பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்கள் ஈடுபடுவது தடை செய்யப்பட்டும் அதில் ஈடுபடுவோர் மரணமடைவது தடுக்கப்படவில்லை. நிவாரணமும், கைது நடவடிக்கையும் இல்லை என நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில், இதுபோன்ற மரணங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களைப் பொறுப்பாக்கி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாதாள சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதைத் தடை செய்யவும், சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாதாள சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் நபர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியமர்த்தப்படுகிறார்களா என அறிக்கை அளிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பல்வேறு மாநகராட்சி, நகராட்சிகளிடம் விவரங்களைக் கோரியுள்ளதாகவும், அந்த விவரங்களைத் தொகுத்து அறிக்கையாகத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாதாள சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி பலியாவது தொடர்பான சம்பவங்கள் குறித்த வழக்குகளில் எந்தக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், பலியானவர்களின் உறவினர்கள் பலருக்கு இழப்பீடுகள் வழங்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2021-ம் ஆண்டு பிப்ரவரி வரை, ஆறு மரணங்கள் நடந்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த விசாரணையின்போது பிறப்பித்த உத்தரவின்படி அறிக்கை தாக்கல் செய்யாத அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 2017-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யச் செய்யும் மனிதத் தன்மையற்ற செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.
பாதாள சாக்கடைகளிலும், கழிவுநீர் தொட்டிகளிலும் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவதால் ஏற்படும் மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களைப் பொறுப்பாக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், இதுபோல ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் மீது குற்ற வழக்குத் தொடரப்பட்டு, உடனடி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்யும் நடைமுறையைத் தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும், மரண சம்பவங்கள் தொடர்பான வழக்குகளின் புலன் விசாரணையைத் துரிதப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யும்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
மேலும், பலியான தொழிலாளர்களின் உறவினர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கியதை உறுதி செய்யவும், அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago