மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அல்ல; சமஸ்கிருத வளர்ச்சித் துறை அமைச்சர்: ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

கீழடி தமிழர் பண்பாட்டை பாரதப் பண்பாடு என்று சொல்லி மழுங்கடித்த மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சிச் துறை அமைச்சர் அல்ல, சமஸ்கிருத வளர்ச்சித் துறை அமைச்சர். அவரைத் தோற்கடிப்பது முதல் கடமை என்று ஸ்டாலின் பேசினார்.

ஆவடியில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

“தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பாழ்பட்டுப் போயிருக்கிறது. ஐம்பதாண்டு காலம் பின்னோக்கிச் சென்றிருக்கிறது. ஆனால், தமிழக முதல்வர் பழனிசாமி, ஊர் ஊராகச் சென்று நான் சிறப்பாக ஆட்சி நடத்துகிறேன். சிறப்பாக மக்களுக்காகத் தொண்டு செய்கிறேன் - எனக்குப் பல விருதுகள் வந்து சேர்ந்துள்ளன என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆங்கில நாளிதழிலிருந்து எனக்குப் பல விருதுகள் கிடைத்துள்ளன என்று சொல்லி இருக்கிறார். அது உண்மைதான். ஆனால், அந்தக் கட்டுரையைத் தெளிவாகப் படித்தால் உண்மை புரியும். அதில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் என்று சொல்லி அதற்குக் காரணம், 50 ஆண்டுகாலமாக பல்வேறு சமூகப் பணிகளையாற்றியதால் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அதற்கு அடுத்த பக்கத்தில் இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் மட்டும் கணக்கெடுத்து ஆங்கில நாளிதழ் அளவீடு செய்கிறது. அதில் தமிழ்நாடு எத்தனையாவது இடம் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

உட்கட்டமைப்பில் 20-வது இடத்தில் இருக்கிறது, 5 ஆண்டுகளின் செயல்பாட்டில் 19-வது இடத்தில் இருக்கிறது, விவசாயத்தில் 19-வது இடத்தில் இருக்கிறது, சுற்றுலாவில் 18-வது இடம், அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் 18-வது இடம், தொழில்முனைவோர் முன்னேற்றத்தில் 14-வது இடம், ஆட்சி நிர்வாகத்தில் 12-வது இடம்.

தூய்மையில் 12-வது இடம், சுகாதாரத்தில் 11-வது இடம், கல்வியில் 8-வது இடம், பொருளாதார வளர்ச்சியில் 8-வது இடம், சுற்றுச்சூழலில் 6-வது இடம், சட்டம் ஒழுங்கில் 5-வது இடம், இதுதான் பழனிசாமி வாங்கியிருக்கும் இடம். பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்திருக்கும் பழனிசாமி இன்றைக்கு விவசாயி, விவசாயி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்,

மொத்தம் 20 மாநிலங்களில் கணக்கெடுத்ததில் விவசாயத்தில் தமிழ்நாடு 19-வது இடத்தில் இருக்கிறது. இந்த லட்சணத்தில் நான் வாங்கிய விருதுகளை திமுக வாங்கி இருக்கிறதா? என்று ஒரு கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

திமுக வாங்கிய விருதுகளை நான் சொன்னால் ஒரு நாள் போதாது. விருது என்றால் விருது கொடுப்பவர்கள் உயர்வான இடத்தில் இருக்க வேண்டும் அல்லது அனைவருக்கும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும், திமுக ஆட்சிக் காலத்தில் அப்படித்தான் பல விருதுகளை நாம் வாங்கியிருக்கிறோம்.

உலக வங்கி, வெளிநாடுகள், மத்திய அரசு, உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், பிரதமர்களால் நாம் பல்வேறு பாராட்டுகளை - விருதுகளை நம்முடைய ஆட்சிக் காலத்தில் வாங்கியிருக்கிறோம். அதில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டுக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

உலக சுகாதார நிறுவனம் - குழந்தைகள் நலம் பேணியதற்கான விருதை 1996ஆம் ஆண்டு நமக்கு வழங்கியிருக்கிறது, ஆசியாவிலேயே குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக 1999ஆம் ஆண்டு உலக வங்கி நம்மைப் பாராட்டி இருக்கிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் 6 விருதுகளை நாம் பெற்றிருக்கிறோம். அதை இந்த அடியேன் ஸ்டாலின்தான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, நேரடியாகச் சென்று வாங்கி வந்தேன்.

வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தியதற்காக உலக வங்கி மனதாரப் பாராட்டி இருக்கிறது, பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக உச்ச நீதிமன்றமே பாராட்டி இருக்கிறது.

சிறந்த நிர்வாகத் திறமைக்காக நகராட்சித் துறையானது பன்னாட்டு நற்சான்றிதழை 2008ஆம் ஆண்டு பெற்றது, கருவுற்ற தாய்மார்கள் நலனைப் பேணும் திட்டங்களுக்காக ஜே.ஆர்.டி டாடா விருது தரப்பட்டது. டெல்லி சென்று இந்த அடியேன்தான் நேரடியாக வாங்கி வந்தேன்.

தேசிய அளவில் மிகச்சிறந்த கிராமங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சார்ந்த 1,476 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்திய அளவில் ஊரக வளர்ச்சியில் முதலிடம், இந்திய அளவில் உள்ளாட்சித் துறையில் முதலிடம். இந்த விருதுகளை எல்லாம் பெற்றதுதான் திமுக அரசு.

இவை எல்லாம் இப்போது முதல்வராக இருக்கும் பழனிசாமிக்கு தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் ஊழல், கரப்ஷன் - கமிஷன், கலெக்‌ஷன். இதைத்தான் அவர் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த ஆவடி தொகுதி மக்களுக்கு ஒரு முக்கியக் கடமை இருக்கிறது. மாஃபா பாண்டியராஜனைத் தோற்கடிக்க வேண்டும். அதிமுகவில் இருந்துகொண்டு பாஜக கட்சியை நடத்துகிறவர். அதனால்தான் அவரைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.

கீழடி தமிழர் பண்பாட்டை பாரதப் பண்பாடு என்று சொல்லி மழுங்கடித்த அவர் தமிழ் வளர்ச்சிச் துறை அமைச்சர் அல்ல, சமஸ்கிருத வளர்ச்சித் துறை அமைச்சர். அவர் அதிமுகவில் இருப்பதற்கு முன்பு, அவரை ஒரு கட்சியில் இருந்து அந்தக் கட்சியின் தலைவர் நீக்கினார் என்பது உங்களுக்குத் தெரியும். ஏன் நீக்கினார்?

அவர் மாஃபா பாண்டியராஜனாக அல்லாமல், மாஃபியா பாண்டியராஜனாக இருந்தார். அதனால் கட்சியை விட்டு நீக்கினார். அதற்குப் பிறகு அதிமுகவில் சேர்ந்தார். இப்போது பாஜகவின் ஊதுகுழலாக அதிமுகவில் இருந்து கொண்டிருக்கிறார். அந்த மாஃபியா பாண்டியராஜனை இந்தத் தொகுதியில் இருக்கும் மக்கள் துரத்தி அடிக்க வேண்டும். அதுதான் உங்கள் கடமை”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE