காஞ்சிபுரத்தில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்

காஞ்சிபுரத்தில் தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் அலுவலர்களையும் கண்டித்து வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு வேட்பாளர் ஒருவர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுபவர் மு.மேகநாதன். இவர் புதிய தலைமுறை மக்கள் கட்சியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இவர் பிரச்சாரத்துக்கு வாகன அனுமதி கேட்டு காஞ்சிபுரம் தேர்தல் அலுவலர் அலுவலகத்துக்கு வந்துள்ளார். அவர்கள் சுவீதா செயலி மூலம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்படி கூறியுள்ளனர். அந்தச் செயலிலில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்துள்ளது.

தனக்கு ஆங்கிலம், இந்தி தெரியாது என்றும், தமிழகத்துக்கு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏன் ஆங்கிலத்திலும், இந்தியிலும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். கையால் தமிழில் எழுதப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் ஏற்கவில்லை.

ஆங்கிலம், இந்தியில் மட்டுமே விண்ணப்பங்களை செயலியில் வைத்திருக்கும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், தமிழில் கையால் எழுதி வழங்கும் விண்ணப்பங்களை ஏற்க மறுக்கும் தேர்தல் அலுவலர்களை கண்டித்தும் வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு வேட்பாளர் மேகநாதனும், அவருடன் வந்த இருவரும் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலுக்கு இன்னும் இருவாரங்கள் கூட இல்லாத நிலையில் இவர்கள் வேட்பாளர்களை அலைக் கழிப்பதாகவும், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தமிழை புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து இவர்களை அழைத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இவர் கையால் தமிழில் எழுதிய விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு அனுமதி வழங்குவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE