ஆளும்கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை: ஹெச்.ராஜா

By இ.ஜெகநாதன்

‘‘ஆளும்கட்சி மீது மக்களிடம் அதிருப்தி இல்லை,’’ என காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ சோழன் சித.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பேசியதாவது: அதிமுக, பாஜக கூட்டணி இயல்பான, இயற்கையான கூட்டணி. இந்தக் கூட்டணி ஆட்சியிலும் தொடர வேண்டும்.

லாட்டரி விற்பவர்கள் நாளையுடன் கடைசி என்று கூவி விற்பார்கள். அதேபோல் பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றபோது, எதிர்க்கட்சியினர் இந்த ஆட்சி நாளையுடன் கடைசி என்று கூறினார்கள். ஆனால் அவர் நான்கு ஆண்டுகள் பூர்த்தி செய்துவிட்டார்.

தமிழகத்தில் ரூ.6.10 லட்சம் கோடியில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. 12 லட்சம் பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்தாலும், செய்யாவிட்டாலும் ரூ.6 ஆயிரம் கொடுக்கிறோம்.

‘தூய்மை இந்திய திட்டம் என்பது ஊரை சுத்தம் செய்வதற்காக மட்டுமல்ல. பெண்களின் மானத்தை காப்பதற்காக தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்,’ அதேபோல் தாய்மார்களின் ஆரோக்கியத்தை காக்க இலவச எரிவாயு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தண்ணீர் பிரச்சினையை மக்கள் கூறினார்கள். அதற்காக தான் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கடந்த 1984-ம் ஆண்டில் ப.சிதம்பரம் எம்.பி., ஆனபோது 12 பஞ்சாலைகள் இருந்தன. தற்போது ஒன்றுகூட இல்லை. ஆளும்கட்சி மீது மக்களிடம் அதிருப்தி இல்லை.

இதை மக்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெறுவோம். திமுக என்ற தீயசக்தி வரக்கூடாது, என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE