கரோனா பரவல் அதிகரிப்பு: புதுவையில் பள்ளிகளை தற்காலிகமாக மூட ஆளுநருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளை தற்காலிகமாக மூட துணைநிலை ஆளுநருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

புதுச்சேரி ராஜ்நிவாசில் கரோனா தடுப்பூசி தொடர்பான உயர்மட்டக் குழு கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று மாலை நடந்தது.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குநர் கையெழுத்து போடப்பட்ட ஒரு பரிந்துரையை ஆளுநர் தமிழிசையிடம் அளித்துள்ளார்.

அதில், துணைநிலை ஆளுநர் கூறியபடி கரோனா தடுப்பு நடவடிக்கைகளான கரோனா பரிசோதனை, கண்டறிதல் உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஆர்சி-பிசிஆர் டெஸ்ட் 70 சதவீதம், ரேபிட் கிட் டெஸ்ட் 30 சதவீதம் எடுக்கிறோம். மருத்துவக் கல்லூரிகள் அனைத்து மருத்துவ மாணவர்களையும் முன்களப் பணியாளர் பிரிவில் சேர்த்து கரோனா தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொற்று அதிகமாக உள்ளதாக அடையாளம் காணப்பட்ட முக்கியப் பகுதிகளில் `காய்ச்சல் கிளினிக்குகள்’ உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிகளை தற்காலிகமாக மூட துணைநிலை ஆளுநருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கூட்டங்கள் நடக்கின்றன. இதில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். மக்கள் கூடும் இடங்களில் பரிசோதனை செய்வதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் பூத்துக்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE