குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி; கூட்டுச் சதி இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

By செய்திப்பிரிவு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பிற்கான இடங்களில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இடம் கிடைத்ததில் அரசு அதிகாரிகளின் கூட்டுச் சதி ஏதும் இல்லை எனத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் தேர்வில் தங்களை விடக் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இடமளிக்கப்பட்டதை எதிர்த்தும், நிரப்பப்படாத காலியிடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தி தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக் கோரியும் மருத்துவர்கள் கீதாஞ்சலி, சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்குக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டதுடன், மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதி உள்ளதா? அவ்வாறு இருந்தால் அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தால் எவ்வளவு என்ற விவரங்கள் போன்றவை குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் சீலிட்ட கவரில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி பதிலளித்தார். அவரது பதிலில், ''கலந்தாய்விற்குப் பிறகு மாணவர்களின் பட்டியல் அந்தந்தக் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு காணொலிக் காட்சி மூலமாக மட்டுமே கலந்தாய்வு நடைபெற்றது.

அதில் இடம் கிடைத்த சிலரும், தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காத சிலரும் கல்லூரிகளை அணுகாததால் அந்த இடங்கள் காலியாக இருந்தன. நிரப்பப்படாத இடங்கள் குறித்த தகவல் கிடைத்ததும் குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளை நாடி, படிப்பில் சேர்ந்துள்ளனர். அடுத்த ஆண்டு இதுபோல நடக்காது என உத்தரவாதம் அளிக்கிறோம்.

ஒருசில கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தது சிபிசிஐடி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதுகுறித்து புகார் அளிக்க இருக்கிறோம். மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு அதிகாரிகளின் கூட்டுச் சதி ஏதும் இல்லை'' எனத் தெரிவித்தார்.

அவரது வாதங்களைப் பதிவு செய்த நீதிபதி புகழேந்தி, கூடுதல் கட்டணம் வசூலித்த கல்லூரிகளுக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்ற உத்தரவிற்காகக் காத்திருக்காமல், ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் குழுவிடம் அளிக்கும்படி அறிவுறுத்தினார்.

பின்னர் கலந்தாய்வு நடந்த தேதி, மதிப்பெண் குறைவாகவும், கூடுதலாகவும் பெற்ற மாணவர்களுக்கு இடம் கிடைத்த விவரங்கள் ஆகியவற்றைத் தாக்கல் செய்ய தமிழக அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்