நீண்ட காலத்துக்குப் பிறகு தனது உறவினரை சந்திப்பதற்காகவும், குலதெய்வம் கோயிலில் வழிபாடு செய்வதற்காகவும் இரு நாட்கள் தஞ்சாவூர் வந்து தங்கிச் சென்றுள்ளார் சசிகலா.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனைக் காலம்நிறைவடைந்து, சிறையில் இருந்துகடந்த ஜனவரி மாதம் விடுதலையான சசிகலா, பெங்களூருவில் ஓய்வு எடுத்துவிட்டு, பிப்.8-ம்தேதி சென்னைக்கு வந்தார்.
அப்போது வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள் அளித்த பிரம்மாண்ட வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவர், தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தனது ஆதரவாளர்களிடையே தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்பாராத திருப்பமாக மார்ச். 3-ம் தேதி அரசியலில் இருந்து தான் ஒதுங்கியிருக்கப் போவதாகவும், பொதுஎதிரி திமுகவை வீழ்த்த மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பிரார்த்திப்பதாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோயில்களில் தரிசனம்
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கார் மூலம் மார்ச் 17-ம் தேதி இரவு தஞ்சாவூர் வந்த சசிகலா, அருளானந்த நகரில் உள்ள அவரது கணவர் மறைந்த நடராஜன் வீட்டில் தங்கியிருந்தார். மறுநாள் 18-ம் தேதி விளார் பகுதியில் உள்ள குலதெய்வமான வீரனார் கோயிலில் நடராஜனின் சகோதரர் பழனிவேலின் பேரக் குழந்தைகளின் காதணி விழாவில் பங்கேற்றதுடன், அங்கு சிறப்பு வழிபாடு செய்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில் ஆகியவற்றில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். இரவு மீண்டும் தஞ்சாவூரில் வந்து தங்கினார்.இதை தொடர்ந்து மார்ச் 19-ம் தேதி ரங்கம் வந்து ரெங்கநாதர் கோயிலிலும் தரிசனம் செய்தார். அதன் பின்பு அவர், காரில் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
கணவர் படம் பார்த்து கண்ணீர்
முன்னதாக மார்ச் 17-ம் தேதி தஞ்சாவூர் அருளானந்த நகரில் அவரது கணவர் மறைந்த நடராஜனின் வீட்டுக்கு வந்தசசிகலா, நடராஜனின் உருவப்படத்துக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர், விளார் பகுதியில் உள்ள நடராஜனின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். மார்ச் 20-ம் தேதியான நேற்று நடராஜனின் 3-ம் ஆண்டு நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
உறவுகளை தேடிய சசிகலா
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உற்ற தோழியாக அவருடனேயே இருந்த சசிகலா, தனது நெருங்கிய உறவினர்கள் ஒருசிலரை தவிர வேறு யாரையும் சந்திக்காமலேயே இருந்தார்.
இந்நிலையில், தஞ்சாவூர் வந்த சசிகலா தனது மற்றும் நடராஜனின் உறவினர்களை வரவழைத்து அனைவரிடமும் பேசியுள்ளார். சசிகலா தங்களை அழைத்துப் பேசியதில் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அப்போது சிலர், கண்ணீர் மல்க ஆறுதலையும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தனது பெயரில் உள்ளபல்வேறு சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள சொத்துகளின் நிலை குறித்து தனது நெருங்கிய உறவினர்களுடன் சசிகலா விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா போன்று இவரும் தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பதால், அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தியதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago