முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி திமுகவிலிருந்து சஸ்பெண்ட்: துரைமுருகன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் அரசியலுக்கு வந்து 1980களில் அமைச்சராகவும், பின்னர் எம்.பி.யாகவும் பதவி வகித்து ஜெயலலிதாவுடன் பிணக்கு ஏற்பட்டு திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்த கரூர் ம.சின்னசாமி திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமை இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் ம.சின்னசாமி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்”.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கரூர் ம.சின்னசாமி யார்?

2014 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் கரூர் ம.சின்னசாமி (70). 1972ஆம் ஆண்டு முதல் தனது அரசியல் பணியை ஆரம்பித்தவர் சின்னசாமி. பின்பு அதிமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 1980 -1984 வரை எம்எல்ஏவாக இருந்தார். 1991- 96 ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் 3 ஆண்டுகள் தமிழகத் தொழில்துறை அமைச்சராக இருந்தார்.

1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை கரூர் எம்.பி.யாக இருந்தார். அதிமுக தலைமையோடு ஏற்பட்ட மோதல் காரணமாக அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் திமுகவில் இணைந்தார். தற்போது மாநில விவசாய அணிச் செயலாளராகப் பதவி வகிக்கின்றார். ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

சமீபகாலமாக செந்தில் பாலாஜி திமுகவுக்கு வந்ததிலிருந்து அவருக்கும் செந்தில் பாலாஜிக்கும் ஒத்துப்போகவில்லை என்று கூறப்பட்டது. அவர் மீண்டும் அதிமுகவுக்குத் தாவ உள்ளதாகக் கடந்த ஆண்டு தகவல் வெளியானது. ஆனால், திமுகவிலேயே தொடர்ந்தார். இந்நிலையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக அவர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டாலின் மீது விமர்சனம்

இந்நிலையில் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்துள்ளார் ம.சின்னசாமி. அவர் நல்லவர்தான். ஆனால், கருணாநிதிபோல் ஆளுமை உள்ளவர் அல்ல. ஸ்டாலினை அவரது குடும்பத்தில் உள்ள சிலர் இயக்குகிறார்கள் என்று சின்னசாமி தெரிவித்துள்ளார். இன்று அதிமுகவில் இணைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE