அமைச்சர் ஜெயக்குமாரைச் சென்ற தேர்தலிலேயே தூக்கியெறிய மக்கள் தயாராக இருந்தனர்: திமுக வேட்பாளர் 'ஐ ட்ரீம்ஸ்' மூர்த்தி

By செய்திப்பிரிவு

உங்கள் வீட்டுப் பிள்ளை எனக்கூறி வரும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஒரு மீனவருக்குக் கூட வேலை வாங்கித் தரவில்லை என, ராயபுரம் தொகுதியில் அவரை எதிர்த்துக் களமிறங்கியுள்ள திமுக வேட்பாளர் 'ஐ ட்ரீம்ஸ்' மூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (மார்ச் 23) செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"ஜெயக்குமார் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். சட்டத்துறை அமைச்சராக இருந்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்குப் பொறுப்பாளராக இருந்தார். ஆனால், ஒரு மீனவருக்கு அவர் அரசு வேலை வாங்கித் தந்தாரா? இந்த 26 ஆண்டு காலத்தில் இதற்கு ஒரு உதாரணம் கூட அவரால் சொல்ல முடியாது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 தேர்வு எழுத இந்தத் தொகுதியில் ஒரு பயிற்சி மையம் அமைத்திருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை. ராயபுரம் பகுதியில் இந்த 25 ஆண்டு காலத்தில் ஒரு கல்வி நிலையத்தைக் கூட அவர் தொடங்கவில்லை.

அமைச்சர் ஜெயக்குமார்

ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகள் மீனவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி. இங்கு மூன்று கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் வேண்டும். ஆனால், அவர் ஒன்றுகூட திறக்கவில்லை. ராயபுரத்தில் ஒரு கலைக்கல்லூரி கூட கிடையாது. இங்கு மிகப்பெரிய இடங்கள் இருக்கின்றன.

கடந்த முறை இத்தொகுதியில் திமுக தோற்றதற்கு வேட்பாளர்கள்தான் காரணமே தவிர திமுக காரணம் அல்ல. ராயபுரம் மனோ திமுக சார்பில் இங்கு நின்றார். அவரின் சில செயல்பாடுகளால்தான் ஜெயக்குமார் வெற்றி பெற்றார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவர் வெற்றி பெற்றார். அவர் நம்ம வீட்டுப் பிள்ளை, எங்க வீட்டுப் பிள்ளையெல்லாம் கிடையாது. மக்கள் சென்ற தேர்தலிலேயே அவரைத் தூக்கியெறிய தயாராகத்தான் இருந்தனர். திமுக வேட்பாளர் சரியாக நடந்துகொள்ளாததால் அவர் வெற்றி பெற்றார்".

இவ்வாறு 'ஐ ட்ரீம்ஸ்' மூர்த்தி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE