புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய மாட்டு வண்டி, சைக்கிள்களில் வந்த வேட்பாளர்கள்

புதுச்சேரியில் மாற்று அரசியலைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கரும்புத் தோரணம் கட்டிய மாட்டு வண்டியிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் சுசி கம்யூனிஸ்ட் சார்பில் சைக்கிள்களிலும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதற்காக, புதுச்சேரியில் 23 தொகுதிகளிலும், காரைக்காலில் 5 தொகுதிகளிலும் என 28 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 18) அக்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் லோ.பிரியன் தலைமையில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் ரமேஷ், கதிர்காமம் தொகுதியில் போட்டியிடும் சுபஸ்ரீ, காலாப்பட்டு தொகுதியில் போட்டியிடும் காமராஜ் ஆகியோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

இவர்கள் மூவரும், கரும்புகள் தோரணம் கட்டிய மாட்டு வண்டியில் ஊர்வலமாகச் சென்று அந்தந்தப் பகுதி தேர்தல் அலுவலகங்களில் நூதன முறையில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். அப்போது, வேட்பாளர்கள் ரமேஷ், காமராஜ் உள்ளிட்டோர் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதார வசதிகள் சென்றடைய வேண்டும்,

பிற மொழிக் கல்வியை வரவிடாமல் தடுத்து, தமிழ் மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளித்து, பாரம்பரியக் கலாச்சாரத்தை நிலைநிறுத்த வேண்டும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, மாற்று அரசியலைக் கொண்டுவர வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரியை ஆண்டு வரும் காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் கட்சிகள், மக்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி, அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யத் தவறியதால், பின்தங்கிய மாநிலமாக மாற்றிவிட்டனர். இத்தேர்தலில் 28 தொகுதிகளில் களம் காணும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று, புதுச்சேரியை மீட்டெடுப்போம்’’ என்றனர்.

இதேபோல், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து புதுச்சேரி காமராஜ் நகர், முத்தியால்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும், சுசி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் லெனின்துரை, சரவணன் ஆகியோர் சைக்கிள்களில் வந்து உப்பளம் சுற்றுலா மாளிகை தேர்தல் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் சைக்கிளில் வந்து தங்களின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தோம்’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE