15 ஆண்டுகள் 3 தேர்தல்; பலமான காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த திமுக: 1957-67 காலகட்டம் ஒரு பார்வை

By மு.அப்துல் முத்தலீஃப்

சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸ் எனும் பிரம்மாண்டக் கட்டமைப்பை 15 ஆண்டுகளில் திமுக முறியடித்த பின்னணி, அரசியல் சூழல், கையிலெடுத்த பிரச்சினைகள், அண்ணாவே தோற்ற வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கிய 3 சட்டப்பேரவை தேர்தல் வரலாறு குறித்து ஒரு பார்வை.

1952 - முதல் சட்டப்பேரவைத் தேர்தல்: எதிர்க்கட்சியாக தேர்வான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

1952-ம் ஆண்டு தேர்தல் கிட்டத்தட்ட குட்டி இந்தியாவுக்கான அல்லது திராவிட நாடு என்று சொல்லும் நான்கு மாநில மொழி பேசும் மக்களும் வாக்களித்த தேர்தலாக அமைந்தது. இந்தத் தேர்தலில் பலமான இந்திய தேசிய காங்கிரஸும், ஆந்திரா, தமிழக, கேரளப் பகுதிகளில் பலம் வாய்ந்த கம்யூனிஸ்டுகளும், கேரளப் பகுதிகளில் பலம் வாய்ந்த முஸ்லிம் லீக் கட்சியும் முக்கியக் கட்சிகளாக களத்தில் நின்றன.

1949-ல் தொடங்கப்பட்டு 3 வயதான திமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை. இதில் மொத்தமுள்ள 375 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 152 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 62 இடங்களிலும், மற்ற சிறு சிறு கட்சிகள் மொத்தமாக 161 இடங்களிலும் வென்றன. ராஜாஜி முதல்வர் ஆனார். கோஷ்டி பூசலால் 1954-ல் காமராஜர் முதல்வர் ஆனார்.

ஒன்றுபட்ட மாகாணத்தில் தேர்தல் நடந்ததும், ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாக இருந்ததும் இத்தேர்தலின் சிறப்பு.

1957 பொதுத் தேர்தல்: 33 வயதில் கருணாநிதியின் முதல் தேர்தல்

அடுத்த 2-வது தேர்தல் வரும் முன் சென்னை மாகாணத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்படும் பணி 1953-லிருந்து ஆரம்பித்து 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் நாளிலிருந்து ‘மாநிலங்கள் சீரமைப்புச் சட்டம்’ நடைமுறைக்கு வந்தது.

ஆந்திரா, மைசூர், கேரளாவிற்கான பகுதிகள் அம்மாநிலத்துடன் இணைக்கப்பட்ட பின் சென்னை மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 190 ஆகக் குறைந்தது. பின்னர் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லையில் செங்கோட்டை வட்டமும் சென்னை மாநிலத்துடன் இணைந்ததால் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்தது.

இந்த முறை 1957-ம் ஆண்டு இரண்டாவது சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியது. இம்முறை திமுக தேர்தலில் போட்டியிடலாமா என 1956ஆம் ஆண்டு மாநாட்டில் பொதுமக்கள் கருத்தைக் கேட்டார் அண்ணா. அதன் அடிப்படையில் தேர்தலில் திமுக போட்டியிடலாம் என முடிவெடுத்தார். இம்முறை மும்முனைப் போட்டி. காமராஜர் ஆட்சியில் இரண்டாவது முறை தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ். பெரியாரின் ஆதரவு வேறு.

இந்தத் தேர்தலில் வலுவான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிய சித்தாந்தம், திமுகவின் தமிழ் தேசியவாதம், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்கிற வாதத்தின் முன் திமுகவே பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் முன் நின்றது. அண்ணா காஞ்சியிலும், தன்னுடைய 33-வது வயதில் திமுக தலைவர் கருணாநிதி குளித்தலை தொகுதியிலும் முதன் முதலில் போட்டியிட்டதும் இந்தத் தேர்தலில்தான்.

திருக்கோஷ்டியூரில் கவிஞர் கண்ணதாசன், சேலத்தில் நாவலர் நெடுஞ்செழியன், தேனியில் நடிகர் எஸ்.எஸ்.ஆர், எழும்பூரில் க.அன்பழகன், அன்பில் தர்மலிங்கம் (அன்பில் பொய்யாமொழியின் தந்தை) ஆகியோரும் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவில் காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. காமராஜர் மீண்டும் முதல்வர் ஆனார். முதன்முதலில் தேர்தலில் 112 இடங்களில் போட்டியிட்ட திமுக 15 இடங்களில் வெற்றி பெற்றது.

என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் பிரச்சாரம் செய்தும் இந்தத் தேர்தலில் திமுகவின் முக்கியத் தலைவர்களான நாவலர் நெடுஞ்செழியன், கண்ணதாசன், அன்பில் தர்மலிங்கம், எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தோல்வி அடைந்தனர். புதிய கட்சியான திமுகவுக்கு பொதுச் சின்னம் கிடைக்காதது இதற்கான காரணமாக இருந்தது.

அண்ணா, கருணாநிதி, அன்பழகன், ஆசைத்தம்பி, சத்தியவாணிமுத்து, ப.உ.சண்முகம் போன்றோர் வெற்றி பெற்றனர்.

1962 பொதுத்தேர்தல்: எம்ஜிஆர் என்ட்ரி

1957-ம் ஆண்டுக்கும் 62-ம் ஆண்டுக்கும் இடையே தமிழக அரசியலில் எத்தனை மாற்றங்கள். திரையுலகின் முடிசூடா மன்னன் பின்னர் அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆர், கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பு வலுப்பெற திமுகவில் இணைந்தார். ஆனால் 1962-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு இடையில் பெரியாரின் அண்ணன் மகன் திமுகவில் அண்ணாவுக்கு இணையாக விளங்கிய ஈ.வி.கே.சம்பத் (ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தந்தை) 1961, ஏப்ரலில் வெளியேறினார்.

அவருடன் கவிஞர் கண்ணதாசனும் வெளியேறினார். அவர்கள் தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கினர்.
இந்தத் தேர்தலில் வலுவான காங்கிரஸை எதிர்த்து திமுக போட்டியிட்டது. இந்தக் காலகட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சினையை திமுக கையிலெடுத்திருந்தது.

தமிழருக்கான தனி நாடு, திராவிட நாடு கோரிக்கைகளும், சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும் போன்ற மொழி சார்ந்த பிரச்சினைகளும் திமுகவால் கையிலெடுக்கப்பட்டன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இந்தியா முழுவதும் பெரிய அளவில் உட்கட்சிப் போராட்டம் வெடித்திருந்த நேரம். இந்தியாவுக்கு ஏற்ற பாதை தேசிய ஜனநாயகப் புரட்சியா? மக்கள் ஜனநாயகப் புரட்சியா என்கிற போராட்டம் உட்கட்சிப் போராட்டம் வலுவாக இருந்த நேரம்.

விவசாயிகள் பிரச்சினை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைப் போராட்டம், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போர், நிலச்சீர்திருத்தம் போன்றவற்றைத் திமுகவும் கையிலெடுத்ததால் கம்யூனிஸ்டுகள் இடத்தை திமுகவின் திராவிடக் கொள்கைகள் எளிதாகப் பின்தள்ளின. இந்தக் காலகட்டத்தில் எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர், கே.ஆர்.ராமசாமி போன்றோரின் திரையுலக கவர்ச்சியும், பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்க தலைவர்களும் மக்களை எளிதாக அணுகினர்.

இதன் காரணமாக காங்கிரஸின் பலமான கோட்டையில் திமுக பெரிய தாக்குதலைக் கொடுத்தது. 1957 தேர்தலுக்குப் பின் திமுக பெரும் அளவில் வளர்ந்திருந்தது. இதற்கிடையே 3-வது தேர்தலில் 15 என்கிற எண்ணிக்கையை 50 ஆக திமுக உயர்த்தியது. காங்கிரஸ் 12 இடங்களை இழந்தது. ஆனாலும், ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.

அண்ணாவைக் குறிவைத்து நடத்திய தேர்தலில் அவர் தோற்றுப்போனார். ஆனால், நெடுஞ்செழியன், எஸ்.எஸ்.ஆர் போன்றோர் வென்றனர். அண்ணா இடத்தில் சட்டப்பேரவைத் தலைவராக நெடுஞ்செழியனும், துணைத் தலைவராக கருணாநிதியும் பொறுப்பேற்றனர். அண்ணா பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

இந்தத் தேர்தலில் எம்ஜிஆரின் பிரச்சாரம் பெரும் துணையாக திமுகவுக்கு அமைந்தது. இம்முறை கருணாநிதி, தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், மிகப்பெரும் பஸ் முதலாளியை எதிர்த்துப் போட்டியிட்டார். வெல்லவே முடியாது என்று தமிழகமே எதிர்பார்த்த நிலையில் தனது நண்பர் கருணாநிதிக்காக அங்கேயே பல நாள் பிரச்சாரம் செய்த எம்ஜிஆரின் பிரச்சாரமும் பெரும் வெற்றி பெற உதவியது.

1962 வெற்றிக்கும் 4-வது பொதுத்தேர்தலான 1967-ம் ஆண்டுக்குமிடையே எத்தனை மாற்றங்கள். 1962-ல் சீனப்போரில் இந்தியா தோல்வி, திராவிட நாடு கொள்கையை திமுக கைவிட்ட சம்பவம், 1964-ல் பிரதமர் நேருவின் திடீர் மரணம், அதைத் தொடர்ந்து பிரதமரான 1965-ல் லால்பகதூர் சாஸ்திரியின் மரணம், இந்திரா காந்தி பிரதமரானது எனப் பல சம்பவங்கள்.

1964-ம் ஆண்டு அகில இந்திய அளவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது.

இந்தக் காலகட்டத்தில்தான் திமுகவால் மொழிப்போர் கையிலெடுக்கப்பட்டது. இந்தித் திணிப்புக்கு எதிராக மொழிப் பிரச்சினையைத் திமுக கையிலெடுத்தது. மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் இக்காலகட்டத்தில் திமுகவின் பின்னால் வந்தனர். காமராஜர் முதல்வர் பதவியை விட்டு விலகி பக்தவச்சலத்தை முதல்வராக்கினார். மொழிப் பிரச்சினையுடன் உணவுப் பஞ்சம் உள்ளிட்டவை சேர எலிக்கறி சாப்பிடச் சொன்னதாக காங்கிரஸுக்கு எதிரான திமுகவின் போராட்டம் வெடித்தது. அண்ணாவின் படி அரிசித் திட்டம் பெரிதாக எடுபட்டது.

இதற்குள் 1965-ம் ஆண்டின் ‘தொகுதி சீரமைப்பு’ நடவடிக்கைகளின் விளைவாக சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கையும் 234 ஆக உயர்த்தப்பட்டது. இவற்றில் 44 இடங்கள் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டன. 1967-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாநிலத்தின் நான்காவது சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அந்த நேரத்தில் திமுகவின் பிரச்சார பீரங்கி எம்ஜிஆர் சுடப்பட்டார். இதுவும் திமுகவுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.

1967-ல் ஆட்சியைப் பிடித்த திமுக; எம்.பி.ஆன அண்ணா

1967-ம் ஆண்டு 4-வது பொதுத்தேர்தலில் திமுக தலைமையில் ராஜாஜியின் சுதந்திராக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இணைந்து போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது. திமுக கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற்றது. 179 இடங்களில் வென்ற கூட்டணியில் திமுக மட்டுமே 137 இடங்களை வென்றது.

காங்கிரஸ் கட்சி 232 இடங்களில் போட்டியிட்டு 51 இடங்களை மட்டுமே பெற்று 88 இடங்களை இழந்தது. அண்ணா முதல்வர் ஆனார். ஆனால், அந்தத் தேர்தலில் அண்ணா சட்டப்பேரவைக்குப் போட்டியிடவில்லை. மக்களவைக்குப் போட்டியிட்டு தென்சென்னை எம்.பி. ஆனார். அதற்குப் பிறகு எம்.பி.பதவியை ராஜினாமா செய்து சட்ட மேலவைக்குள் நுழைந்ததன் மூலம் முதல்வர் ஆனார்.

இன்று பல கட்சிகள் வந்து உடனடியாக ஆட்சியைப் பிடித்திருக்கலாம். ஆனால் சுதந்திரத்திற்குப் பின் ஒரு கட்சி இந்தியா முழுவதும் வியாபித்திருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்த 15 (1957-67 -3 பொதுத்தேர்தல்கள்) ஆண்டுகால தமிழக அரசியல் வரலாறு சுவாரஸ்யமான ஒன்றுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்