திமுக கூட்டணியை அழகிரி அவதாரம் பாதிக்குமா?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் பத்துக்கு ஒன்பது தொகுதிகளை திமுக கூட்டணிதான் வென்றெடுத்தது. இந்நிலையில், திமுக-வுக்கு எதிராக கொடிபிடிக்கும் அழகிரியால் இந்தமுறை தென் மாவட்டங்களில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாதிப்பு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 27 இடங்களிலும் அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் வெற்றிபெற்றது. மு.க.அழகிரியின் பொறுப்பில் இருந்த தென் மாவட்டங்களின் 10 தொகுதிகளில் தென்காசியை தவிர அனைத்தையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. இந்த மகத்தான வெற்றியின் பின்னணியில், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளரான அழகிரியின் களப்பணியும் இருந் ததாக பேசப்பட்டது.

ஆனாலும் 2011-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டத்திலேயே ஒரு தொகுதியில் கூட திமுக ஜெயிக்கவில்லை. அழகிரியின் ஆளுமைக்குள் இருந்த தேனி, திண்டுக்கல், சிவ கங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியை மட்டுமே திமுக வென்றெடுக்க முடிந்தது.

ஆளும் கட்சி என்ற செல்வாக்கு இருந்தும் அந்தத் தேர்தலில் அழகிரியின் வியூகம் தோற்றுப் போனது. இந்த நிலையில், இப்போது திமுக-விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள அழகிரி, திமுக வேட்பாளர்களுக்கு எதிராக களமிறங்கியுள்ளார். இதை தங்களுக்குச் சாதமாக அறு வடை செய்துகொள்ள அதிமுக, கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து அத்தனை கட்சிகளும் அலைமோதுகின்றன.

இதுவரை அழகிரி தனது ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாக அறிவிக்க வில்லை. ஆனாலும், திமுக-வை தோற்கடிக்க இந்தமுறை அவர் வகுக்கும் வியூகங்கள் நிச்சயம் வெற்றிபெறும் என்கிறது அழகிரி விசுவாச வட்டாரம்.

ஆனால், அழகிரி எடுத்திருக்கும் அஸ்திரம் திமுக கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பரபரப்புச் செய்திகளோடு அது அடங்கிப் போகும் என்கிறது திமுக வட்டாரம். எது எப்படியோ, திமுக-வின் தோல்வியில்தான் அழகிரியின் அரசியல் எதிர்காலமே அடங்கி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE