கருத்துக் கணிப்பு முடிவுகளால் அலட்சியம் வேண்டாம்: அயராது உழைப்போம்; தோழமை கட்சிகளுக்குத் தோள் கொடுப்போம்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கருத்துக் கணிப்பு முடிவுகளால் அலட்சியம் வேண்டாம்: அயராது உழைப்போம்; தோழமை சக்திகளுக்குத் தோள் கொடுப்போம் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

நம் உயிருடன் கலந்திருக்கும் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

தேர்தல் களத்தில் ஓய்வின்றி ஓடி ஆடி விழிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கும் உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும், எல்லா திசைகளிலிருந்தும் நம்பிக்கை ஊட்டும் நல்ல செய்திகளே நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன.

தி.மு.கவுக்குப் பெரும் ஆதரவான மக்களின் மனநிலை, அலையாக அல்ல, பேரலையாக எழுந்து உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. பத்தாண்டுகாலம் ஆட்சியில் இருந்து தமிழகத்தை அனைத்து முனைகளிலும் பாழ்படுத்திய அதிமுகவை அந்தப் பேரலை சுருட்டி தூர எறிந்துவிடும் என்பதைத் தமிழக மக்கள் எல்லா இடங்களிலும் நாள்தோறும் திமுகவிற்கு அளித்து வரும் கணிசமான ஆதரவின் வாயிலாக உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஊடகங்களில் - பத்திரிகைகளில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளும் திமுக. தலைமையிலான கூட்டணியின் மகத்தான வெற்றிக்குக் கட்டியம் கூறுகின்றன. இவையெல்லாம் நமக்கு, நமது உழைப்புக்கு, நாம் கொண்டிருக்கும் கோட்பாடுகளுக்கு, ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும் அதே வேளையில், முன்பைவிட நாம் அதிகமான கவனத்துடன் உழைக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் இணைத்தே ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தாலும், எதிராக இருந்தாலும், அதனை மட்டுமே நம்பி சார்ந்திருக்காமல், முன்னெப்போதும் போல களப்பணியாற்றுவதே நம் கடமை என்பதை தலைவர் கருணாநிதி அடிக்கடி நினைவூட்டுவார். மக்கள்தான் வெற்றியைத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்களே என்ற அதீத எண்ணம் மனதில் கடுகளவு குடியேறினாலும், அது களத்தில் மலையளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

தேர்தல் என்பது ஒவ்வொரு வாக்குக்கும் உள்ள ஜனநாயக வலிமையை நமக்கு உணர்த்துவதாகும். வலிமை மிகுந்த அந்த வாக்குகளை மக்கள் நமக்குத் தருவதற்கு ஆயத்தமாக - ஆர்வமாக இருக்கிறார்கள் என்றாலும், அவற்றை வாக்குச்சாவடிக்குக் கொண்டு வந்து சேர்க்கிற நாள் வரையிலும் நம் உழைப்பில் - கவனத்தில் ஒரு சிறு தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது.

தலைவர் கலைஞர் 6-ஆவது முறையாக முதலமைச்சராக அமர வைக்கும் வாய்ப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது வெறும் 1.1% வாக்குகள் வித்தியாசத்தில்தான் கை நழுவிப் போனது.

ஒரு சில தொகுதிகளில் இருந்த அலட்சியத்தின் விளைவால், தமிழகம் அடிமை ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து சிக்கி பாழ்பட்டுக் கிடக்கிறது. எனவே, கருத்துக் கணிப்புகள் தருகிற உற்சாகத்தைவிட, உழைப்பின் மூலம் சேகரித்துச் செலுத்தப்படும் ஒவ்வொரு வாக்கும்தான் உண்மையான உற்சாகத்தை, ஊக்கத்தை வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதியன்று வழங்கிடும். அதற்கேற்ப அயராது, எதையும் அலட்சியம் செய்யாது பணியாற்றிட வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல, இந்தத் தேர்தல் களத்தில் போட்டியிட விரும்பியும் வாய்ப்பு அமையாதவர்களுக்கு உரிய நேரத்தில் - உரிய வாய்ப்பினை திமுக தலைமை நிச்சயம் வழங்கும். களத்தில் நிறுத்தப்பட்டிருப்பவரும் உங்களைப் போன்ற உடன்பிறப்புதான். அனைத்துத் தொகுதிகளிலும் கருணாநிதியே அவர்களே வேட்பாளர் என்ற திட சித்தத்துடன், வெற்றி முகடை நோக்கி ஒவ்வொரு நொடியும் உழைத்திட வேண்டும்.

ஓயாத பரப்புரைப் பயணத்திற்கிடையிலும், ஒவ்வொரு நாளும் தொண்டர்களின் களப் பணிகள் குறித்த விவரங்களை விசாரித்து அறிந்து வருகிறேன். அதுகுறித்த அறிக்கைகளை ஊன்றிப் படிக்கிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் - அதற்குட்பட்ட ஒன்றிய - நகரப் பகுதிகளிலும் - வார்டுகளிலும் திறம்பட செயல்படும் நிர்வாகிகள், உடன்பிறப்புகள் ஆகியோர் குறித்து அறிந்துகொள்கிறேன். அதே நேரத்தில் அலட்சியம் காட்டுகிற ஒரு சில நிர்வாகிகள், ஒதுங்கி நிற்பவர்கள், பெயரளவில் செயல்படுபவர்களையும், நம் வெற்றிப்பயணத்திற்கு வேகத்தடையாக இருப்போரையும் கவனித்தே வருகிறேன்.

அவர்கள் மிக மிகச் சிலராக இருந்தாலும், என் கவனத்திலிருந்து தப்ப முடியாது. திமுகவின் வெற்றிக்கு உழைக்காவிடில், அதன் விளைவுகளை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

உதயசூரியன் உதித்திட வேண்டும் - அனைத்துத் தொகுதிகளிலும் கருணாநிதியே வெற்றி பெற வேண்டும் என்கிற ஆழ்ந்த உணர்வு கொண்ட உடன்பிறப்புகள் ஒருபோதும் ஒரு சிறிதும் அலட்சியம் காட்ட மாட்டார்கள்.

எல்லாத் தொகுதிகளிலும் உதயசூரியனே போட்டியிடுவதாகக் கருதி ஓயாது உழைப்பதே தி.மு.க உடன்பிறப்புகளின் பிறவிக் குணம், ஒருபோதும் மாறாத வழக்கம்.

கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும், அவர்களின் கட்சிகளுக்குரிய சின்னங்களில் போட்டியிட்டாலும் அங்கும் திமுகவே போட்டியிடுகிறது என்கிற ஒற்றைச் சிந்தனையுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றியினை உறுதி செய்திடல் வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், திமுக போட்டியிடுகிற தொகுதிகளைவிடவும் சற்று கூடுதலான அளவில் ஒற்றுமையைக் காட்டி - உழைப்பினை செலுத்தி - தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.

மத்தியில் ஆட்சி செய்யும் மதவாத - மக்கள் விரோத பா.ஜ.க.வும், மாநிலத்தைப் பாழாக்கிய ஊழல் - அடிமை அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்திருக்கின்றன. தமிழக மக்கள் அந்தக் கூட்டணியை முற்றாக நிராகரிப்பார்கள் என்பதைக் களத்தில் நேரடியாகக் காண முடிகிறது. அதே நேரத்தில், ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து - அத்துமீறல்களில் - முறைகேடுகளில் ஈடுபட்டு திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட - குறைத்திட முனைவார்கள். திமுக போட்டியிடும் இடங்களிலோ - தோழமைக் கட்சியினர் போட்டியிடும் இடங்களிலோ குழப்பங்களை உருவாக்கி, தற்காலிகமாகக் குளிர்காய நினைப்பார்கள். குன்றிமணி அளவுகூட அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. நமது வெற்றி இலக்கும் குறைந்திடக் கூடாது.

வெற்றிச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்வரை, நம் உன்னதமான உழைப்புக்கு ஓய்வு என்பதே கிடையாது; நம் கண்களுக்கு உறக்கம் கிடையாது; நம் சிந்தனையில்-செயல்பாட்டில் சிறிதும் சோர்வு கிடையாது.

கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியைத் தரும். சிறு துளிகள் பெருகிச் சேர்ந்து கடலாவது போல, ஒவ்வொரு வாக்கும் கவனமாகச் சேகரிக்கப்படும்போது, வெற்றியின் அளவு வரலாறு காணாத வகையில் உயர்ந்திடும். அதனால், ஒவ்வொரு நாளும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரியுங்கள். ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும், நான் தொலைநோக்குத் திட்டம் எனும் தலைப்பில் அளித்துள்ள 7 உறுதிமொழிகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரை செய்யுங்கள். அடிமை அ.தி.மு.க.வின் அவல ஆட்சியையும் - தேர்தல் நேரத்தில் கொடுத்துள்ள மோசடி வாக்குறுதிகளையும் அம்பலப்படுத்துங்கள்.

தெருக்கள்தோறும், திண்ணைகள் தோறும் பரப்புரையைத் தொடருங்கள். மக்கள் கூடும் இடங்களில் துண்டறிக்கைகளை வழங்கி வாக்கு கேளுங்கள். தனியாக உரையாடும் வாய்ப்புகளிலும், தமிழகத்தை மீட்க வேண்டுமென்றால் தி.மு.க ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதை எடுத்துரைத்து ஆதரவு திரட்டுங்கள்.

அலட்சியம் வேண்டாம்; ஒதுங்கி நிற்காதீர்; முன்னின்று செயல்படுங்கள். தோழமை சக்திகளுக்குத் தோள் கொடுத்திடுங்கள். உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் பாடுபட்டு கண்டுள்ள விளைச்சலில், எந்தவித சேதாரமும் எக்காரணம் கொண்டும் இடையில் ஏற்பட்டுவிட அனுமதியாமல், முழு வெற்றியை அறுவடை செய்வதற்கு, கவனம் சிதறாமல் - கருத்தொன்றி உழைத்திடுங்கள்!

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்