சேலம் அருகே தேர்தல் நிலைக்குழு சோதனை: ஆவணங்கள் இன்றி வேனில் எடுத்துவரப்பட்ட ரூ.1.93 கோடி பறிமுதல்

சேலம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி என்ற இடத்தில் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதியின் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் ஒரு கோடியே 93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலத்தை அடுத்த அயோத்தியாபட்டினம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி என்ற இடத்தில் வாசுதேவன் தலைமையிலான ஏற்காடு சட்டப்பேரவை தொகுதியின் நிலை கண்காணிப்பு குழுவினர், நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து, வேனில் பணம் எடுத்துக்கொண்டு, தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி யினர் வந்தனர். அந்த வேனை நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையிட்ட போது, அதில் கட்டு கட்டாக, ரூ 1.95 கோடி பணம் இருந்தது தெரியவந்தது. சேலம் குகையில் உள்ள தனியார் வங்கியின் கிளை ஒன்றில் ஒப்படைப்பதற்காக இந்தத் தொகை எடுத்து வரப்பட்டதாக , வேனில் வந்த தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஆனால், வங்கிக்கான பணத்தை எடுத்து வரும்போது பின்பற்றவேண்டிய ரூட் சார்ட் மற்றும் பணம் வங்கிகளில் பெறப்பட்ட நேரம் போன்ற எந்தவிதமான ஆவணங்களையும் எடுத்து வரவில்லை. மேலும், வேனில் வங்கி ஊழியர்கள் எவரும் இல்லை. எனவே, வாசுதேவன் தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், வேனில் எடுத்துவரப்பட்ட ஒரு கோடியே 93 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து வாழப்பாடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் முதல் முறையாக இப்போதுதான் அதிகபட்சமாக சுமார் இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE