ஆளும் கட்சியினர் லஞ்சம் கேட்டதால்தான் தமிழகத்துக்குத் தொழிற்சாலைகள் வரவில்லை: வைகோ குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஆளும் கட்சியினர் லஞ்சம் கேட்டதால்தான் தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வரவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்துக் களம் காண்கின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கரம் கோத்துள்ளன.

இதில் மதிமுக 2 தனித் தொகுதிகளிலும், 4 பொதுத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பாஜக என்ற பொது எதிரியைத் தமிழகத்தில் காலூன்ற விடாமல் இருக்க தொகுதிகளில் சமரசம் செய்து கொள்வதாகத் தெரிவித்து, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் மதிமுக ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரித்து வருகிறார். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட வைகோ பேசும்போது, ''ஆளும் கட்சியினர் லஞ்சம் கேட்டதால்தான் தமிழகத்துக்குத் தொழிற்சாலைகள் வரவில்லை, ரூ.7,060 கோடி மதிப்புள்ள தொழிற்சாலை, இவர்கள் கேட்ட கமிஷன், ஊழல் பணம் ஆகியவற்றால் அண்டை மாநிலத்துக்குச் சென்றுவிட்டது. அதைப் போலத்தான் தமிழகம் வந்த ஏராளமான தொழிற்சாலைகள் பக்கத்துக்கு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன.

விவசாயப் பெருங்குடி மக்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். வேளாண் பாதுகாப்பு மண்டலமாக ஆக்குவேன் என்று முதல்வர் சொன்னார். அங்கேதான் ஹைட்ரோகார்பன் வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளைத் தாரை வார்த்துவிட்டனர்'' என்று வைகோ தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE