கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி பிரிவு 17-ன் கீழ் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்காதது, 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாதது உட்பட பல பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் திமுகவின் கோட்டையான கூடலூரை திமுக தக்க வைக்குமா? தாரை வார்க்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களை உள்ளடக்கியது கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி. பொது தொகுதியாக இருந்த இந்த சட்டப்பேரவை தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
சுற்றுலாவுக்கு போதுமான வாய்ப்பு இல்லாத நிலையில், இங்கு விவசாயமே பிரதான தொழில். தேயிலை, காபி, வாழை, குறுமிளகு, பாக்கு, நெல், ஏலக்காய் என பொன் விளையும் பூமியாக கருதப்படுகிறது. கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையில் இந்த சட்டப்பேரவை தொகுதி அமைந்துள்ளதால், இங்குள்ளவர்கள் மருத்துவம் உட்பட்ட தேவைகளுக்கு அந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர்.
இங்கு தாயகம் திரும்பியோர், பழங்குடியினர், முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் உட்பட இதர மக்கள் வசிக்கின்றனர்.
» தாயில்லாமல் நானில்லை: கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தழுதழுத்த குஷ்பு
» காரைக்காலில் பாஜகவில் இணைந்தவர் சில மணி நேரத்தில் வேட்பாளராக அறிவிப்பு
இந்த சட்டப்பேரவைத் தொகுதியின் பிரதான பிரச்சினைகளில் ஒன்று பிரிவு - 17 நிலப்பிரச்சினை, தனியார் காடுகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் மனித - விலங்கு மோதல்கள்.
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான நிலங்கள் பிரிவு 17 நிலங்களாகும். இந்த நிலங்கள் இதுவரை வகைப்படுத்தப்படாததால், இந்த நிலங்களில் வசிப்பவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம் கிடைப்பதில் சிரமம் உள்ளது. 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புக்காக விண்ணப்பித்தும், இதுவரை மின் இணைப்பு கிடைக்கவில்லை.
மேலும், இங்கு நிலங்கள் வகைப்படுத்தப்படாததால் வனப்பகுதி பல பிரிவுகளாக சிதறியுள்ளது. இதனால், யானை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவதால் மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 50 பேர் யானை உட்பட விலங்குகள் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலப்பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தமிழக அரசு முடிவு செய்துகொள்ளலாம் என அறிவித்தும், இதுவரை அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இங்கு பல தனியார் காடுகள் உள்ளதால், இதன் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற்றே இந்த நிலங்களை வாங்கவோ, விற்கவோ வேண்டும் என்ற நிலையுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட பகுதியில் மசினகுடி உட்பட பல கிராமங்கள் உள்ளதால், இப்பகுதிகளில் வணிகரீதியான வளர்ச்சி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பேரவத் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு முதல் கேரள மாநிலம் நிலம்பூர் வரை கூடலூர் வழியாக ரயில் பாதையை விரிவுப்படுத்த வேண்டும். மேலும், சிறியூர் வழியாக சத்தியமங்கலம் வரை சாலை அமைக்க வேண்டும் என்பது.
திமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில் திமுகவை சேர்ந்த க.ராமசந்திரன் 2006 மற்றும் 2011 மற்றும் 2016-ல் மு.திராவிடமணி வெற்றி பெற்றனர். இந்நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 15 ஆண்டுகளாக இருந்தும் தொகுதியின் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்கவில்லை என்கிறார், அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன்.
அவர் கூறும் போது, "கூடலூர் தொகுதியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக திமுகவை சேர்ந்தவர்கள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் எந்த பணியையும் செய்யவில்லை. அதிமுகவை சேர்ந்த மில்லர் எம்எல்ஏவாக இருந்த போது தான் கூடலூரில் கல்லூரி கொண்டு வரப்பட்டது. இந்த கல்லூரி மூலம் ஆண்டுக்கு சுமார் 1,500 பட்டதாரிகள் உருவாகிறார்கள்.
இந்த தொகுதி மக்களின் கல்வி கனவு நிறைவேறியுள்ளது. பிரிவு 17 நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை. வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளன. இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு, பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்பதால், அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியை புறக்கணித்ததாக கூறுகிறார், திமுக வேட்பாளர் எஸ்.காசிலிங்கம்.
இம்முறை திமுக அரசு அமையும் பட்சத்தில் கூடலூர் தொகுதிக்கு தேவையானவற்றை பெறமுடியும். கூடலூர் தொகுதிக்கானவற்றை தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார், காசிலிங்கம்.
அவர் கூறும் போது, "தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் டான்டீ தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நிரந்தர குடியிருப்பு, கூடலூரில் உள்ள மின்சாரம் பற்றாக்குறை, குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். வனவிலங்குகள் மூலம் மனிதர்களுக்கு வரும் பாதிப்பை தடுக்க நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடலூரில் உள்ள வாகன நெரிசலை தவிர்க்க சிறந்த முறையில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்படும" என்றார்.
இந்நிலையில், திமுகவின் வாக்கு வங்கியாக கருதப்படும் தாயகம் திரும்பிய தமிழர்களின் பிரச்சினைகள் 50 ஆண்டுகளாக இதுவரை தீர்க்கப்படாததால், அம்மக்கள் திமுகவை கைவிட தயாராகி வருகின்றனர் என்கிறார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கேதீஸ்வரன்.
அவர் கூறும் போது, "நீலகிரியில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் நலனுக்காக 1968-ம் ஆண்டு குன்னூர், கூடலூர், சேரம்பாடி, சேரங்கோடு, கோத்தகிரி, நெல்லியாளம், நடுவட்டம் , கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய பகுதிகளில் சுமார் 4,431.91 ஹெக்டர் பரப்பளவில் டான்டீ அமைக்கப்பட்டது.
இதில் 5,600 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் சுமார் 800 தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது தற்காலிக பணியாளர்களை டான்டீ நிர்வாகம் பணியிலிருந்து நிறுத்தி விட்டது.
இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற உடனே வீடுகளை காலி செய்ய நிர்வாகம் வற்புறுத்தி வருகிறது. இதனால் எங்கு செல்வதென புரியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். மேலும், பணியின் போது வனவிலங்குகள் மோதலில் சிக்கி பல பேர் உயிரிழந்தது, பல பேர் படுகாயம் அடைந்ததுள்ளனர். பல ஆண்டு காலமாக இங்கு பணிபுரிந்து டான்டீயை உருவாக்கிய தொழிலாளர்களுக்கு இங்கு சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லை" என்றார்.
கூடலூர் தொகுதியில் திமுகவின் வாக்குவங்கியான தாயகம் திரும்பிய தமிழர்களை வேட்பாளராக அறிவித்துள்ளதால், இம்முறை திமுக தொகுதியை தக்க வைக்குமா? தாரைவார்க்குமா?
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago