ஒட்டுமொத்தத் தமிழகத்தை மீட்கத்தான் இந்தத் தேர்தல் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 23) தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது, வேப்பனஹள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்குச் சேகரித்துப் பேசியதாவது:
"ஏதோ தேர்தலுக்காக மட்டும் வந்து போகிறவன் இந்த ஸ்டாலின் அல்ல. எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட நேரத்திலும் உங்கள் வாழ்வில் ஏற்படும் சுக துக்க நிகழ்ச்சிகளில் உரிமையோடு பங்கேற்பவன்தான் இந்த ஸ்டாலின்.
இவர்கள் மட்டும் வேட்பாளர்கள் அல்ல. நானும் ஒரு வேட்பாளர்தான். ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கும் வேட்பாளராக நிற்கிறேன். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதல்வர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத் தந்த அந்த உரிமையோடு வந்திருக்கிறேன்.
இதுவரையில் இருந்த அரசுகளிலேயே ஊழல் மிகுந்த அரசு 1991-96 இல் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகதான். ஆனால், இப்போது அதையெல்லாம் தாண்டி பழனிசாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சி தான் படுபயங்கரமான ஊழல் ஆட்சியாக இருக்கிறது.
கமிஷன் - கரப்ஷன் – கலெக்சஷன் இதனையே தொழிலாகக் கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடிய சர்வாதிகார ஆட்சி இது.
அவர்கள் என்ன ஊழல் - எதில் கமிஷன் - எப்படி கலெக்சன் செய்கிறார்கள் என்று ஆதாரங்களோடு திமுகவின் சார்பில் ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம்.
முதல்வர் பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறையில், 3,000 கோடிக்கு மேல் அவருடைய சம்பந்தி, சம்பந்தியின் சம்பந்திக்கு டெண்டர் விட்டதில் ஊழல் நடந்திருக்கிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் உள்ளன. அமெரிக்க நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சர்வீஸ் நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் போடுகிறார்கள். அந்த ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. டாலரில் லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள் என்று அந்த நிறுவனமே நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இருக்கிறார்கள்.
உள்ளாட்சித் துறை – ஊழல் ஆட்சித் துறை அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சித் துறையின் மூலமாக தெருவிளக்கு மாற்றுவதில், ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதில், கரோனா காலத்தில் பல கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, நிலக்கரி இறக்குமதியில் ஊழல், காற்றாலை ஊழல், மின் கொள்முதலில் ஊழல், உதிரி பாகங்கள் கொள்முதல் செய்வதில் ஊழல் எனப் பல கோடி ரூபாய் அவர் துறையில் ஊழல் நடந்திருக்கிறது.
மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார், மீனவர்கள் பாதுகாப்புக்காக வாங்கும் வாக்கி டாக்கியில் கொள்ளை அடித்திருக்கிறார்.
வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், பாரத் நெட் டெண்டரில் ஊழல் செய்திருக்கிறார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குட்கா விஜயபாஸ்கர், குட்காவை காவல்துறையினர் துணையோடு சதவிகிதக் கணக்கில் கமிஷன் வாங்கிக்கொண்டு தாராளமாக விநியோகிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். அதில் கோடி கோடியாக கொள்ளை அடித்து இருக்கிறார். குவாரி ஊழல், கரோனா தடுப்புக்கான கொள்முதலில் ஊழல் என அவரது ஊழல் பட்டியல் மேலும் நீள்கிறது.
உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கரோனா காலத்தில் மத்திய அரசிடமிருந்து வந்த அரிசியை கொள்முதல் செய்ததில் கோடி கோடியாக கொள்ளை அடித்து இருக்கிறார்.
எனவே, ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஒரு ஊழல் கேபினட்தான் இப்போது இருக்கும் அதிமுக ஆட்சி.
ஆனால், முதல்வர் பழனிசாமி அடிக்கடி, 'நான் வெளிப்படையான நிர்வாகத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை' என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இவர் சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய, அப்பட்டமான அபாண்டமான பொய். இதை நான் சொல்லவில்லை. பொதுவாக இருக்கும் அறப்போர் இயக்கம் சார்பில் பத்திரிகையாளர்களிடம், 'ஒரு குறிப்பிட்ட டெண்டர் இன்னாருக்குத்தான் கிடைக்கும்' என்று முன்கூட்டியே கூறியது.
அவ்வாறு அறப்போர் இயக்கம் யாருக்கு அறிவித்ததோ அவர்களுக்கே அந்த டெண்டர் வழங்கப்பட்டிருக்கிறது.
நெடுஞ்சாலைத்துறையாக இருந்தால் சம்பந்திக்கு கொடுக்கிறார்கள். எஸ்.பி.வேலுமணியாக இருந்தால் அவருடைய சகோதரர்களுக்கு, பினாமிகளுக்கு கொடுக்கிறார்கள். அமைச்சர்கள் எல்லாம் இன்னாருக்குத்தான் டெண்டர் என்று பிரித்து, பிரித்து கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் இந்த ஒருமாத கால இடைவெளியில் ஏறக்குறைய 3,000 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதுதான் இந்த ஆட்சியின் லட்சணம்.
அதனால்தான் திமுகவின் தேர்தல் அறிக்கையில், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக முதல்வரிலிருந்து அமைச்சர்கள் வரை என்னென்ன ஊழல்கள் செய்து இருக்கிறார்களோ, அந்த ஊழல்களை கண்டுபிடிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியை அறிவித்திருக்கிறோம்.
ஒரு அதிமுக எம்எல்ஏ கூட வெற்றி பெறக்கூடாது. அப்படி வெற்றி பெற்றால் அவர் பாஜக எம்எல்ஏவாக மாறிவிடுவார். பாஜக வருவதற்கான வாய்ப்பே இல்லை.
எனவே, இந்த உதவாக்கரை ஆட்சிக்கு நாம் பாடம் புகட்டுவதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு சொல்வதற்கு காரணம், பாஜகவுக்கு, மோடிக்கு கைகட்டி ஒரு அடிமையாக இன்றைக்கு பழனிசாமி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
காவிரி உரிமையை நிலைநாட்ட முடிந்ததா? நீட் தேர்வை தடுக்க முடிந்ததா? ஜிஎஸ்டி வரியைக் குறைக்க போராட முடிந்ததா? தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியைப் பெற முடிந்ததா? மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர முடிந்ததா? இந்த லட்சணத்தில் வெட்கமே இல்லாமல் மோடியை 'டாடி' என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது தான் வேடிக்கை.
இந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சத்துணவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் வேலை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். முதல்வரும் அமைச்சர்களும் கோட்டுப் போட்டுக்கொண்டே வெளிநாடு சென்று வந்தார்களே தவிர, யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில் நிறுவனங்களும் கொண்டுவரப்படவில்லை.
தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டைக் கொண்டுவந்து நுழைத்து, மத வெறியைத் தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.
இது திராவிட மண். பெரியார் - அண்ணா - கருணாநிதி வாழ்ந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது.
ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது மட்டுமல்ல இந்த தேர்தல். நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்படவேண்டும். தன் மானம் காப்பாற்றப்பட வேண்டும். நாம் இழந்திருக்கும் உரிமையை மீட்டிட வேண்டும்.
எனவே ஒட்டுமொத்தத் தமிழகத்தை மீட்கத்தான் இந்தத் தேர்தல் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது".
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago