கோவில்பட்டி தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ள அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவும், கூட்டணி பலம்மிக்க மார்க்சிஸ்ட் வேட்பாளரும், அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு கடும் சவாலாக உள்ளனர்.
தீப்பெட்டி உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் வகிப்பது கோவில்பட்டி. பட்டாசு தொழிற்சாலைகள், நூற்பாலைகள், புவிசார் குறியீடு பெற்ற கடலைமிட்டாய் ஆலைகள் ஆகியவையும் கோவில்பட்டியில் அதிகம். எனவே, தொழிலாளர்கள் மிகுதி. கரிசல் பூமியான இத்தொகுதியில் மானாவாரி விவசாயத்தில் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர்.
இத்தொகுதியில் மறவர் இன மக்கள் 23 சதவீதம், நாயுடு சமூகத்தினர் 20 சதவீதம், நாடார் சமுதாயத்தினர் 17 சதவீதம், தலித்கள் 16 சதவீதம் உள்ளனர். 1952-ம் ஆண்டு தொடங்கி இதுவரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறை, அதிமுக 4, காங்கிரஸ் 3 மற்றும் ஒருமுறை சுயேச்சைக்கு வெற்றி கிடைத்துள்ளது.
2011 மற்றும் 2016 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கடம்பூர் ராஜு வெற்றி பெற்றார். 2016-ல் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரானார். தற்போது, 3-வது முறையாக கடம்பூர் ராஜு களம் காண்கிறார்.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் டிபாசிட் இழக்கச் செய்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தற்போது கோவில்பட்டியை தேர்ந்தெடுத்துள்ளார். இவர்கள் தவிர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கே.சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கு.கதிரவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கோவில்பட்டி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கலைக்கல்லூரியை கொண்டு வந்தது, ஹாக்கி விளையாட்டுக்கு புகழ்பெற்ற இவ்வூரில் செயற்கை புல்வெளி மைதானம் அமைத்தது, 2-வது குடிநீர் திட்டம், 248 கிராம குடிநீர் திட்டம் என, கடந்த 10 ஆண்டுகளில் தான் செயல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறி கடம்பூர் செ.ராஜு வாக்கு சேகரிக்கிறார்.
தீப்பெட்டி தொழிலாளர்களுக்காக போராடியது, அடிப்படை தேவைக்காக மக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தது, திமுக கூட்டணியின் வாக்கு வங்கி ஆகியவற்றை நம்பி மார்க்சிஸ்ட் வேட்பாளர் கே.சீனிவாசன் ஆதரவு திரட்டி வருகிறார்.
டிடிவி தினகரன் இத்தொகுதிக்கு புதியவர். `அமமுக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா தான், தன்னை கோவில்பட்டியில் போட்டியிட அழைத்து வந்தார். அவரது பலத்தால் தன்னை எதிர்த்து போட்டியிடுபவர்களைவிட 50 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெறுவேன்’ என்கிறார் தினகரன். தனது சமுதாய வாக்குவங்கி கைகொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு அவருக்கு உள்ளது.
`தான் வெற்றிபெற்றால் சென்னையிலிருந்து தொகுதியை கவனித்துக் கொள்வேன் என்றும், தனது பிரதிநிதியாக மாணிக்கராஜா செயல்பட்டு கோவில்பட்டி தொகுதி மக்களின் தேவையை பூர்த்தி செய்வார்’ என்று, தினகரன் வெளிப்படையாக பேசி ஆதரவு திரட்டுகிறார்.
2.64 லட்சம் வாக்காளர்கள்
கடந்த ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 2,64,900 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேடபாளர் கடம்பூர் செ.ராஜுவுக்கு 64,514 வாக்குகளும், திமுக வேட்பாளர் அ.சுப்பிரமணியனுக்கு 64,086 வாக்குகளும் கிடைத்தன. கடும் போட்டிக்கு மத்தியில் 428 வாக்கு வித்தியாசத்தில் கடம்பூர் ராஜு வெற்றிபெற்றார். மதிமுக வேட்பாளர் விநாயகா ரமேஷ் 28,512 வாக்குகள் பெற்றிருந்தார்.
குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில், தான் வெற்றிபெற்றதை கருத்தில்கொண்டே, கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி முழுவதும் சுற்றிவந்து, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தனது வாக்குவங்கியை பலப்படுத்தி இருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு. எனினும், அதிமுகவின் வாக்குவங்கியான மறவர் சமுதாய வாக்குகளை தினகரன் பிரிப்பது பெரும் இழப்பு. மதிமுக, கம்யூனிஸ்ட்களுக்கு அதிக வாக்குவங்கி கொண்ட இத்தொகுதியில் திமுகவின் பலமும் சேர்ந்து மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு கைகொடுக்கின்றன. எனவே, ஆர்.கே.நகர் வெற்றியைப் போன்று, கோவில்பட்டி தொகுதி தினகரனுக்கு எளிதாக இருக்காது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago