அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நியாயமான கோரிக்கைகளை எழுப்பியதற்காக அவர்களை வஞ்சித்தது பழனிசாமி அரசு என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 24) தேர்தல் பிரச்சார பயணத்தின்போது, ஆத்தூரில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து பேசியதாவது:
"முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். எதைக் கொடுக்க வேண்டுமோ கொடுத்து, பிரியாணி பொட்டலம், பேட்டா, இப்படி எதை எதையோ கொடுத்து நிற்கவைத்த கூட்டத்திலும் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
நீங்கள் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? என்ற கேள்வியை நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். உடனே அவருக்குக் கோபம் வந்துவிட்டது. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு, 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 3 லட்சம் கோடி முதலீட்டை இந்த தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்று பேசியிருக்கிறார். பொய்… பொய்… பொய்…ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். மாநாடு நடந்தது உண்மை தான். அதேபோல, வெளிநாட்டுக்கு முதல்வர் உட்பட சில அமைச்சர்கள் கோட் - சூட் போட்டுக் கொண்டு சுற்றுலா சென்று வந்தது உண்மைதான். மறுக்கவில்லை.
2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 3 லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்தோம் என்று பழனிசாமி சொல்கிறாரே… அதன் மூலமாக தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தொழிற்சாலைகள் கொண்டு வந்தீர்கள்? எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்கள்? அதற்கு முதலில் விளக்கம் சொல்லுங்கள்.
அதுகுறித்து நான் சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று தொடர்ந்து கேட்டு வந்தேன். மக்கள் மன்றத்திலும் கேட்டு வருகிறேன். அதற்கு பதில் சொல்வதற்கு அவருக்கு தகுதி இல்லை.
அவர் 27 சதவிகிதம் முதலீடு வந்திருக்கிறது என்று ஒரு பொய்யைச் சொல்லி இருக்கிறார். எங்கு தொழிற்சாலை வந்து இருக்கிறது? என்று சொல்ல வேண்டும். அவ்வாறு வந்ததாக எதுவும் தெரியவில்லை. 100 சதவிகிதம் வந்தால்தான் வெற்றியாகும்.
அது மட்டுமல்ல, காவிரியை மீட்டேன்… காவிரியை மீட்டேன்… என்று ஒரு பொய்யை சொல்லத் தொடங்கி இருக்கிறார். அவர் மீட்கவில்லை. கருணாநிதி போல அதிகாரம் பொருந்திய அமைப்பை பழனிசாமி பெற்றுக்கொடுத்தாரா? இல்லை.
மத்திய அரசின் ஜல்சக்தி துறையில் ஒரு கிளை போல அதிகாரமில்லாத வாரியத்தை பாஜகவுக்கு பயந்து பெற்று, டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர்தான் பழனிசாமி. இவ்வாறு அவர் பொய் பேசலாமா? முதல்வர் பதவிக்கு அழகா இது?
நீர்நிலைகளை மீட்டெடுத்தேன். குடிமராமத்து பணிகள் செய்தேன் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
போலி பில் போட்டு பணத்தைச் சுருட்டி இருக்கிறார்களே தவிர, நீர்நிலைகளை எங்கும் தூர்வாரவில்லை. எனவே, அதுவும் ஒரு பொய் என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவந்தேன் என்று சொல்கிறார். நேற்று உதயநிதிதான் செங்கலை எடுத்து எல்லா இடங்களிலும் காண்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் எய்ம்ஸ் அடிக்கல்லை எடுத்துக் காண்பித்திருக்கிறார்.
2014-ம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றபோது மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடியை தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணத்திற்காக மதுரைக்கு அழைத்து பிரதமர் வந்த போது அதற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தினார்கள். இப்போது 2021.
இதுவரையில் ஒரு இன்ச் வேலை கூட நடக்கவில்லை. இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. இவ்வாறு தமிழகத்திற்கு துரோகத்தை செய்து கொண்டிருக்கும் ஆட்சிதான் மோடி தலைமையில் இருக்கும் பாஜக ஆட்சி, அதற்கு ஒத்து ஊதி அடிபணிந்து கூனிக் குறுகிக் கிடக்கும் பழனிசாமியின் ஆட்சி.
அதேபோல காவிரி - வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றி விட்டதாக ஒரு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டு விழா நாடகம் நடந்தது.
அந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமரை அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அவ்வாறு பிரதமர் வருவதாக எங்களுக்குச் செய்தி கிடைத்தது.
உடனே நான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'நீங்கள் தமிழ்நாட்டுக்கு வரும் போது பல அடிக்கல் நாட்டு விழாக்களில் கலந்து கொள்ளப் போகிறீர்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆனால், காவிரி - வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு நிகழ்ச்சி நடத்துவதாக நாங்கள் செய்தி கேள்விப்பட்டோம். ஆனால், அது ஏற்கெனவே தலைவர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம். எனவே, அந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்கி வைப்பதாக ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதை நீங்கள் திறந்து வைத்தால் நீங்கள் கேலிக்கு விமர்சனத்துக்கு ஆளாகி விடுவீர்கள்' என்று சொன்னேன்.
அது பிரதமருக்குத் தெரிந்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். ஆனால், அதற்குப் பிறகு அந்த நிகழ்ச்சியை அவர் இல்லாமலேயே நடத்தி இருக்கிறார்கள். கருணாநிதி அந்தத் திட்டத்தை தொடங்கியபோது 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டளைப் பகுதியில் கதவணை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறுத்தி விட்டார்கள். இப்போது இவர்கள் புதிதாக செய்ததாக ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பொய்யிலேயே இன்றைக்குக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல, தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக நாங்கள் மாற்றி விட்டோம் என்று ஒரு பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
மின்மிகை மாநிலம் என்றால் என்ன? அரசாங்கம் தானாக மின் உற்பத்தி செய்து, அதில் மீதமிருக்கும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு கொடுத்தால் அது மின்மிகை மாநிலம்.
ஆனால், இங்கு எந்த உற்பத்தியும் இல்லை. வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தைக் கடனாக வாங்குகிறார்கள். அவ்வாறு வாங்கும்போது அதில் கமிஷன் கிடைக்கிறது. அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு மின்மிகை மாநிலமாக மாற்றி விட்டோம் என்று ஒரு பொய்யான தகவலைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கமணி எந்த அளவுக்கு ஊழல் செய்து கொண்டிருக்கிறார் என்பதை நானல்ல, பொதுவாக இருக்கும் அறப்போர் இயக்கத்தின் சார்பில் அதைக் கண்டுபிடித்து ஆதாரத்தோடு பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டி கொடுத்து இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் அந்த வழக்கு பதிவாகி இருக்கிறது.
அடுத்து டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து விட்டோம் என்று முதல்வர் பழனிசாமி சொல்கிறார். ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்கள் பாதிக்காத வகையில் அவற்றைப் பாதுகாத்து இருக்கிறாரே தவிர, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுகிற முயற்சியில் இம்மியளவும் பழனிசாமி ஆட்சி ஈடுபடவில்லை என்பது தான் உண்மை.
இவ்வாறு சாதனையே செய்யாமல் நாங்கள் சாதனைகளைச் செய்தோம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.
உளுந்தூர்பேட்டையில் எம்எல்ஏ ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் குமரகுரு. அவரை பழனிசாமிக்கு 'ஆல் இன் ஆல்' என்று சொல்கிறார்கள். அந்தப் பகுதியில் இருக்கும் காண்ட்ராக்ட் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் காண்ட்ராக்ட்களை தீர்மானிப்பவர். அவர்தான் முதல்வருக்கு வலதுகரம் போன்றவர். அது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த தொகுதி மக்களுக்கு இந்த மாவட்டத்திற்கு ஏதாவது திட்டங்களை கொண்டு வந்திருக்கிறாரா? எதுவும் கொண்டு வரவில்லை. கரோனா காலத்தில் மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
ஆளுங்கட்சியின் எம்எல்ஏக்களின் நிலை இதுவென்றால், அமைச்சர்கள் எவ்வளவு சொத்துகள் சேர்த்திருக்கிறார்கள் என்று 'தி இந்து' பத்திரிகையில் ஆதாரத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள்.
அவர்கள் எவ்வாறு கண்டுபிடித்துள்ளார்கள் என்றால் தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்கள் வேட்பு மனுவில் சொத்து மதிப்பைக் குறிப்பிட வேண்டும். அதை மறைக்க முடியாது. அதை எடுத்து அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
ஒவ்வொரு மந்திரியும் எவ்வளவு சொத்து சேர்த்து இருக்கிறார்கள் என்று தெளிவாக போட்டு இருக்கிறார்கள்.
அதில் துணை முதல்வரின் சொத்து மதிப்பு 409 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு 359 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆர்.பி.உதயகுமாரின் சொத்து மதிப்பு 475 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. செல்லூர் ராஜூவின் சொத்து மதிப்பு 445 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 576 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கே.பி.அன்பழகனின் சொத்து மதிப்பு 683 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
இவையெல்லாம் கணக்கு காட்டியது, இன்னும் கணக்கு காட்டாமல் எவ்வளவு இருக்கிறதோ அது வேறு. எனவே, பினாமி பெயரில் உறவினர்கள் பெயரில் வெளிநாடுகளில் இங்கிருக்கும் அமைச்சர்களின் சொத்துகள் குவிந்து இருக்கிறது.
கொள்ளையடித்து இருக்கும் இவை எல்லாம் இப்போது வெளி வருகிறதோ இல்லையோ நாம் தான் விரைவில் ஆட்சிக்கு வரப்போகிறோம். வந்தவுடன் முதல்வரிலிருந்து கடைக்கோடியில் இருக்கும் அமைச்சர்கள் வரையில் செய்திருக்கும் ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறோம். அவர்கள் அத்தனை பேருக்கும் நிச்சயமாக உரிய தண்டனை வழங்கப்படும். யார் விட்டாலும் இந்த ஸ்டாலின் விடமாட்டான். அதில் அழுத்தந்திருத்தமாக இருப்பான். ஏனென்றால், அவர்கள் கொள்ளையடித்திருக்கும் பணம் மக்களின் வரிப்பணம்.
அதேபோல, இன்றைக்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எத்தனையோ கோரிக்கைகளை வைத்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு போராடிக் கொண்டிருக்கும் அவர்களை, இந்த ஆட்சி அழைத்து பேசவில்லை. போராடியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. மேலும், முதல்வர் பழனிசாமி போராடுகிற அதிகாரிகளை, அரசு ஊழியர்களை பார்த்து, 'ஐந்தாம் வகுப்பு தலைமை ஆசிரியர் 82 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்' என்று கொச்சைப்படுத்தி பேசினார். வாழ்நாள் முழுவதும் அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிக் கூறவில்லை. அவர்களைக் கொச்சைப்படுத்தி அவர்கள் வாங்கிய சம்பளத்தை வெளிப்படுத்தி கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
அதேபோல, கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன், 'ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாவிட்டால் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.
போராடுகிற ஆசிரியர்களை அழைத்து இந்த அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால், ஒருமுறை கூட அவர்களை அழைத்து இந்த அரசு பேசவில்லை.
அதேபோல, துணை முதல்வர் பன்னீர்செல்வம், 'ஆசிரியர்கள் செய்த தவறுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது' என்று பேசுகிறார். அவர்கள் கேட்டது நியாயமானது. பத்தாண்டு காலமாக சம்பளத்திலிருந்து செலுத்திய எணம் எங்கே? அதற்குக் கணக்கு எங்கே என்று கேட்டார்கள். இவ்வாறு கேட்டது தான் அவர்கள் செய்த குற்றமா?
எனவே, வஞ்சிக்கப்பட்ட ஆசிரியர்களே அரசு ஊழியர்களே நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் காவலராக இருந்தவர் நம்முடைய தலைவர் கருணாநிதி. அந்தத் தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் இருக்கிறேன். கவலைப்பட வேண்டாம்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago