தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் சர்ச்சை பேச்சு - செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு

தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கரூர் மாவட்ட திமுகபொறுப்பாளரும், கரூர் திமுக வேட்பாளருமான எம்எல்ஏ செந்தில்பாலாஜி மீது, கரூர் நகர போலீஸார் 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாபுமுருகவேல் கரூர் நகர போலீஸில், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி மீது புகார் அளித்தார்.

அதில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே மார்ச் 15-ம்தேதி நடைபெற்ற திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி பேசும்போது, ‘திமுக தலைவர் ஸ்டாலின் 11மணிக்கு முதல்வராக பதவியேற்றதும் 11.05 மணிக்கு மணல் எடுக்கமாட்டு வண்டியை ஆற்றுக்கு ஓட்டிச்செல்லுங்கள். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான். தடுத்தால் எனக்கு போன் பண்ணுங்க. அந்த அதிகாரி இங்க இருக்கமாட்டான்’ என பேசி உள்ளார்.

ஊழியர்களை அச்சுறுத்தல்

இது தேர்தல் விதியை மீறியசெயலாகும். மேலும், இது பொதுமக்களை தவறாக வழி நடத்துவதுடன், அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதாகவும் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வி.செந்தில்பாலாஜி மீது பிரிவு 153 - அரசுக்கு எதிராக கலகம் ஏற்படுத்தும் வகையில்பேசுதல், 189-அரசு ஊழியரை மிரட்டுதல், 505(1)பி- அரசையும், ஆட்சியாளர்களையும் மிரட்டுதல், 506(1)-மிரட்டுதல், 353-அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE