதிமுகவின் மீது அதிருப்தியாக இருக்கும் இந்துக்கள் சிலர் வேண்டுமானால் பாஜகவில் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான இளைஞர்களின் ஆதரவு திமுகவுக்குத்தான். பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்திருப்பது போன்ற மாயத்தோற்றம் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் நிஜத்தில் இல்லை என்பதுதான் எதார்த்தம்.
தற்போதைய கருத்துக்கணிப்புகள் ஆகட்டும், கடந்தகாலத் தேர்தல் முடிவுகள் ஆகட்டும்... கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டையாகத்தானே கருதப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுவது வெற்றி வாய்ப்பை உறுதி செய்யாதா?
2019 நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுகவுக்குத்தானே அதிக ஆதரவு கிடைத்திருக்கிறது. கடந்த காலங்களில் தாராபுரம் தொகுதியில் அதிமுகவுக்கு இணையாக நாங்களும் வெற்றி பெற்றிருக்கிறோம். இரண்டு கட்சிகளும் சம பலத்துடன்தான் இருக்கிறோம்.
தாராபுரம் தொகுதி அதிமுக கூட்டணியில் முதல் முறையாக பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். தங்களுக்குத் தொகுதி ஒதுக்கப்படவில்லையே என்ற வேதனையிலும் இருக்கின்றனர். 'ஜெயலலிதா இல்லாத நேரத்தில், பிற மாநிலங்களைப் போல மாநிலக் கட்சியான எங்களையும் மெல்ல மெல்ல பாஜக அழித்துவிடும்' என்று அதிமுகவினர் வெளிப்படையாகவே சொல்கின்றனர். இந்த அதிருப்தியும் எங்களுக்கு வாக்குகளாக மாறும்.
தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக காங்கிரஸ்காரர் இருக்கிறார். இதனால் தொகுதியைத் திமுகவுக்கு ஒதுக்கி விட்டார்களே என்ற அதிருப்தி காங்கிரஸுக்கு இருக்கிறதா, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு எப்படி இருக்கிறது?
1967-ல் இருந்து திமுகவுக்குத்தான் தாராபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு வந்தது 2016-ல் தான் காங்கிரஸுக்கு அளிக்கப்பட்டது. அப்போது நாங்கள் எந்த அதிருப்தியும் தெரிவிக்காமல், ஏமாற்றம் அடையாமல் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்தோம். அதேபோலத்தான் தற்போது தாராபுரம் தொகுதிக்கு காங்கிரஸார் பிரச்சாரம் செய்கின்றனர். மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் என கூட்டணிக் கட்சி நண்பர்கள் அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு அளிக்கின்றனர். எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
திராவிடக் கட்சிகள் தலைமைப் பொறுப்பில் தலித் மக்களை அமர்த்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. இதனால்தான் ஆ.ராசாவுக்குப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்படவில்லை என்றும் அதற்குப் பதிலடியாகத்தான் எல்.முருகன் பாஜக மாநிலத் தலைவர் ஆக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது. தனித் தொகுதியான தாராபுரத்தில் தலித் மக்களுக்குப் பொறுப்பு என்ற பிரச்சாரம் மாற்றத்தை ஏற்படுத்துமா?
அடிப்படையில் இந்த வாதமே தவறானது என்று நினைக்கிறேன். திமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஸ்டாலினை விடவும் மூத்த தலைவரான சூப்பர் சீனியர் துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக, துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆ.ராசா தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவில் அனைத்து சாதிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் எல்.முருகனை மாநிலத் தலைவராக ஆக்கியதாலேயே அந்த சாதிக்கு உரிய மரியாதையை பாஜகவினர் அளிக்கின்றனர் என்று அர்த்தமாகி விடாது. பாஜகவில் மாநிலத் தலைவர் எல்.முருகனை விட எச்.ராஜா, கே.டி.ராகவன் உள்ளிட்டோருக்குத்தான் மரியாதை, அதிகாரம் அதிகமாக உள்ளது. நாங்களும் தாழ்த்தப்பட்டவர்களைத் தலைவர்களாக்கி இருக்கிறோம் என்று மக்களை ஏமாற்றவே எல்.முருகன் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
அரசியலில் தலித் பெண்களுக்கான வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?
இந்தியா முழுவதுமே பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. காங்கிரஸ், பாஜக என எந்தக் கட்சியும் 33 சதவீத இட ஒதுக்கீட்டைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. 'பெண்கள் வாய்ப்பு மட்டும் கிடைத்தால் ஆண்களைவிட எல்லாத் துறைகளிலுமே சிறப்பாகச் செயல்படுவார்கள' என்று பெரியாரே சொல்லியிருக்கிறார். பெண்களுக்கான வாய்ப்பை உருவாக்க, சட்டம் இயற்றும் அவைகள் முன்வர வேண்டும்.
தொகுதியை முன்னேற்ற என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் என்ன?
பிஏபி அணையில் இருந்து உப்பாறுக்குத் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் உள்ளது. தாராபுரத்தில் இரு பாலரும் படிக்கும்படி ஓர் அரசு கலைக் கல்லூரி கொண்டு வர ஏற்பாடு செய்வோம். தமிழ்நாட்டிலேயே தாராபுரத்தைச் சுற்றியுள்ள மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் முருங்கைக்காய் அதிகம் விளைகின்றன. ஆனாலும் அங்குள்ள விவசாயிகளால் முருங்கைக்காயைச் சேமித்து, ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அதனால் மூலனூர் பகுதியில் முருங்கைக்காய் பவுடர் ஆலை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். கொளத்துப்பாளையம் பகுதியில் நூல் ஆலையை மூடி விட்டதால், சுமார் 5,000 தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். அந்த நூற்பாலையைத் திறக்க, சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
சித்தாந்த அரசியலைக் கையில் எடுத்திருக்கும் தேசியக் கட்சியை எதிர்த்து நிற்கும் தலித் பெண் வேட்பாளராக, இந்தத் தேர்தல் உங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியம்?
அடிப்படையில் இது பெரியார் மண். பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றவர்களால் பக்குவப்படுத்தப்பட்டு, வளர்க்கப்பட்ட இடம். இதில் பாஜக எந்த உருவத்தில் வந்தாலும் விரட்டியடிப்போம். தாழ்த்தப்பட்டவரை மாநிலத் தலைவராக நியமிப்பது போன்ற புலி வேஷம் போட்டுக் கொண்டு பாஜகவினர் தமிழ்நாட்டுக்குள் வருகின்றனர். பாஜக அடிப்படையில் ஓர் இந்துத்துவா கட்சி. சிறுபான்மையின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி.
மக்களை ஏமாற்ற பாஜக எந்த வேஷம் போட்டுக்கொண்டு வந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தாமரை தமிழ்நாட்டில் மலரவே மலராது. குறிப்பாகத் தாராபுரத்தில் குறைந்தது 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago