திமுக ஆட்சியை விட, அதிமுக ஆட்சியில் 13 மடங்கு அதிகமாக தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் புள்ளி விவரம் தெரியாமல் பேசுகிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக வேட்பாளர்கள் எடப்பாடி- முதல்வர் பழனிசாமி, சங்ககிரி சுந்தரராஜன், ஓமலூர் மணி, பாமக மேட்டூர் வேட்பாளர் சதாசிவம் ஆகியோரை ஆதரித்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:
அதிமுக-வின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வந்துள்ளோம். ஜெயலலிதா ஆட்சியின்போது, 12 லட்சம் வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித்தரப்படும் திட்டம் தொடங்கப்பட்டு, 6.50 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டன. 2023-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும். 2016-ம் ஆண்டு பணிபுரியும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் திட்டம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டு வருகிறது.
பெண்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது, அதன் பின் இருக்கையில் ஆண்கள் அமர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஆணும் பெண்ணும் சமம் என்ற பெரியார் கண்ட கனவை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார்.
2015-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, 2.42 லட்சம் கோடிக்கு முதலீடுகள் பெறப்பட்டன. அதில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, 72 திட்டங்கள் முழுமையாக செயல்பாட்டு வந்துள்ளன. 73.71 சதவீதம் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில், 602 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 82.4 சதவீதம் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
2006-ம் ஆண்டு திமுக-வின் மைனாரிட்டி ஆட்சியில் ரூ.45 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடு கொண்டு வரப்பட்டது. அதிமுக-வின் 10 ஆண்டு கால ஆட்சியில் 6.87 லட்சம் கோடி முதலீடு கொண்டு வரப்பட்டு, 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
602 புரிந்துணர்வு ஒப்பந்தகள் செய்யப்பட்டு, அதில் 82.4 சதவீதம் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 26,309 புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியை விட, அதிமுக ஆட்சியில் 13 மடங்கு அதிகம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
திமுக தலைவர் ஸ்டாலின் புள்ளி விவரம் தெரியாமல் பேசுகிறார். நாங்கள் புள்ளி விவரத்தோடு பேசுபவர்கள். தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றும் கட்சி அதிமுக. ஆனால், திமுக அதுபோன்று தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறதா? நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவோம் என்று அறிவித்தார்களே, அதை நிறைவேற்றினார்களா?
திமுக எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டது கிடையாது. காவிரி பிரச்சினையில், 2007-ம் ஆண்டு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தபோது, திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தது. ஆனால், 7 ஆண்டுகளாகியும் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்து, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தார்.
அவர் தன் வாழ்நாளில் மகிழ்ச்சியாக இருந்த ஒரு நாள், நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட நாள்தான் என்று கூறினார். இலங்கைப் பிரச்சினையில், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் வழியில் தடம் பிறழாமல் நல்லாட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி. கூடுதலாக பல திட்டங்களை தமிழகத்தில் செய்து வருகிறார்.
ஒரு மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வருவதே கடினமான செயல். ஆனால், ஒரே ஆண்டில் 10 மருத்துவக் கல்லூரியை அதிமுக அரசு கொண்டு வந்தது. அதை நிறைவேற்றிக் கொடுத்தது மத்திய பாஜக அரசு. மதுரையில் ரூ.1,600 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 240 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
ஓராண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, விலங்குகள் பட்டியலில் காளை கொண்டு வரப்பட்டது. அதனால் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. மெரீனாவில் 15 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, பிரதமர் மோடியை சந்தித்து பிரச்சினையை தெரிவித்தேன். அவர் ஒரே நாளில் 4 துறைகளில் இருந்த தடையை நீக்கி, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்கினார்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் மதக்கலவரங்கள், ஜாதிக் கலவரங்கள் ஏதுமின்றி அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பாக இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழகம், டெல்லி உள்பட எங்கும் சிறுபான்மை மக்களுக்கு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் அதிமுக,பாஜக அரசுகள் தான். திமுக ஆட்சியின்போது, அபகரிக்கப்பட்ட ரூ.3,500 கோடி சொத்துகளை மீட்டு திரும்ப ஒப்படைத்து இருக்கிறோம். திமுக ஆட்சி எந்த நிலையிலும் எப்போதும் திரும்ப வரக்கூடாது என்று மக்கள் நினைக்கிறார்கள்’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago