ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான 60% இடங்கள் நிரப்பப்படவில்லை: கி.வீரமணி கண்டனம்

By செய்திப்பிரிவு

ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான 60% இடங்கள் நிரப்பப்படாததற்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (மார்ச் 16) வெளியிட்ட அறிக்கை:

"நம் நாட்டில் மேலாண்மைக்கான படிப்புகள், ஆட்சியிலும், மற்ற தொழில் துறைகளிலும் சிறந்த ஆளுமைக்கான அறிவாளிகளையும், திறனாளிகளையும் உருவாக்கவே அரசுப் பணத்தில் ஐஐஎம் என்ற ஆளுமைக்கான பயிற்றுக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

அரசியலமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளின்படி, சமூக நீதி என்பது சட்டப்படி, காலங்காலமாக சமூக அநீதிக்கு ஆளாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களான பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசின் ஆணைப்படியே முறையே 7.5 சதவிகிதம், 15 சதவிகிதம், 27 சதவிகிதமும் ஒதுக்கப்படல் வேண்டும்.

பிச்சையோ, சலுகையோ அல்ல - உரிமை!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 93ஆவது திருத்தச் சட்டப்படி இது அவர்களுக்குப் பிச்சையோ, சலுகையோ அல்ல! உரிமை!

ஆனால், நடைமுறையில், சமூக நீதி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பாஜக ஆட்சியில், மோடி ஆட்சியில் தொடர்ந்து கடந்த ஏழு ஆண்டுகளாக மறுக்கப்பட்டு, அனைத்து இடங்களும் ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக, உயர் சாதியினரே பகற்கொள்ளையாய் அனுபவிப்பது அல்லது நிரப்பப்படாமல் காலியாகவே வைத்திருப்பது என்ற நடைமுறை சமூக நீதியைச் சவக்குழியில் தள்ளுகிறது!

இன்று ஆங்கில 'தி இந்து' நாளேட்டில் வெளிவந்துள்ள தகவல்கள் பேரதிர்ச்சியைத் தருகின்றன! ஐஐஎம் என்ற உயர்கல்வி நிறுவனம், 60 சதவிகித இடங்கள் பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படாமல் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது!

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மக்களவையில் எழுத்து மூலம் ஒரு கேள்விக்கு அளித்துள்ள விடைகள் மூலம் இவை வெளிச்சத்திற்கு வருகின்றன!

உயர் சாதியினருக்கே தாரை வார்த்து விடுவார்கள்!

எஸ்.சி., ஓபிசி சமூகத்தவர்களுக்கு நிரப்பப்படாத இடங்கள் 60 சதவிகிதம் என்றால், எஸ்.டி என்ற பழங்குடி மக்களுக்குச் சட்டப்படி தர வேண்டிய இடங்களை 80 விழுக்காடு தராமல், காலியாகவே வைத்துள்ளனர்! மொத்தம் 24 இடங்கள் எஸ்.டி. மாணவர்களுக்கு உள்ளதில், வெறும் 5 இடங்களை மட்டும் நிரப்பி, எஞ்சிய 19 இடங்களை நிரப்பாமல் விட்டு சத்தமில்லாமல் உயர் சாதியினருக்கே தாரை வார்த்து விடுவார்கள்! மக்கள் வரிப் பணத்தில்தானே இவை நடக்கின்றன?

பகற்கொள்ளைக்குப் பாதுகாப்புச் சுவர்

இதற்கு இணையான ஐஐடி என்ற மற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதியுள்ள இந்த நிறுவனங்களில் இப்போது இந்த இட ஒதுக்கீட்டினை எஸ்.டி., எஸ்.சி., ஓபிசி என்ற ஒடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கப்படுவதை அதாவது, இட ஒதுக்கீட்டு முறையை, ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களுக்கு விதி விலக்குத் தரவேண்டும் என்று பரிந்துரை நாடகம் நடத்தி ரத்து செய்து, தங்களது பகற்கொள்ளைக்குப் பாதுகாப்புச் சுவர் கட்டத் திட்டமிடுகிறார்கள்!

இதனை, அனைத்து சமூக நீதி அமைப்புகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் கூட்டாக இணைந்து குரல் கொடுத்துத் தடுக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டிவிட வேண்டுமென்று ஆலாய்ப் பறக்கிறார்கள்

ஆர்எஸ்எஸ் கொள்கை, இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை. அந்த 'அஜெண்டாவைத்தான்' ஆட்சியிலிருக்கும்போதே இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டிவிட வேண்டுமென்று ஆலாய்ப் பறக்கிறார்கள்; தங்களுக்குள்ள 'ரோட் ரோலர் மெஜாரிட்டியைப்' பயன்படுத்தியும் எதிர்க்கட்சியினர் பலரை விலைக்கு வாங்கியும்' அல்லது அச்சுறுத்தியும் துணிந்து செயல்படுகின்றனர்! உச்ச நீதிமன்றத்தின் உயர்சாதி ஆதிக்கம் இதற்குப் பெரிதும் துணை போவது கொடுமையிலும் கொடுமை!

சமூக நீதிக் கொடி தலைதாழாது பறக்க தமிழ்நாடு - இந்தியாவுக்கே வழிகாட்டட்டும்!

நடைபெறும் 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் மூலம் பெறவிருக்கும் மரண அடி கொடுத்தால்தான் அவர்கள் சற்று யோசிக்கக் கூடும். எனவே, தேர்தலைக் களமாகக் கொண்டு, பெரியாரைப் பேராயுதமாகவும், போராயுதமாகவும் கொண்டு, சமூக நீதிக் கொடி தலைதாழாது பறக்க தமிழ்நாடு, இந்தியாவுக்கே வழிகாட்டட்டும்!

ஏப்ரல் 6ஆம் தேதிதான் திருப்புமுனையாக அமைந்து, திசை தடுமாறுவோருக்கும் திருட்டுத்தனங்களால் சமூக நீதியைப் பறிப்போருக்கும் தக்க பாடம் புகட்டும் என்பது உறுதியிலும் உறுதி!".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்