எய்ம்ஸ் மருத்துவமனையைக் கையோடு கொண்டு வந்துள்ளேன்: செங்கல்லைக் காட்டி உதயநிதி சுவாரஸ்ய பிரச்சாரம்

எய்ம்ஸ் தமிழகத்துக்கு வரவே இல்லை எனப் பலரும் பலவிதமாகப் பேசிவரும் நிலையில், கையில் ஒரு செங்கல்லை வைத்துக்கொண்டு இதோ எய்ம்ஸ் மருத்துவமனை என்று உதயநிதி பிரச்சாரம் செய்தார். வாக்காளர்கள் அதை ரசித்தனர்.

தமிழகத்தில் வாக்காளர்களைக் கவர தலைவர்கள் பலவிதமாகப் பிரச்சரம் செய்து வருகின்றனர். பேச்சுவன்மை மிக்க தலைவர்கள், அடுக்கடுக்காக சாதனைகளை அல்லது ஆளுங்கட்சியை விமர்சித்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சிலர் உருக்கமாக தனக்கு என்னென்ன நோய் இருக்கிறது என்றெல்லாம் கூறி வாக்காளர்கள் மனதைத் தொட முயல்கின்றனர். முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவருக்கொருவர் கேள்வி- பதில் பாணியில் பிரச்சாரம் செய்கின்றனர்.

சிலர் சுரத்தே இல்லாமல் ஏதோ பேச வேண்டுமே என்று பேசி வருவதையும் காணமுடிகிறது. இதில் திமுக இளைஞரணிச் செயலாளர் ஒருவகை உத்தியைக் கையில் எடுத்துள்ளார். பேச்சு ஆளுமை மிக்க கருணாநிதியின் பேரனான உதயநிதி ஸ்டாலின், தாத்தாவைப் போல், அப்பாவைப் போல் அல்லாமல் எளிய முறையில் உரையாடல் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார். இது வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது.

இதற்காக நான் எதுவும் செய்யவில்லை. எனக்கு எது வருகிறதோ, அதைப் பேசுகிறேன். மக்கள் ரசிக்கிறார்கள் என உதயநிதி சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டப்பட்டு 4 வருடத்தை நெருங்கிய நிலையில், அதற்கான ஒரு சிறு ஆரம்பக்கட்டப் பணிகூட நடக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ள மத்திய அரசு, தமிழகத்துக்குச் சொற்ப அளவில் நிதி ஒதுக்கியுள்ளதையும் எதிர்க்கட்சியினர் பிரச்சாரத்தில் ஆவேசமாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதே பிரச்சினையைத் தனது பாணியில் கையிலெடுத்து மக்களிடம் பிரச்சாரம் செய்த உதயநிதி எய்ம்ஸில் அடிக்கல் நாட்டியதோடு சரி, கட்டுமானப் பணிகள் எதுவுமே தொடங்கவில்லை என்பதை நகைச்சுவையாக வாக்காளர்களிடம் எளிய முறையில் விளக்கினார்.

நேற்று சாத்தூரில் பேசிய அவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விமர்சித்தார். அதிமுகவில் இருந்துகொண்டு மோடிதான் எங்கள் டாடி என்று சொல்கிறார் ஒரு அமைச்சர். இப்படிப்பட்ட அமைச்சர் தேவையா? என்று உதயநிதி கேள்வி எழுப்பினார்.

பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிப் பேசிய உதயநிதி, “உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். அதைக் கையோடு எடுத்து வந்துவிட்டேன். மதுரையில் அதிமுகவும், பாஜகவும் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான்” எனக் கூறி ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டினார்.

“இதுதான் அவர்கள் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை. அங்கு போனபோது இருந்தது. கையோடு எடுத்து வந்துவிட்டேன். பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் மதுரையில் அவர்கள் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை” என்று நாலாபுறமும் செங்கல்லைத் தூக்கிக் காட்டினார். அதை அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் வெகுவாக ரசித்தனர்.

ஒரு பிரச்சினையை மக்களிடம் கொண்டுசெல்ல எளிமையாகக் கையாண்ட பிரச்சார உத்தி வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE