சினிமாவுக்குதான் கெட்டப் வேண்டும், அரசியலுக்குத் தேவையில்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 17) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது:
"திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற கட்சிகள் எல்லாம் மக்களுக்கு நன்மை செய்கின்ற கட்சிகள் அல்ல. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உடன்பாடு எட்டாமல், அதன் தலைவர் வெளியில் வந்து கண்ணீர் விட்டார். உண்டா? இல்லையா? அப்படி வேண்டா வெறுப்பாக அமைக்கப்பட்டுள்ள கூட்டணிதான் திமுக கூட்டணி.
அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணி. வலிமையான கூட்டணி. நம்முடைய கூட்டணியில் இருக்கின்ற கட்சியின் தலைவர்கள் எல்லாம் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட கூட்டணி.
ஸ்டாலின் செல்கின்ற இடமெல்லாம் பொய் பேசிக் கொண்டிருக்கிறார். அவதூறு பிரச்சாரம் செய்கிறார். எப்பொழுதும் அவர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி என்று என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் தூங்கும்போதும், விழித்திருக்கும்போதும் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்.
நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, இவர் எடப்பாடியிலிருந்து வந்திருக்கிறார். இவருக்கு ஒன்றும் தெரியாது. இந்த ஆட்சி 1 மாதத்தில் போய்விடும், 3 மாதங்களில் போய்விடும், 6 மாதங்களில் போய்விடும் என்று ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருந்தார். என்னுடைய தலைமையில் அதிமுக அரசு 4 ஆண்டு காலம் நிறைவு பெற்று, 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
தமிழகத்தில் வெற்றிடம் இல்லை, தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. வெற்றிநடை போடும் தமிழகம் என்று சொன்னலே ஸ்டாலின் துடிக்கிறார்.
அரசாங்கம் போடுகின்ற திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசின் சாதனை பத்திரிகையில் விளம்பரமாக வெளியிடப்படும். தனி நபர் விளம்பரம் கிடையாது. மக்களிடம் தவறான செய்தியை ஸ்டாலின் பரப்பி, அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதனை முறியடிக்கும் விதமாக, என்னுடைய தலைமையில் அமைக்கப்பட்ட அதிமுக அரசின் நாலே கால் ஆண்டு சாதனைகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இதில், ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள், நாங்கள் பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம். இதற்கு பதில் சொல்லத் திராணியில்லாத திமுக தலைவர் அவதூறு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு நடத்தினார்கள். அந்த மாநாட்டை திமுக குடும்பத்திற்காக நடத்தினார்கள். செம்மொழி மாநாடு என்ற பெயரில் கருணாநிதியின் குடும்ப விழாதான் நடைபெற்றது. 13 கோடி ரூபாய் விளம்பரம் கொடுக்கப்பட்டு, ஒரு குடும்பத்திற்காக அரசுப் பணம் வீணடிக்கப்பட்டது. அம்மாநாட்டில் தமிழறிஞர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. கருணாநிதியின் குடும்பத்தினர்தான் முன்னிலைப்படுத்தப்பட்டனர். செம்மொழி மாநாடு, மொழிக்காகக் கொண்டாடப்படவில்லை. கருணாநிதி குடும்பத்திற்காகக் கொண்டாடப்பட்டது.
நான் ஒரு விவசாயி. சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். உங்களைப் போல் இருந்து இங்கே வந்திருக்கிறேன். நான் சுமார் 48 ஆண்டு காலம் இயக்கத்திற்காக உழைத்து, பல்வேறு பொறுப்புகளைப் பெற்று ஒன்றியத் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று படிப்படியாக உயர்ந்து முதல்வர் நிலைக்கு உயர்ந்திருக்கிறேன்.
ஸ்டாலின் அப்படியா வந்தார். அவர் உழைத்தா வந்தார். ஒரு கவுன்சிலராக வெற்றி பெறுவதற்கே எவ்வளவு பாடுபட வேண்டும் என்பதைக் கீழிருந்து பார்த்தால்தான் தெரியும். திமுக தலைவர் கருணாநிதியின் செல்வாக்கில் ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். 1989-ல் நானும் முதல் முறையாக எம்எல்ஏ, ஸ்டாலினும் முதல் முறையாக எம்எல்ஏ. நீங்கள் அப்பாவின் செல்வாக்கில் வந்தீர்கள். நான் வெயிலிலும், மழையிலும் உழைத்து பாடுபட்டுப் பதவிக்கு வந்தவன்.
அதன் பிறகு கட்சியில் ஒன்றிய அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் பொறுப்புக்கு வந்து, இன்று முதல்வராக உயர்ந்திருக்கிறேன். அண்மையில் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில், சினிமா 'செட்டிங்' உடன் ஹீரோ மாதிரி நடந்து வருகிறார் ஸ்டாலின். அவர் ஹீரோ அல்ல ஜீரோ. அந்த மேடையில் பட்டாசு வெடித்து, லைட் போட்டுக் கொண்டு ஸ்டாலின் இளைஞர் மாதிரி கெட்டப் போட்டு வருகிறார். அவர் என்ன சினிமாவில் நடிக்கவா வருகிறார்? மக்களுக்குச் சேவை செய்வதற்கு இது எல்லாம் தேவையில்லை. சினிமாவுக்குதான் கெட்டப் வேண்டும், அரசியலுக்குத் தேவையில்லை. இப்படி வருகின்ற ஒரே தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் ஒருவர்தான்.
காவிரி விவகாரத்தில் அதிமுக அரசு சட்டப் போராட்டம் நடத்தி, நல்ல தீர்ப்பைப் பெற்று, நமது மாநிலத்திற்கு உரிய பங்குநீரினைப் பெற்றுத் தந்தது.
தேசிய அளவில் நீர் மேலாண்மையில் தேசிய விருது பெற்ற மாநிலம் தமிழ்நாடு. இதுவரை தமிழ்நாடு நீர் மேலாண்மையில் விருது பெற்ற சரித்திரமே கிடையாது. அந்தச் சாதனையையும் படைத்த அரசு அதிமுக அரசு.
உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் மேலாக உற்பத்தி செய்து சாதனை படைத்து தொடர்ந்து 5 முறை கிருஷி கர்மான் தேசிய விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது. உள்ளாட்சித் துறையில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறோம். கல்வித் துறை, சமூகநலத் துறை, போக்குவரத்து துறை, மின்சாரத் துறை போன்ற துறைகளில் விருதுகளைப் பெற்ற ஒரே அரசு அதிமுக அரசு. இவை எல்லாம் சாதனைகள். இதைப் பற்றி எல்லாம் ஸ்டாலின் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி துறைகள் தோறும் விருதுகள் பெற்று தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழகம் வளர்ச்சி பெற்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சியிலே மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்றே தெரியாது. மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டனர். விவசாயம் பாதிக்கப்பட்டது. தொழில் துறை பாதிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கின. இப்போது, தடையில்லா மின்சாரம் தமிழகத்திலே கிடைக்கின்ற காரணத்தினாலேதான் புதிய, புதிய தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன.
2019-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினோம். அதில் 304 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சத்து 5,000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அந்தப் பணிகள் எல்லாம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்ல கரோனா வைரஸ் தொற்று இருந்த காலத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தொழில் முதலீட்டுகளை ஈர்த்துள்ளது. இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, தொழில் வளர்ச்சியும், பொருளாதாரமும் மேம்பாடு அடையும்.
ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரங்கள் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். தமிழ்நாடு வெற்றி இலக்கை அடைவதற்கு விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களைத் தந்திருக்கிறோம், தொழிற்சாலைகளுக்குத் தேவையான திட்டங்களைத் தந்திருக்கிறோம். நாடு வளர்ச்சி பாதையில் போகிறது. அது ஸ்டாலினுக்குப் பொறுக்கவில்லை. உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள். ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டு வந்து நாட்டு மக்களுக்குப் படுபாதகம் செய்த கட்சி திமுக. விவசாயிகளைப் பாதுகாத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம்.
நகரம் முதல் கிராமங்கள் வரை ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 58 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மின் கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவப் பணியாளர் அந்தப் பகுதியிலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இப்படிப்பட்ட திட்டத்தைக் கொண்டு வரவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் நாட்டைப் பற்றிப் பேசுவதில்லை, மக்களைப் பற்றிப் பேசுவதில்லை. அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும் பேசுவதில்லை. என்னைப் பற்றி அவதூறு மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago