நீண்ட இழுபறிக்கு பின்னர் உதகை தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: கர்நாடக அமைச்சர் உட்பட 5 நபர்கள் பொறுப்பாளர்களாக நியமனம்

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளராக மு.போஜராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். உதகை தொகுதிக்கு கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் உட்பட 5 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட உதகை சட்டப்பேரவை தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடித்து வந்தது. தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கடந்த இரு நாட்களுக்கு முன்பு உதகையில் நேர்காணல் நடத்தினார்.

இந்நிலையில், ஒரு வழியாக இன்று மாலை உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கோத்தகிரியை சேர்ந்த மு.போஜராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். 74 வயதான போஜராஜன் கோத்தகிரி ஹிட்டக்கல் தேயிலை தோட்ட அதிபர்.

பாஜக மேலிடம் வேட்பாளரை அறிவித்த பின்னர், மு.போஜராஜன் மாலை உதகையில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு பாஜகவினர் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

காங்., பாஜக நேரடி மோதல்:

உதகை சட்டப்பேரவை தொகுதியில் தற்போது தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக நேரடியாக மோதுகின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் மோதியுள்ள நிலையில், உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் இரு கட்சிகளும் நேரடியாக மோதுவது இதுவே முதன்முறையாகும்.

கர்நாடக அமைச்சர் உட்பட ஐவர் பொறுப்பாளர்களாக நியமனம்:

இந்நிலையில், உதகை சட்டப்பேரவை தொகுதியை பாஜக கைப்பற்ற அண்டை மாநிலமான கர்நாடகா அமைச்சர் உட்பட்ட 5 நபர்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது.

இந்த பொறுப்பாளர்கள் உதகையில் உள்ள பாஜக அலுவலகத்தில் வேட்பாளர் மு.போஜராஜனை அறிமுகப்படுத்தி, நிர்வாகிகளை தேர்தல் பணியில் ஈடுபட அறிவுறுத்தினர்.

உதகை சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் மகேஷ் கூறும் போது, ‘நான், மைசூரு மாநகர பாஜக தலைவர் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர், குண்டல்பேட் எம்எல்ஏ நிரஞ்சன் மற்றும் கர்நாடகா கோட்ட ஒருங்கிணைப்பு செயலர் ரவிசங்கர் ஆகிய 5 நபர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளோம்.

இன்று முதல் அனைத்து பூத்கள் வாரியாக தேர்தல் பணியாளர்களை நியமித்து, பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். நாளை எங்கள் வேட்பாளர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE