அதிமுக ஆட்சியில் பெண் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை; பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்- உதயநிதி பேச்சு

By ந.சரவணன்

அதிமுக ஆட்சியில் பெண் காவல் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாதபோது சாதாரணப் பெண்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆம்பூர் தொகுதியின் திமுக வேட்பாளர் வில்வநாதனை ஆதரித்து ஆம்பூர் புறவழிச் சாலையில் அவர் பேசியதாவது:

முதல்வர் பழனிசாமியை மக்கள் வாக்களித்துத் தேர்வு செய்யவில்லை. சசிகலா தயவால் முதல்வர் பதவிக்கு வந்தவர் பழனிசாமி. தமிழக முதல்வராக மக்களால் தேர்வு செய்யப்பட்டவராக இருந்தால் மக்களின் நிலை அவருக்குப் புரியும். சசிகலாவால் பதவிக்கு வந்தவர், தற்போது அவரையே ஓரங்கட்டிவிட்டார்.

புதிய கல்விக் கொள்கையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு என்றால் மாணவர்களின் நிலையை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய தமிழக அரசு, மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது. பாஜக அரசின் அடிமைகளாக பழனிசாமியும், பன்னீர்செல்வமும் செயல்படுகின்றனர்.

அதிமுகவுக்காக வாக்கு கேட்டு வருவோர்களிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி இறந்தார்? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அவ்வாறு கேட்டால் மீண்டும் அவர்கள் வாக்கு கேட்டு, தொகுதிக்குள் வரவே மாட்டார்கள். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது.

காவல்துறையில் உயர் பதவியில் உள்ள பெண் அதிகாரிகளுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமையால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாட்சி விவகாரத்தில் அதிமுகவினர் தொடர்பில் இருப்பதை பொதுமக்கள் நன்கு அறிவார்கள். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டுமென்றால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டும். அதற்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டால் திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். குடும்பத் தலைவிக்கு ஆண்டுதோறும் ரூ.12 ஆயிரம் உரிமைத்தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் தமிழகத்தில் குடும்ப அட்டையுள்ள 2 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள்.

ஆம்பூர் தொகுதியில் சாலை வசதி, மின் விளக்கு, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பொது சுகாதாரம், தோல் தொழிற்பூங்கா உள்ளிட்டவை திமுக ஆட்சிக்கு வந்த உடன் நிறைவேற்றப்படும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ளன.

திமுக ஆட்சிக் காலத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.500 ஆக இருந்தது. தற்போது ரூ.800-க்கு மேல் சென்றுவிட்டது. பெட்ரோல், டீசல் விலையால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும். அதற்குப் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.

அதேபோல, வாணியம்பாடி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் முகமது நஹீம், ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தேவராஜ், திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் நல்லதம்பி ஆகியோரை ஆதரித்தும் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE