அமமுகவை நோக்கி மக்கள் திரளுவதைப் பொறுக்காதவர்கள் கருத்துச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் உண்மையான மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு, மோசடியான கருத்துக் கணிப்புகளை வெளியிடச் செய்து குறுகிய கால சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு இன்று எழுதியுள்ள கடிதம்:
“பாசமிகு கழக உடன்பிறப்புகளுக்கு,
கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிவதைக் கட்டாயமான வழக்கமாக்கிக் கொள்ளும்படி நான் விடுத்த வேண்டுகோளை நீங்கள் எல்லாம் தவறாமல் கடைப்பிடித்து வருவது உள்ளபடியே மகிழ்ச்சியைத் தருகிறது. இதே விழிப்புணர்வை பொதுமக்களிடத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
அமமுக காணாமல் போய்விட்டது. தனிமரம் ஆகிவிட்டோம் என்றெல்லாம் நம்மைப் பார்த்து எள்ளி நகையாடியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போகும் அளவுக்கு, பலரும் உற்றுநோக்கும் வகையில் மதிப்புமிக்க ஏழு கட்சிகளை இணைத்துக்கொண்டு ஒரு வெற்றிக் கூட்டணியை அமைத்திருக்கிறோம்.
எந்தவிதக் கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்காமல் சுமுகமான முறையில் நமக்கிடையே தொகுதிப் பங்கீடுகளைச் செய்ததன் விளைவாக, அமமுக 161 தொகுதிகளிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி 6; மருது சேனை சங்கம், கோகுலம் மக்கள் கட்சி, மக்கள் அரசு கட்சி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதி எனமொத்தம் 171 இடங்களில் குக்கர் சின்னம் களம் காண்கிறது.
அதுபோல தேமுதிக 60 தொகுதிகளில் முரசு சின்னத்திலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 3 தொகுதிகளில் பட்டம் சின்னத்திலும் களம் காண்கின்றன. வேட்பாளர் தேர்வு முதல் தொகுதி ஒதுக்கீடு வரை பலருக்கும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் இருந்ததை நான் அறிவேன். பணமூட்டைகளுடன் களமிறங்கியுள்ள துரோகிகள் கூட்டத்தையும், தீய சக்தி திமுகவையும் தோற்கடித்துக்காட்ட வேண்டிய கட்டாய சூழலை நீங்களும் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த முறை வாய்ப்பு கிடைக்காதவர்கள், இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த யதார்த்தத்தை உணர்ந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். இப்போது வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பிற வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதை மீண்டும் நினைவுபடுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டணிக் கட்சியினர் எப்படி நமக்காக முழு மூச்சோடு உழைக்கிறார்களோ, அதுபோல நாமும் அனைத்துத் தொகுதிகளிலும் குக்கர் சின்னமே களம் காண்பதாக நினைத்து முழுமையான உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்.
நான் இதுவரை பிரச்சாரத்திற்கு போன இடங்களில் எல்லாம் கிடைக்கும் வரவேற்பும் மக்கள் எழுச்சியும் என்னைத் திக்குமுக்காடச் செய்கிறது என்பதுதான் நிஜம். அந்த அளவுக்கு உங்கள் உழைப்பின் பயனை, அது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை நான் தினந்தோறும் உணர்கிறேன்.
அதுபோல பெரிய பெரிய கட்சிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் மற்றும் அதில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை நம்ப மறுக்கும் மக்கள், நமது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை அளிக்கும் திட்டம், கிராமப்புற மக்கள் மற்றும் மகளிர், இளைஞர், மாணவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என பல தரப்பினரின் முன்னேற்றத்திற்கென நாம் அறிவித்திருக்கும் பல்வேறு வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றித் தருவோம் என்று மனதார நம்புகிறார்கள். அதன் காரணமாகத்தான் நம்மை நோக்கி மக்கள் கூட்டம் திரள்கிறது.
எதிர்பார்த்தது போலவே இது துரோகிகளின் கண்களையும்; தீய சக்தியின் கண்களையும் உறுத்தியதை சில தினங்களாக வெளிவரும் கருத்துத் திணிப்புகள் மூலம் நம்மால் அறிய முடிகிறது. கருத்துச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் உண்மையான மக்களின் உணர்வுகளை புறந்தள்ளிவிட்டு, மோசடியான கருத்துக் கணிப்புகளை வெளியிடச் செய்து குறுகிய கால சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள்.
மக்கள் இதை ஒரு பொருட்டாகக் கூட மதிக்க மாட்டார்கள். அதுபோல நமது உழைப்பின் வேகத்தைக் குறைக்க நடக்கும் முயற்சிகள்தான் இவை என்பதை நீங்களும் உணர்ந்து, முழு மூச்சுடன், விசுவாசம் மற்றும் கொள்கை உறுதியோடு களப்பணியாற்றி வெற்றியை நமதாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago